குழந்தைகளுக்கு உடல் பருமனைத் தடுக்க என்ன செய்யலாம்?

குழந்தைகள் வயதுக்கு மீறி உடல் பருமனுடன்  காணப்படுவது அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பத்தினால் உடல் இயக்கம் இல்லாமை, தவறான உணவுப் பழக்க முறைகள் உள்ளிட்டவை காரணங்களாக கூறப்படுகின்றன.
குழந்தைகளுக்கு உடல் பருமனைத் தடுக்க என்ன செய்யலாம்?


குழந்தைகள் வயதுக்கு மீறி உடல் பருமனுடன்  காணப்படுவது தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பத்தினால் உடல் இயக்கம் இல்லாமை, தவறான உணவுப்பழக்க முறைகள் உள்ளிட்டவை காரணங்களாகக் கூறப்படுகின்றன. சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் கொழு கொழு என்று இருப்பதுதான் சரி என்று நினைக்கின்றனர். அதே நேரத்தில், அளவுக்கு மீறி பருமனாக இருப்பது பிற்காலத்தில் அவர்களின் உடல்நலத்தில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். 

உடல் பருமனால் ஏற்படும் பிரச்னைகள்:

குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரித்தலினால் உடலில் அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்னைகள், சர்க்கரை நோய், ஆஸ்துமா, வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

குழந்தைகளுக்கு உடல் பருமன் எதனால் ஏற்படுகிறது?

உடல் இயக்கம் இல்லாமை, மரபியல் குறைபாடுகள், தவறான உணவுப் பழக்க முறைகள், துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, ஹார்மோன் உள்ளிட்ட உடலியல் பிரச்னைகள், அதிக நேரம் டிவி பார்ப்பது, விளையாட்டு இல்லாதது, அதிகம் இனிப்பு சாப்பிடுவது என பல காரணங்கள் உள்ளன. 

எவ்வாறு தடுக்கலாம்?

இதனைத் தடுக்க வேண்டுமெனில் முதலில் உணவு பழக்கமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும். உணவில் அதிகளவு காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் பருமன் அதிகம் இருக்கும் குழந்தைகளுக்கு கொள்ளு, சோளம் உள்ளிட்ட தானியங்களில் தயாரித்த உணவுகளை கொடுக்கலாம். குழந்தையின் உடலுக்கு ஒத்துப் போகக் கூடிய உடல் எடையை குறைக்கக் கூடிய உணவுகளை வழங்கலாம். குழந்தையின் வயதுக்கேற்பவும் சாப்பிடும் அளவை நிர்ணயிக்க வேண்டும். முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். 

முக்கியமாக இனிப்பு உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடாமல் இடைவெளி விட்டு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக உடற்பயிற்சி.. கணினி, விடியோ கேம்ஸ், செல்போன் போன்றவற்றில் நேரத்தை செலவிடுவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். வெளியே சென்று விளையாடுவதற்கு குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகள் ஓடியாடி விளையாடும்போது மட்டுமே அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகிறது. 

குழந்தைகளுக்கு போதுமான தூக்கமும் அவசியம். குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் குழந்தைகள் தூங்குகின்றனவா என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அதுபோன்று, மன அழுத்தத்தால் கூட குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படலாம் என்று கூறுகின்றனர். எனவே, குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிப்பது அவசியம். முடிந்தவரை அவர்களிடம் நேர்மறையான எண்ணங்களை விதைத்து அவர்கள் அனைத்திலும் சிறந்து விளங்க பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com