'தூக்கத்தை மேம்படுத்தும் நீல ஒளி தடுப்புக் கண்ணாடிகள்'

நீல ஒளி தடுப்புக் கண்ணாடிகள் தூக்கம் மற்றும் பணியின் திறனை அதிகப்படுத்துவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீல ஒளி தடுப்புக் கண்ணாடிகள் தூக்கம் மற்றும் பணியின் திறனை அதிகப்படுத்துவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

கரோனா தொற்றுநோய் காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் சூழல் உருவாகியுள்ளது. அலுவலக வேலைக்காக மணிக்கணக்கில் கணினியைப் பயன்படுத்துவது, பின்னர் டிவி பார்ப்பது, மொபைல் போனில் நேரத்தை செலவிடுவது என நம் கண்களுக்கு இடைவிடாமல் வேலை கொடுக்கிறோம். 

சிலர் வீட்டிலேயே இருப்பதால் இரவு நேரங்களில் தூக்கமின்மை, தூக்கத்தில் விழித்தல் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். நாள் முழுவதும் வேலை செய்யும் நம் கண்களுக்கு இரவில் நல்ல ஓய்வு கொடுப்பது அவசியம். நம்முடைய அடுத்த நாள் வேலை சரியான முறையில் நடைபெறுவதற்கும், நமது உடல் நலத்தை பேணுவதற்கும் நிம்மதியான தூக்கம் வேண்டியதாகிறது. 

மின்னணு சாதனங்களின் பயன்பாட்டினால் தூக்கத்தை தொலைத்த நபர்களுக்கு இந்த புதிய ஆய்வு தீர்வு வழங்குகிறது. தூங்குவதற்கு முன்னதாக சிறிது நேரம் நீல ஒளி தடுப்புக் கண்ணாடிகள் அணிந்தால் இரவில் நன்றாக தூக்கம் வரும். மேலும், அடுத்த நாள் வேலை சுறுசுறுப்பாக நடைபெறும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாம் பொதுவாகப் பயன்படுத்தும் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் கணினித் திரைகள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் போன்றவை நீல ஒளியை வெளியிடுகின்றன. இவை நம் கண்களில் உள்ள ரெட்டினாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, நீல ஒளி தடுப்புக் கண்ணாடிகளை அணியும்போது கணினிகள் வெளிப்படுத்தும் நீல ஒளி, நம் கண்ணுக்குச் செல்வது தடுக்கப்படும். இதனால் கண்கள் பாதுகாப்பாக இருக்கும். 

எனவே, கணினித் திரைகள் உள்ளிட்ட இந்த மின்னணு சாதனங்களில் இருந்து வெளிப்படும் நீல ஒளி தடைபடும் பட்சத்தில் கண்கள் எளிதில் சோர்வாகாது. தூக்கத்தில் பாதிப்பு ஏற்படாது என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இண்டியானா யுனிவர்சிட்டி கெல்லி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் என்ற கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் கிறிஸ்டியானோ எல். குரானா இதுகுறித்து கூறுகையில், 

'நீல ஒளி ஃபில்டர் கண்ணாடிகளை அணிவது, தூக்கம், வேலையில் ஈடுபாடு, பணி செயல்திறன் மற்றும் நிறுவனத்தில் நடத்தை ஆகியவற்றை மேம்படுத்த உதவும் என்பதை ஆய்வின் மூலமாகக் கண்டறிந்துள்ளோம். இந்த கண்ணாடிகள் உடல் ரீதியாக இருளான சூழ்நிலையை உருவாக்குவதால் தூக்கத்தின் அளவு மற்றும் தரம் கூடுகிறது, அதாவது அதிக நேரம் ஆழ்ந்த உறக்கம் மேற்கொள்கிறோம்' என்றார். 

இந்த ஆய்வின் முடிவுகள் ஜர்னல் ஆஃப் அப்ளைடு சைக்காலஜி ஆன்லைன் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க பன்னாட்டு நிதி நிறுவனத்தின் 63 நிறுவன மேலாளர்கள் மற்றும் 67 கால் சென்டர் ஊழியர்களிடம் இருந்து தரவுகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், இவர்களில் நீல ஒளி தடுப்புக் கண்ணாடிகளை பயன்பதுவோரின் வேலைத் திறன் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com