ஹிப் ஹாப் பாடலால் குறைந்த தற்கொலைகளின் எண்ணிக்கை
By DIN | Published On : 21st December 2021 12:17 PM | Last Updated : 21st December 2021 12:19 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
அமெரிக்காவில் தற்கொலைக்கு எதிரான ஒரு ஹிப் ஹாப் பாடல் எண்ணற்ற உயிர்களைக் காப்பற்றியுள்ளது.
நவீனமயத்தின் ஒரு எதிரொலியாக மன அழுத்தத்தினால் இன்று தற்கொலை செய்துகொள்வோர் அதிகம். சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு வருடத்துக்கு 7 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும் இதில் 15-29 வயதுடையவர்கள் அதிகம் என்றும் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி 2019ல் 77% தற்கொலைகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்ந்தவை.
தற்கொலையைத் தடுக்க ஒவ்வொரு நாடும் பல முயற்சிகளையும் பல்வேறு வகைகளில் மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றன. மேலும் இக்கட்டான சூழ்நிலையில் தொடர்புகொள்ள ஹெல்ப்-லைன் உதவி எண்களும் பயன்பாட்டில் உள்ளன.
அதுபோலவே அமெரிக்க தேசிய தற்கொலை தடுப்பு லைஃப்லைன் 1-800-273-8255 என்ற எண் பயன்பாட்டில் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தற்கொலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இந்த எண்ணை தொடர்புகொள்ளும் பொருட்டும் ஒரு ஹிப் ஹாப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. 'லாஜிக்' நிறுவனம் வெளியிட்டுள்ள இப்பாடல் அமெரிக்காவில் பிரபலமாகியுள்ளது.
இதையும் படிக்க | இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும், ஏன்?
இந்தப் பாடல் மூலமாக அமெரிக்காவில் தற்கொலை எண்ணிக்கை குறைந்துள்ளதாக சமீபத்திய ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இந்த பாடலில் ஒரு இளைஞர் மன அழுத்தத்தினால் தற்கொலைக்கு முயன்ற நிலையில் ஹெல்ப் -லைன் எண்ணைத் தொடர்புகொண்டதன் மூலமாக வாழ்க்கை மாறியதைக் காட்டுகிறது.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலின் கிறிஸ்துமஸ் இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த பாடல் வரிகள் தற்கொலைத் தடுப்பில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.
பாடல் வெளியான ஒரு மாதத்தில், 2017 எம்டிவி விடியோ மியூசிக் விருதுகள், 2018 கிராமி விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளது.
மேலும் இந்த பாடல் மூலமாக தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்-லைன் எண் பெரும்பாலாக அனைவரையும் சென்றடைந்து இந்த ஹெல்ப்-லைனில் வரும் அழைப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த ஆண்டு 6.9% அதிகமாக அழைப்புகள் வந்துள்ளன. அதேநேரத்தில் அந்த காலகட்டத்தில் தற்கொலை விகிதம் 5.5% குறைந்துள்ளது.
இன்று தகவல் தொடர்புக்கு சமூக ஊடகங்கள் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் இந்த பாடல் சமூக வலைத்தளங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடைந்ததுடன் அவர்களது வாழ்க்கையை காப்பற்றியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க | முடி வறட்சிக்கு என்னதான் தீர்வு?