புலம்பெயர் குழந்தைகளுக்காக ஆசிரியராக மாறிய காவல் அதிகாரி; பெங்களூருவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 30 பேருக்கு தினமும் பாடங்கள் கற்றுத் தருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர். 
குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் காவல் துணை ஆய்வாளர் சாந்தப்பா.
குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் காவல் துணை ஆய்வாளர் சாந்தப்பா.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று பெரும்பாலான ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. அதேநேரத்தில் கரோனா பேரிடர் காலத்தில் மனதை கனக்கச் செய்யும் சம்பவங்களும், நெகிழ்ச்சி சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு மக்களுக்கு மற்றொரு தரப்பு மக்கள் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து வருகின்றனர். பொருளாதார ரீதியாக பேரிழப்பை சந்தித்துள்ள மக்களுக்கு இந்த நேரத்தில் ஆதரவு அவசியம்தான். 

இந்த நெகிழ்ச்சி சம்பவங்களில் ஒன்றாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 30 பேருக்கு தினமும் பாடங்கள் கற்றுத் தருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் பெங்களூரூவைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர். 

நாகர்பாவியில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தப்பா ஜடேம்னவர். இவர் அன்னபூர்ணேஷ்வரி நகர் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக இருக்கிறார். இவர் தன் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள தொழிலாளர்களின் 30 குழந்தைகளுக்கு தினமும் காலை 7 மணிக்கு பொதுவெளியில் பாடம் எடுக்கிறார். குழந்தைகளுக்கு பொது அறிவு, அரசியலமைப்பு, கணிதம் என அனைத்தையும் கற்றுத் தருகிறார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், 'நான் 8.30 மணிக்கு பணிக்குச் செல்ல வேண்டும். எனவே, தினமும் காலை 7 முதல் 8 மணி வரை ஒருமணி நேரம் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கிறேன். ஆன்லைன் வகுப்புகளில் கற்றுக்கொள்ள முடியாததால் என்னால் முடிந்ததை செய்கிறேன்' என்றார். 

தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் சாந்தப்பாவைப் பாராட்டியுள்ளார். 

மேலும், 'அந்த குக்கிராமத்தில் ஒரு சில குடும்பங்களில் மட்டுமே ஸ்மார்ட்போன் உள்ளது. அவர்கள் வசிக்கும் பகுதிக்கு மின்சாரம் இல்லை. கிராமப்புற மாணவர்கள் கல்வி பயிலும் பொருட்டு, மாணவர்களின் இருப்பிடங்களுக்கு ஆசிரியர்களை அனுப்ப வேண்டிய அரசாங்கத்தின் வித்யகம திட்டமும் இங்கு தோல்வியடைந்தது. காரணம், அரசுப் பள்ளிகளில் சேரும் ஆசிரியர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாதது.

ஆசிரியர்கள் பாடம் சொல்லிக்கொடுக்க, குழந்தைகளை பூங்காவிற்கு அழைக்கிறார்கள். ஆனால், எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும்? எப்படி செல்வது என குழந்தைகள் தெரியாமல் உள்ளனர். இதனால் குழந்தைகள் வகுப்புகளை தவறவிடுகின்றனர். தற்போது குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருள்கள், பை ஆகியவற்றை கொடுக்க அரசு முன்வந்துள்ளது. 

அதேபோன்று மாணவர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்களை ஊக்குவிக்க வேண்டும். இப்போதைக்கு, வீட்டுப் பாடங்களை சரியாக முடிக்கும் மாணவர்களுக்கு ஒரு சாக்லேட் அல்லது வடிவியல் பெட்டி வழங்கி ஊக்குவித்து வருகிறேன்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

புலம் பெயர்ந்த குடும்பங்கள் மின்சாரம், தண்ணீர், சுற்றிலும் எந்தவிதமான கடைகளும் இன்றி ஒரு நெருக்கடியான இடத்தில் வாழ்கின்றனர் என்று கூறிய அவர், 'குழந்தைகளுக்கு கற்பிக்க பெற்றோரிடம் கல்வியின் அவசியத்தை கூறி அனுமதி பெற சற்று கடினமாகவே இருந்தது' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com