'ஊட்டச்சத்து பானங்களை அதிகம் குடிப்பது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்' - ஆய்வில் தகவல்
By DIN | Published On : 19th April 2021 11:28 AM | Last Updated : 19th April 2021 11:51 AM | அ+அ அ- |

ஊட்டச்சத்து பானங்களை அதிகம் குடிப்பது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லண்டனில் இளைஞர் ஒருவர் தினமும் 4 கேன் ஊட்டச்சத்து பானம் குடித்து வந்துள்ளதாகவும் 21 வயதான அவர் 4 மாதங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல், எடை இழப்பு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த இளைஞரைப் பற்றி ஆய்வாளர்கள்(மருத்துவர்கள்) கூறும்போது, 'ஒவ்வொரு நாளும் சராசரியாக தலா 500 மிலி அளவுள்ள 4 கேன் ஊட்டச்சத்து பானங்களை அவர் குடித்து வந்துள்ளார். அவர் சுமார் 2 ஆண்டுகளாக இவ்வாறு குடித்து வந்துள்ளார்.
முன்னதாக அவருக்கு அஜீரணம், படபடப்பு இருந்துள்ளது. எனினும் சாதாரணமானது என்று அவர் மருத்துவரை நாடவில்லை. 3 மாதங்களுக்கு முன்பாக மூச்சுத்திணறல், எடை இழப்பு, உடல் சோர்வு ஏற்பட்டதால் மருத்துவர்களை நாடினார். இதனால் அவர் தனது படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பின்னர் ரத்த பரிசோதனை, ஸ்கேன், ஈ.சி.ஜி செய்து பார்த்தபோது அவருக்கு இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு இரண்டும் இருந்தது தெரியவந்தது. இதற்கான காரணத்தை அறிந்தபோது அவர் தினமும் ஊட்டச்சத்து பானம் குடிப்பது கண்டறியப்பட்டது.
அவர் குடித்த 500 மிலி பானத்தில் ஒவ்வொன்றிலும் 160 மில்லிகிராம் காஃபின், டவுரின் உள்ளிட்ட அமினோ அமிலங்கள், இனிப்பு போன்ற இதர பொருள்கள் அடங்கியுள்ளன. காஃபின், நரம்பு மண்டலத்தை அதிகமாக தூண்டுவது, பொதுவாக ஊட்டச்சத்து பானம் ரத்த அழுத்தத்தைத் தூண்டுவது அவரது இதய, சிறுநீரக செயலிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று கண்டறிந்தோம்.
பின்னர் ஊட்டச்சத்து பானம் குடிப்பதை தவிர்த்துவரும்போது கடந்த சில வாரங்களாக அவரது இதய, சிறுநீரக செயல்பாடு மேம்பட்டதை காண முடிந்தது. அவருடைய உடல்நிலையை பழைய நிலைமைக்கு மீட்பது சற்று கடினம்தான் என்றாலும் தற்போது உடல்நிலை மேம்பட்டுள்ளது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது' என்று தெரிவித்தார்.
மேலும், ஊட்டச்சத்து பானத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதை நாம் கண்கூடாக காண முடிகிறது. மேலும், ஊட்டச்சத்து பானம் தொடர்ந்து அருந்துவதால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று கூறும் ஆய்வுக்கட்டுரைகள் பல உள்ளன. எனவே, இளைஞர்கள் ஊட்டச்சத்து பானம் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள்தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்த விழிப்புணர்வை இளைஞர்கள், குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டியது அனைவரின் கடமை என்றும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.