'ஒரு மாதத்திலேயே கைவிடப்படும் புத்தாண்டு தீர்மானங்கள்'

புத்தாண்டு தீர்மானங்களை பெரும்பாலானோர் முதல் மாதத்திலேயே கைவிடுவதாக ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
'ஒரு மாதத்திலேயே கைவிடப்படும் புத்தாண்டு தீர்மானங்கள்'

புத்தாண்டு தீர்மானங்களை பெரும்பாலானோர் முதல் மாதத்திலேயே கைவிடுவதாக ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

ஒவ்வொரு புத்தாண்டின்போதும் பெரும்பாலாக அனைவருமே தீர்மானங்கள் எடுத்துக்கொள்வதுண்டு. குறிப்பாக நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்கம் ஒன்றை விட்டொழிக்கவோ அல்லது புதியதாக ஒரு நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்கவோ தீர்மானங்கள் எடுப்பதுண்டு. ஆனால், இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறதா என்று பார்த்தால் பெரும்பாலானோர் இல்லை என்றுதான் கூறுவர்.

சிலர் பல ஆண்டுகளாக ஒரே தீர்மானத்தை எடுத்து இன்னும் அதனை நிறைவேற்ற முடியாமலே உள்ளதைக்கூட நம்மைச் சுற்றியுள்ள நண்பர்களிடையே பார்த்திருப்போம். ஏன் நாம் கூட அதற்கு உதாரணமாக இருக்கலாம்.

புத்தாண்டில் எடுக்கும் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாதது பொதுவான கருத்தாக சொல்லப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

அதிலும் புத்தாண்டில் தீர்மானம் எடுக்கும் பெரும்பாலானோர் முதல் மாதத்திற்குள் தீர்மானங்களை கைவிடுவதாகக் கண்டறிந்துள்ளது.

ஆய்வின் முடிவுகளில் குறிப்பிடத்தக்கவை: 

► ஆய்வில் பங்கேற்றவர்களில் 50% க்கும் அதிகமானவர்கள் ஒரேமாதிரியான தீர்மானங்களை கொண்டிருந்தனர். 18 முதல் 77 வயதுடையவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். 

► புத்தாண்டு தீர்மானங்கள் அனைத்தும் குறிக்கோள்களாக வாழ்வின் வளர்ச்சிக்கு அல்லது உடல்நலத்திற்கு என நேர்மறையான விளைவுகளை கொண்டவையாகவே உள்ளன. 

► ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் முதல் மாதத்திற்குள் தங்கள் தீர்மானங்களை கைவிட்டனர்.

► 50%க்கும் அதிகமானோர் முந்தைய ஆண்டில் எடுத்த தீர்மானத்தை அடுத்த ஆண்டிலும் எடுத்திருந்தனர். 

► பட்டியலிடப்பட்ட தீர்மானங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உணவு அல்லது உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவதாக இருந்தது. இதில் உணவு (29 சதவீதம்) அல்லது உடற்பயிற்சி (24 சதவீதம்) என தெரிய வந்தது. 

► தீர்மானங்களில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு (64 சதவீதம்) 'பொதுவானவை'யாக இருந்தன. எடுத்துக்காட்டாக உடற்பயிற்சி செய்வதை மூன்றில் இரண்டு பங்கினர் குறிப்பிட்டுள்ளனர். 

► இலக்குகள் அல்லது குறிக்கோள்களை அடைய நேரத்தை திட்டமிட்டு பின்னர் தளர்த்திக் கொண்டனர். 

► ஆண், பெண் என இரு பாலினத்தவரும் அதேபோல அனைத்து வயதுடையவர்களும் புத்தாண்டு தீர்மானங்களை எடுத்துக்கொள்பவராக உள்ளனர். 

இவ்வாறு அந்த ஆய்வின் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. 

குறிக்கோளைப் பொருத்தே கால அளவு நிர்ணயிக்கப்படுகிறது. சிலர் ஒரு சில மாதங்களிலோ சிலர் ஒரு சில ஆண்டுகளிலோ குறிக்கோளை எட்டலாம்.

அந்தவகையில் புத்தாண்டு தீர்மானமாக ஒருவர் தன்னுடைய குறிக்கோளை எடுத்துக்கொண்டால் அது நீண்ட கால தீர்மானம். அத்தகைய நீண்ட கால தீர்மானத்திற்கு நாம் அதிகம் திட்டமிட வேண்டும். குறிக்கோளை அடைய விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

இதுபோல நீண்ட கால தீர்மானங்கள் ஒரு ஆண்டில் சாத்தியப்படவில்லை என வருத்தப்படுவது நியாயமாகாது. அந்த ஆண்டில் அதற்கான முயற்சி உங்களை திருப்திபடுத்தினாலே போதுமானது. அதுவே புத்தாண்டு தீர்மானத்தின் வெற்றி. 

அதேநேரத்தில் எளிதான தீர்மானங்கள்... எடுத்துக்காட்டாக தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று எடுத்துக்கொண்டால் அது உங்களுடைய உடல்நிலை, இடம், சூழ்நிலை பொருத்தது. எனினும், எளிதான தீர்மானங்களை அடைய சற்று மெனக்கெட்டுத்தான் ஆக வேண்டும். பல்வேறு காரணிகளை சார்ந்திருப்பதால்தான் தீர்மானங்களை அடைய முடியவில்லை என்று ஆய்வாளர்கள் கூறினாலும், அது நம்முடைய வளர்ச்சிக்கு பலன் அளிப்பதால் வரும் நாள்களிலாவது தீர்மானங்களை முடிந்தவரை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com