'குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு மிக அவசியம்'

குழந்தை வளர்ப்பில் தந்தையின் ஈடுபாடு குழந்தையின் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என ஆய்வொன்று கூறுகிறது.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

குழந்தை வளர்ப்பில் தந்தையின் ஈடுபாடு குழந்தை மற்றும் பெற்றோரின் மன ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் என ஆய்வொன்று கூறுகிறது.  

ஃபிரன்டியர்ஸ் இன் சைக்கியாட்ரி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், அமெரிக்காவின் 5 வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த 881 தந்தையர்கள் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் குறைந்த வருமானம் கொண்ட நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 

குழந்தையுடன் தந்தை செலவழிக்கும் நேரம், குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் செயல்திறன் மற்றும் குழந்தைக்கு பெற்றோர்களின் பொருளாதார ஆதரவு ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு குழந்தையின் முதல் 12 மாதங்களில் பெற்றோர்களின் மனச்சோர்வை கணக்கிட்டனர். 

இதில், குழந்தை வளர்ப்பில் தந்தை அதிகம் பங்கெடுத்துக்கொண்டால் பொதுவாகவே தாய், தந்தை ஆகிய இருவரின் மனச்சோர்வு குறைகிறது. அதேபோன்று எதிர்காலத்தில் குழந்தையின் மன ஆரோக்கியத்திற்கும் இது நன்மையளிக்கும். 

பிறந்த உடனேயே குழந்தைகளுடன் அதிக ஈடுபாடு கொண்ட தந்தைகள் ஒரு வருடம் கழித்து மனச்சோர்வடைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை தங்கள் ஆய்வின் மூலமாக கண்டறிந்ததாக அமெரிக்காவின் லாங் பீச், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உளவியல் உதவி பேராசிரியர் டாக்டர் ஓலாஜிட் என். பாமிஷிக்பின் தெரிவித்தார்.

குழந்தைப் பருவத்தில் குழந்தைகளுடன் அதிக ஈடுபாடு கொண்ட தந்தைகள், குழந்தை வளர்ப்பை தாம் சிறப்பாக செய்ததாக திருப்தி அடைகின்றனர். மேலும் தகுதி வாய்ந்த பெற்றோர்களாக உணர்கிறார்கள். இதுவே அவர்களின் மனச்சோர்வை குறைக்க வழிவகுக்கும் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆரம்பகால குழந்தை வளர்ப்பில் தந்தைவழி ஈடுபாட்டிற்கும் பின்னர் தந்தைவழி மனச்சோர்வு அறிகுறிகளுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வதற்கான முதல் ஆய்வு இது.

தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையிலும், குடும்பத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் தந்தைகளின் முக்கிய பங்கு அவசியம். மேலும், இது குழந்தைகளின் ஆரோக்கியத்துடனும் தொடர்பு கொண்டுள்ளதால் பெற்றோர்கள் குறிப்பாக, தந்தைகள் குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com