முதியோர்களின் தனிமையைப் போக்கும் சமூக ஊடகங்கள்!

நம் முன்னோர்கள் காலத்திலும் சரி, தற்போதைய நவீன காலத்திலும் சரி, பெரும்பாலான மூத்த குடிமக்களின் இறுதிக்கட்ட வாழ்க்கை என்னவோ தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம்தான்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நம் முன்னோர்கள் காலத்திலும் சரி, தற்போதைய நவீன காலத்திலும் சரி, பெரும்பாலான மூத்த குடிமக்களின் இறுதிக்கட்ட வாழ்க்கை என்னவோ தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம்தான். அதிகபட்சமாக அவர்களின் பொழுதுபோக்கு பேரக் குழந்தைகளுடன் விளையாடுவது. அதிலும், பிள்ளைகளை விட்டு பெற்றோர்கள் தனியே இருந்தால் அந்த கொடுப்பினைகூட அவர்களுக்கு இல்லை. 

வளர்ந்து வரும் நவீனயுகத்தில், மின்னணு சாதனங்களின் பயன்பாடு பொதுவாக அனைத்து தரப்பு மக்களிடமும் அதிகரித்துவிட்ட இந்த நேரத்தில், முதியோர்களும் சமூக ஊடகங்களில் ஆறுதல் தேடுவது அதிகரித்துள்ளது. உலக அளவில் 50-64 வயதுடைய மூன்றில் இரு பங்கு முதியோர்கள், 65+ வயதுடைய 43% முதியோர்கள் இன்றைய நிலவரப்படி பேஸ்புக் பக்கத்தில் இருக்கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில்  மேற்கத்திய நாடுகளில் உள்ள முதியவர்கள் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், லிங்க்டு இன், ஸ்கைப் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் உள்ளனர். 

இதன்மூலம் நவநாகரிக வாழ்க்கையை முதியோர்களும் ஏற்றுக்கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டதோடு, இந்த வாழ்க்கையை தற்போது அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

காரணம், தங்கள் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் இல்லாத குறையை மின்னணு சாதனங்களும், சமூக ஊடகங்கங்களும் தீர்த்து வைக்கின்றன. சமூக ஊடகங்கள் அவர்களின் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல் அவர்களது மகிழ்ச்சியின் ஒரு அங்கமாகவும் மாறியுள்ளது. 

தங்களைப் போன்ற மூத்த நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. முதியோர் காப்பகங்களில் எவ்வாறு முதியோர்கள் ஒரு குடும்பத்தினர் போல இருக்கின்றாரோ, அதுபோல சமூக ஊடகங்களிலும் மூத்த குடிமக்கள் ஒரு குழுவை அமைத்துக்கொண்டு அதன் மூலம் தங்கள் கருத்துகளை, அனுபவங்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். 

தற்போதைய காலகட்டத்தில் தொடர்புகள் கிடைப்பது என்பது எளிதாகி விட்டது. இதனையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். சமூக ஊடகங்கள் நேரத்தை வீணடிக்கின்றன என்று ஒருபக்கம் சொல்லப்பட்டாலும், அதனை நாம் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது என்பது இந்த விஷயத்தில்கூட தெளிவாகிறது. 

அந்தவகையில், உலக நடப்புகளை தெரிந்துகொள்ளவும், நண்பர்களுடன் உரையாடவும், திறன்களை வளர்த்துக்கொள்ளவும், தங்கள் அனுபவங்களைப் பகிரவும் முதியோர்கள் சமூக வலைத்தளங்களில் அங்கமாகியுள்ளனர். இது அவர்களை தனிமையில் இருந்து விடுபடவும், சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதியோர்கள் பலர் தங்கள் திறமையை வெளிப்படுத்த, நிரூபிக்க சமூக வலைத்தளத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். தங்கள் காலத்தில் இதுபோன்று இல்லை என்றும், தற்போது வாய்ப்பு கிடைத்ததால் பயன்படுத்துகிறோம் என்றும் மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கின்றனர். 

மேலும், இளைய தலைமுறையினரைப் போன்று அவர்களும் அனைத்து விதமான சமூக ஊடகங்களிலும் இருப்பது, கருத்துகளைப் பதிவிடுவது, அவர்களின் இளமை காலத்தை நினைவுபடுத்துவதோடு, தாங்களும் இளமையுடன் இருப்பதாக நினைக்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தாங்களும் மேம்படுவதாக உணர்கின்றனர். 

முதியோர்களுக்கென்று, சமூக வலைத்தளங்களில் பல புதிய அமைப்புகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் முதியோர் தங்கள் அனுபவங்களை இளைஞர்களுக்கு எடுத்துரைக்கின்றனர். பல அமைப்புகள், சங்கங்கள் மூலமாக சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனால், இந்தியாவில் இம்மாதிரியான சூழ்நிலையில் இருப்பது 4% முதியோர் மட்டுமே. இந்தியாவில் உள்ள 10 கோடி முதியோரில் சுமார் 40 லட்சம் பேர் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துவதாக அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. 

பொதுவாக, வெளியூர்களில், வெளிநாடுகளில் இருக்கும் பிள்ளைகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுடன் தற்போது சமூக ஊடகங்களின் வழியாக உரையாடும் நிலைதான் இன்றைய முதியோருக்கு. தினம் ஒருமுறையோ அல்லது வாரத்திற்கு ஒருமுறையோ அவர்களின் முகத்தைப் பார்த்து பேசுவது சற்று ஆறுதல் அளிப்பதாக கூறுகின்றனர்.

மொத்தத்தில், தங்கள் நேரத்தை ஓரளவு உபயோகமாக செலவிடவும், பிள்ளைகள் இல்லாத தனிமை நேரத்தைத் தவிர்க்கவும், ஓரளவேனும் முதியோர்களுக்கு சமூக வலைத்தளங்கள் ஒரு மருந்தாக இருக்கிறது என்றால் தவறில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com