Enable Javscript for better performance
பாட்டு கேட்பது இதயத்திற்கு நல்லது: ஆய்வில் முடிவு Listening to music 30 mins a day good for heart- Dinamani

சுடச்சுட

    

    தினமும் 30 நிமிடம் பாட்டு கேளுங்கள்..!

    By DIN  |   Published on : 19th March 2020 05:53 PM  |   அ+அ அ-   |    |  

    music

     

    ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் இசையைக் கேட்பது இதயத்திற்கு நல்லது என்று ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

    என்ன மோசமான மனநிலையில் இருந்தாலும் பிடித்த பாடல்களை கேட்டால் மனநிலை ஓரளவுக்கு சரி ஆகிவிடும் என்று கூறுபவர்கள் பலர். அவ்வாறு இந்த உலகில் இசைக்கு அடிமையானவர்கள் ஏராளம். 

    இந்நிலையில் இசை குறித்து மேற்கொண்ட ஆய்வில், பல ஆச்சரியத்தக்க தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதில் குறிப்பாக முதல்முறை மாரடைப்பு வந்தவர்கள் தொடர்ந்து தினமும் இசையை கேட்கும் பட்சத்தில், அவர்களுக்கு அடுத்து மாரடைப்பு வராது என்று தெரிய வந்துள்ளது. மேலும் எந்த ஒரு நோயையும் அணுகக்கூடிய எளிய மருந்து இசை என்றும் அதனால் நோயாளிகள் அனைவருக்கும் 'மியூசிக் தெரபி' வழங்க வேண்டும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். 

    ஏனென்றால் 'மியூசிக் தெரபி' -க்கு பெரிதாக முயற்சி எடுக்கத் தேவையில்லை. எளிதானது, மலிவானது. நோயாளிகளுக்கு சிகிச்சையின்போதும், அவர்கள் வீட்டில் ஓய்வு எடுக்கும்போது மனதுக்குப் பிடித்த இசையை கேட்கச் செய்யலாம் என்றும் இதன் மூலமாக மன மற்றும் உடல் ரீதியாக அவர்களது நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர். 

    முன்னதாக, செர்பியாவில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்ட 350 நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேற்குறிப்பிட்ட முடிவுகள் உறுதி ஆகியுள்ளன. 

    மியூசிக் தெரபி சிகிச்சையைப் பெறும் நோயாளிகள் முதலில் தங்கள் உடல்நிலை, மனநிலைக்கு ஏற்ற இசையைத் தேர்ந்தெடுக்கின்றனர். தினமும் 30 நிமிடங்கள் ஒரே விதமான இசையை கேட்டனர். சுமார் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நேர்மறையான முடிவுகள் பெறப்பட்டன. 

    நோயாளிகள் கவலை, வலி​ குறைந்ததாக உணர்ந்ததுடன், எளிமையாக சிகிச்சையை பெற்றதாக உணர்ந்தனர். மருத்துவ சிகிச்சையை விட பலருக்கு இசை சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும், ஏற்கனவே ஒருமுறை, இரு முறை மாரடைப்பு வந்தவர்கள் பெரும்பாலானோருக்கு அடுத்த முறை மாரடைப்பு வரவில்லை.

    ஒருவரின் மன அழுத்தத்தை குறைக்க இசையே சிறந்த வழி என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    எனவே, தினமும் சிறிது நேரம் இசையை ரசிப்பதன் மூலமாக உங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai