'வேலை பாதுகாப்பின்மை இளைஞர்களிடையே பதற்றம், மனச்சோர்வை உண்டாக்குகிறது'
By DIN | Published On : 12th November 2020 05:10 PM | Last Updated : 12th November 2020 05:16 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
கரோனா காலத்தில் வேலையில் பாதுகாப்பின்மை (வேலையில் நிச்சயமற்ற தன்மை) இளைஞர்களிடையே பதற்றம், மனச்சோர்வை உருவாக்குவதாக ஆய்வொன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 18 முதல் 26 வயது வரையிலான கிட்டத்தட்ட 5,000 இளைஞர்களிடையே கடந்த மார்ச் 2020 முதல் வேலையை இழந்த அல்லது வேலையை இழக்கும் சூழ்நிலையில் உள்ளவர்களின் அனுபவங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், வேலையை இழந்தவர்களைக் காட்டிலும் தற்போது பணியில் இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது. வேலையில் நிச்சயமற்ற தன்மையே இதற்கு காரணம் என்றும் அடுத்த நான்கு வாரங்களில் வேலை இழப்பை எதிர்பார்க்கும் இளைஞர்கள் இந்த நிலையில் உள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுநோய் இளைஞர்களுக்கு பரவலான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது இந்த ஆய்விலிருந்து தெளிவாகிறது என டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சமூகப் பணிக்கான உதவிப் பேராசிரியரும் முன்னணி ஆசிரியருமான கைல் டி கன்சன் தெரிவித்தார்.
அதேபோன்று இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொருளாதார வீழ்ச்சியை சரி செய்து பொதுக்கொள்கையை நிவர்த்தி செய்வது கட்டாயமாகும் என்றும் தெரிவித்தார்.
'அடாலஸண்ட் ஹெல்த்(Adolescent Health) ஆன்லைல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், மார்ச் 13 ஆம் தேதி தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, அமெரிக்க இளைஞர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் வேலை இழப்பை சந்தித்ததாகவும், கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வேலையை இழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இளம் வயதினரின் மாதிரியில் கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகள் பொதுவானவை என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கணக்கெடுப்புக்கு முந்தைய ஏழு நாட்களில், 75 சதவீதம் பேர் பதற்ற விளிம்பில் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
68 சதவீதம் பேர் கவலைப்படுவதை நிறுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லை என்றும் 67 சதவீதம் பேர் வேறு செயல்களில் ஈடுபட சிறிதளவு ஆர்வம் இருப்பதாகவும், 64 சதவீதம் சதவிகிதம் பேர் மனச்சோர்வு அல்லது நம்பிக்கையற்றவர்களாக இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் உள்ளது.
எனவே இம்மாதிரியான சூழலில் குறைந்தபட்ச வேலை பாதிப்பை ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என்றும் இளைஞர்களின் மனநல ஆரோக்கியத்தில் மனநல வல்லுநர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
'வேலை இழப்பு மற்றும் மோசமான மன ஆரோக்கியம் ஆகியவற்றின் விளைவாக ஏற்படக்கூடிய நீண்டகால விளைவை பொருளாதார கொள்கையை உருவாக்குபவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சுகாதார காப்பீட்டுக் கொள்கைகள் இளைஞர்களுக்கான மனநல சுகாதார சேவைகளை போதுமான அளவில் ஈடுசெய்வதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்' என்று டாக்டர் கன்சன் கூறினார்.