மாணவர்கள் தேர்வு நேரங்களில் உடல்நலத்தைப் பேணுவது எப்படி?

தேர்வு நேரங்களில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.
மாணவர்கள் தேர்வு நேரங்களில் உடல்நலத்தைப் பேணுவது எப்படி?


மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பது மிகவும் முக்கியமானது. படிப்பதை நினைவில் வைத்துக்கொள்ள உணவு பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மருத்துவர்களின் பரிந்துரைப்படி, தேர்வு நேரங்களில் மாணவர்கள் உணவில் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை இங்கு காணலாம்.

ஆரோக்கியமான உணவு

மூளை திறமையாக வேலை செய்ய ஆற்றல் தேவை. இதற்காக நீங்கள் ஆரோக்கியமான, சீரான உணவை எடுத்துக்கொள்வது அவசியம். மனநலத்துக்கு வழிவகுக்கும் உணவுகளும் அதில் அடங்கி இருக்க வேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள், முளைகட்டிய தானியங்கள், முட்டை, கோழி, மீன் மற்றும் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகள், ஆரோக்கியமான தானியங்கள், முழு கோதுமைப் பொருட்கள் போன்றவை இதில் அடங்கும்.

சிலருக்கு என்னதான் படித்தாலும் நினைவில் இருக்காது. அப்படி இருப்பவர்கள் நினைவுத்திறனை மேம்படுத்தக்கூடிய உணவுகளை உண்ணுவதன் மூலமாக பிரச்னையை ஓரளவுக்கு சரிசெய்ய முடியும்.

துரித உணவுகளைத் தவிருங்கள்

நினைவுத்திறனை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வதோடு, அதோடு தொடர்புடைய நீர் ஆகாரங்களையும் எடுத்துக்கொள்ளலாம். பாதாம் அக்ரூட் பருப்புகள், மீன், ஆளி விதை, வாழைப்பழம், பட்டாணி, கீரை, ப்ரோக்கோலி போன்றவைகளை உண்ணலாம். ஜீரணிக்க கூடுதல் நேரமும் சக்தியும் தேவைப்படும் அதிக கொழுப்புள்ள மற்றும் துரித உணவுகளை தவிர்க்கவும்.

குளிர்பானங்களுக்கு பதிலாக மில்க் ஷேக்குகள், சூடான சூப்கள், எலுமிச்சைப் பழச்சாறு, லஸ்ஸி, இளநீர் போன்ற ஆரோக்கியமான பானங்களை குடிக்கலாம். ஒன்று அல்லது இரண்டு கப் காபி அல்லது தேநீர், டார்க் சாக்லேட் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் காஃபின் உங்களை விழிப்புடன், சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

அதே நேரத்தில் காபி, தேநீர் ஆகியவற்றை தொடர்ந்து அருந்துவதை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். 

பல மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் அவசரத்திலோ, தூக்கம் வரும் என்றோ காலை உணவைத் தவிர்க்கின்றனர். இது முற்றிலும் தவறானது. காலை உணவைத் தவிர்த்தல் பின்னாளில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். 

நொறுக்குத் தீனிகள் வேண்டாம்

உணவு நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் நொறுக்குத் தீனிகளை உண்ணாமல், புரோட்டீன் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். பழங்கள், வேர்க்கடலை, பயறு வகைகள் உள்ளிட்டவற்றை சாப்பிடுவது உடலுக்கு சக்தியை அளிக்கும். குறிப்பாக இரவு அதிக நேரம் விழித்திருந்து படிக்கும்போது தேவையான ஆற்றலை வழங்கும்.

தூக்கம் அவசியம்

உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ, தூக்கமும் அவ்வளவு அவசியம். குறைந்தது 6-8 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கமின்மை சிலருக்கு அன்றாட வேலைகளை பாதிக்கும். நல்ல தூக்கம் உங்களது மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.

எனவே படிக்கும்போது கூட சோர்வடையும் நேரத்தில் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். தேர்வு நேரத்தில் குறைந்தது 6 மணி நேரமாவது தூக்கம் வேண்டும். சரியான நேரத்தில் தூங்கும்போது உங்களுடைய கற்றல் திறனும் மேம்படும். 

மின்னணு சாதனங்களை தவிர்க்கவும்

டிவி, மொபைல், கேம்ஸ் போன்றவைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தற்போது சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் அதிக நேரம் செலவளிக்கின்றனர். ஒருகட்டத்தில் அதற்கு மாணவர்கள் அடிமையாகும் போது, மாணவர்களின் கற்றல் திறன் பெரிதும் பாதிக்கிறது. எனவே, படிக்கும் சமயத்தில் மொபைல் உபயோகிப்பதை அறவே தவிர்த்து விடுங்கள். உங்களை மகிழ்ச்சியாகவும், உந்துதலாகவும் வைத்திருக்க நண்பர்களுடன் விளையாடுவது  போன்ற சில பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் சிறிது நேரம் ஈடுபடலாம். 

மனநலம் அவசியம்

உணவு முறை ஒருபக்கம் இருந்தாலும், மன நலத்தை பேணுவதும் அவசியம். தேர்வு குறித்த மனப்பதற்றத்தை தவிர்க்க வேண்டும். பயத்தில் பாடங்களை படிக்கும்போது அது நினைவில் இருக்காது. எனவே, பயமின்றி தெளிவான மனநிலையில் படிப்பது சிறந்தது. எனவே, தேர்வு சமயங்களில் பயம் எதுவுமின்றி, உங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு படியுங்கள்; தேர்வில் வெற்றி பெறுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com