உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகளை சுவாரஸ்யமாக்க 5 வழிகள்

குழந்தைகளுக்கு தினமும் இரவில் கதைகள் சொல்லி வளர்ப்பது நல்ல பழக்கம்.
உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகளை சுவாரஸ்யமாக்க 5 வழிகள்

குழந்தைகளுக்கு தினமும் இரவில் கதைகள் சொல்லி வளர்ப்பது நல்ல பழக்கம். நம் முன்னோர்களிடம் அந்தப் பழக்கம் இருந்தது. கதை சொல்லிகள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த காலக்கட்டங்கள் உண்டு. ஆனால் அண்மைக் காலங்களில் மொபைல் ஃபோன் வருகைக்குப் பிறகு கதை சொல்லும் பழக்கம் குறைந்து கிட்டத்தட்ட காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகளை சாப்பிட வைப்பது முதல் தூங்கச் செய்வது வரை எல்லாம் அலைபேசி மயமாகிவிட்டது. யூட்யூபில் உள்ள கதை கேட்டு குழந்தைகள் மொபைல் ஃபோனுக்கு அடிமையாகிவிடுவதை விட நீங்களே உங்கள் குரலில் அன்புடனும் அரவணைப்புடனும் சொல்லும் கதைகளுக்கு ஆழம் அதிகம். மேலும் உங்கள் குழந்தையுடனான உங்கள் உறவை வளர்ப்பதற்கும் இதுவொரு பொன்னான வாய்ப்பாக அமையும். வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நாள் முழுவதும் செலவழிக்க நேரம் கிடைக்காத நிலையில், இரவில் கதை சொல்லித் தூங்க வைப்பது சிறப்பான நேரத்தை அவர்களுடன் செலவழிக்க முடியும்.

உளவியலாளர்களின் கூற்றுப்படி, படுக்கச் செல்லும் நேரத்தில் குழந்தைகளிடம் கதைகள் சொல்லும் போது, குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இடையில் நல்ல பிணைப்பு உருவாகும் என்கின்றனர். மேலும் இதனால் குழ்ந்தைகளின் கற்பனைத் திறன் பெறுகுவதுடன் ஆக்கபூர்வமான சிந்தனைக்கு வழிவகுக்கும். அவர்கள் வளர்ந்தபின் அறிவாளியாகவும், நுண்நோக்கிப் பார்க்குத் திறன் உடையவர்களாகவும், சிறந்த பேச்சாளர்களாகவும் இருப்பார்கள். கதைகள் வழியே அவர்கள் கற்றல் திறன் அதிகரிப்பதுடன் வாழ்க்கையைப் பற்றிய புரிதலும் ஏற்படும்.

இருப்பினும், பல பெற்றோர்கள், குறிப்பாக இந்தக் காலத்து இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான இரவு நேரக் கதைகளை சுவாரஸ்யமாக உருவாக்குவது எப்படி என்பதைப் புரிந்துக் கொள்ள போராடுகிறார்கள். இதற்கான சிறந்த  ஐந்து வழிகளைப் பரிந்துரைக்கிறார் இக்கட்டுரையாளரான அபுர்வா பூட்டா.

குழந்தைகளுடன் பேசிப் பழகுங்கள்

நாள் முழுவதும் நீங்கள் உங்கள் குழந்தைகளிடமிருந்து விலகி இருக்கும்போது, ​​அவர்கள் தூங்குவதற்கு முன்னான நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் அவர்களிடம் கொஞ்சிப் பேசிப் பழகுவதுதான். ஒரு பெற்றோராக, அவர்களுடைய பள்ளி மற்றும் ஒட்டுமொத்தமாக அந்த நாள் எப்படி இருந்தது, இன்று அவர்கள் கற்றுக் கொண்ட புதிய விஷயங்கள் என்ன என்பதைப்பற்றி அவர்களுடன் விவாதிப்பது ஒரு பழக்கமாக இருக்க வேண்டும். அடிப்படையில், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லுங்கள். கதை சொல்லும்போது அவர்களுக்குப் பிடித்த வகையில் சொல்வதும் முக்கியம். இது உங்கள் குழந்தையை நன்கு புரிந்து கொள்ள உதவும். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஒரு புதிய அனுபவத் திறப்பாக கதை சொல்லும் நேரம் மாறும். அவர்கள் என்ன மாதிரியான கதைகளைக் கேட்க விரும்புகிறார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள், பின்னர் அவர்கள் விரும்பும் கதைகளை அழகாக வர்ணித்து விவரித்துக் கூறுங்கள்.

கதாபாத்திரமாக மாறுங்கள்

உங்கள் குழந்தைகள் உங்கள் கதைகளை ரசிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் நீங்கள் அக்கதையின் கதாபாத்திரமாகவே மாற வேண்டும். வெறும் வாசிப்பு கதை சொல்லுதலை அலுப்பாக்கி சலிப்படையச் செய்கிறது. நீங்கள் சொல்லும் கதையில் முக்கிய கதாபாத்திரங்களை நீங்களாக மாறும் முயற்சிகளை எடுத்துக் கொண்டால், உங்கள் குழந்தை கேட்பதிலும் கவனம் செலுத்துவதிலும் அதிக அக்கறை எடுக்கும், இதன் விளைவாக அவர்கள் உங்கள் கதைகளை ரசிக்கத் தொடங்குவார்கள், மேலும் அவர்களுக்குத் ஒரு தெளிவான கற்பனை வளரும்.

அவர்களின் நண்பராகுங்கள்

உங்கள் குழந்தையுடன் ஆரோக்கியமான உறவை உருவாக்க விரும்பினால், அவர்களுடன்  இணக்கமாக இருப்பது மிகவும் முக்கியம். உங்களையே குழந்தை போல மாற்றிக் கொள்ளுங்கள், அவர்களைப் போன்ற குழந்தையாகுங்கள். அவர்கள் நம்பக் கூடிய ஒரு நண்பரைப் போல நடந்து கொள்ளுங்கள். இதனால் அவர்கள் தூங்குவதற்கு முன்பு,  நீங்கள் சொல்லும் எந்தவொரு கதையையும் ஆழ்ந்து ரசித்து மகிழ்வார்கள்.

கதை முடிந்தவுடன் விவாதம் முக்கியம்

கதை புத்தகத்தில் வருவது போல் கதை முடிவடைந்தவுடன் புத்தகத்தை மூடி வைப்பது போல,  உங்கள் இரவு நேரக் கதை சொல்லல் முடிவடையக் கூடாது. கதையைப் பற்றி உங்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடினால் மட்டுமே அக்கதைகளின் உண்மையான நோக்கத்தை அடைய முடியும். நீங்கள் சொன்ன கதையைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள், அதிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டவை என்னவென்று கேளுங்கள். கதை சொல்லலின் நோக்கம் உங்கள் குழந்தைகள் நேர்மை, பணிவு, தயவு போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள உதவும். அதற்கான சிறந்த வழி, கதை வடிவத்தில் சரி எது தவறு எது என்பதற்கான வித்தியாசத்தை அவர்களுக்குக் கற்பிப்பதாகும்.

படிப்பதன் முக்கியத்துவம் கொடுங்கள்

கடைசியாக, வாசிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். கதைகளில் உள்ள எடுத்துக்காட்டுகள் மூலம், அறிவைப் பெறுவதும், வாசிக்கும் பழக்கத்தின் மூலம் தன்னைப் பயிற்றுவிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள். வாழ்க்கையில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் அளவுக்கு புத்திசாலித்தனமான ஒரு புத்திஜீவியின் பண்புகளை நீங்கள் அவர்களுக்கு முன்னிலைப்படுத்துங்கள். கதையின் மூலமாக விரியும் ஒரு அற்புத உலகத்தின் அத்தனை மாயங்களையும் அவர்களுக்கு உணர்த்துங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com