அதிக மன அழுத்தம், ஆயுள்காலத்தை குறைக்கும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

அதிக மன அழுத்தம் மனிதனின் ஆயுள்காலத்தை குறைக்கும் முக்கியக் காரணி என்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். 
அதிக மன அழுத்தம், ஆயுள்காலத்தை குறைக்கும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

அதிக மன அழுத்தம் மனிதனின் ஆயுள்காலத்தை குறைக்கும் முக்கியக் காரணி என்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். 

ஒருவரின் பாரம்பரிய வாழ்க்கைமுறை, வாழ்வியல் பிரச்னைகள் போன்ற காரணிகளால் ஏற்படும் மன அழுத்தம், ஆயுள்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

'பி.எம்.ஜே ஓப்பன்' இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, 1987-2007 கால கட்டத்தில் 25 - 74 வயதுக்குட்பட்டோரிடம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும் கடந்த 2014 ஆம் ஆண்டு வரை அவர்களின் இறப்பு விகிதத்தின் அடிப்படையிலும் உறுதி செய்யப்பட்டது.

வயது, பாலினம் மற்றும் கல்வி போன்ற சில சமூகப் பிரச்னைகளால் ஆயுள்காலம் மதிப்பிடப்படுகிறது. இந்த காரணிகளுடன் மன அழுத்தமும் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காரணியின் விளைவுகளும் ஒப்பிடப்பட்டதாக  பின்லாந்தில் உள்ள தேசிய சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் டாமி ஹர்கனென் கூறினார்.

30 வயதான ஆண்களின் ஆயுள்காலம் குறைவதற்கு புகைபிடித்தல் மற்றும் நீரிழிவு நோய் காரணங்களாக இருந்தன. புகைபிடிப்பதன் மூலமாக அவர்களின் ஆயுள்காலம் சராசரியாக 6.6 ஆண்டுகள் குறைகிறது, அதேபோன்று நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் ஆயுள்காலம் 6.5 ஆண்டுகள் குறைகிறது. ஆனால், மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் இல்லாவிட்டாலும் கடும் மன அழுத்தத்தில் இருந்தால் ஆயுள்காலம் 2.8 ஆண்டுகள் குறைகிறது என்றும் உடற்பயிற்சி செய்யாதோரின் ஆயுள்காலம் 2.4 ஆண்டுகள் குறைகிறது என்பதையும் ஆய்வு எடுத்துரைக்கிறது. மாறாக, ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது ஆயுள்காலத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெண்களைப் பொறுத்தவரையில், 30 வயது பெண்களுக்கு புகைபிடித்தலினால் ஆயுள்காலம் 5.5 ஆண்டுகள், நீரிழிவு நோயால் 5.3 ஆண்டுகள், கடுமையான மன அழுத்தத்தினால் 2.3 ஆண்டுகள் குறைகிறது. இதன் மூலமாக ஆண்களின் மற்றும் பெண்களின் ஆயுள்காலம் இடையே சிறிது வேறுபாடுகள் இருப்பது தெரிகிறது. 

புகைபிடித்தல், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சியின்மை ஆகியவற்றுடன் மன அழுத்தமும் ஆயுள்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று இந்த ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே, முறையான உணவு பழக்கத்துடன் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com