உங்கள் பாஸ்வோர்ட் பாதுகாப்பானதா? இதோ ஒரு டெஸ்ட்

பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச்சொல்..  வாழ்க்கையே இணையமயமாகிவிட்ட நிலையில், ஒருவர் பல கடவுச்சொற்களைப் பயன்படுத்தும் நிலையில் உள்ளோம்.
உங்கள் பாஸ்வேர்ட் பாதுகாப்பானதா? இதோ ஒரு டெஸ்ட்
உங்கள் பாஸ்வேர்ட் பாதுகாப்பானதா? இதோ ஒரு டெஸ்ட்

பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச்சொல்.. வாழ்க்கையே இணையமயமாகிவிட்ட நிலையில், ஒருவர் பல கடவுச்சொற்களைப் பயன்படுத்தும் நிலையில் உள்ளோம்.

மின் கட்டணம் கட்டுவது முதல் வங்கிப் பணப்பரிவர்த்தனை செயலிகள் என பலவற்றுக்கும் பல விதமான கடவுச்சொற்களை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

மின் கட்டண கணக்குக்கு நாம் வைக்கும் கடவுச்சொல் வேண்டுமானால் நம்மைப்போல பலவீனமாக இருக்கலாம். ஆனால், வங்கிக் கணக்கு, பணப்பரிமாற்ற செயலிகளுக்கு வைக்கும் கடவுச்சொற்கள் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாத வகையில் அமைவது அவசியம்.

இது தொடர்பாக, சர்வதேச இணையவழி பாதுகாப்பு சேவை அளிக்கும் நிறுவனம் ஒன்று, பலமான கடவுச்சொற்களை உருவாக்கவும், அதனை பாதுகாப்பானதாக வைத்துக் கொள்ளவும் சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறது.

அதன்படி, கடவுச்சொல்லை உருவாக்கும்போது சில தகவல்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

1. எண்கள் அல்லது இதர எழுத்துக்களை கடவுச்சொல்லில் சேர்க்கும்போது, அது கண்டிப்பாக நமது பிறந்தநாள், திருமணநாள் போன்ற எண்களாக இருக்கவே கூடாது. குறிப்பாக பிறந்த நாள், மாதம், ஆண்டு, செல்லிடப்பேசி எண் போன்றவற்றை வைக்கவே கூடாது. எப்போதுமே தனிப்பட்ட விஷயங்களுடன் தொடர்பில்லாத எண்களை மட்டுமே இதில் சேர்க்க வேண்டும். 

2. தனித்தனி கடவுச்சொற்கள்.. ஒரே தொகுப்பை அனைத்து முகவரிக்கும் பாஸ்வேர்ட்டாக வைப்பவரா நீங்கள். அப்படியானால் நிச்சயம் அதை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டுமாம். நிச்சயமாக ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ள வேண்டும். உங்களது ஒரு கடவுச்சொல் தெரிந்துவிட்டால், எல்லா சேவைகளையும் ஒருவரால் பயன்படுத்திவிட முடியும் என்பது எவ்வளவு பாதுகாப்பற்ற செயலாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்?

3.நீளமாக வளவளவென பேசுபவர்கள் கூட, எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறிய கடவுச்சொல்லை அமைத்துக்கொள்வார்கள். காரணம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், ஒவ்வொரு முறையும் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக. ஆனால், அது உங்களது பாதுகாப்புக்காக அமைக்கப்படுவதை என்பதை மட்டும் மறந்துவிடுவார்கள். எனவே, பாதுகாப்பு என்பதை முதலில் நாம்தான் உறுதி செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நீளமான பாஸ்வேர்டுகளை உருவாக்குங்கள். யாராலும் கண்டுபிடிக்க முடியாததாகவும் இருக்க வேண்டும்.

4. அவ்வப்போது மாற்றியமையுங்கள்.. அவ்வப்போது கடவுச்சொற்களை மாற்றியமைக்க வேண்டியதும் மிகவும் அவசியம். ஏற்கனவே இருக்கும் கடவுச்சொல்லுடன் எதையாவது கூட்டியோ சற்று குறைத்தோ எதோ ஒன்றை மாற்றியோ அமைப்பது இந்த வேலையை எளிதாக்கும். ஒரு பக்கம் பாதுகாப்பும் முக்கியம். மாற்றும் பாஸ்வேர்ட் உங்களுக்கு நினைவிலிருப்பதும் அதை விட முக்கியும்.

5. இதனுடன், இரண்டு முறைகளில் உள்நுழையும் வாய்ப்புகள் அதாவது டூ ஃபேக்டர் ஆத்தன்டிகேஷன் வசதிகளை பயன்படுத்தலாம். என்னதான் கடவுச்சொல்லை கண்டுபிடித்துவிட்டாலும், இந்த இரண்டாவது வாய்ப்பை யாராலும் பயன்படுத்த முடியாது என்பதால் இது மிகவும் சிறந்த முறையாக உள்ளது.

என்ன இந்த ஐந்து வழிமுறைகளில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. ஐந்துக்கு ஐந்து அல்லது நான்கு மதிப்பெண் வாங்குபவர்கள் மட்டுமே இந்த சோதனையில் வெற்றி பெற்றவர்கள். மூன்று அல்லது அதற்கும் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தால், உடனடியாக உங்கள் பாஸ்வேர்ட்டுகளை மாற்றி, இந்த டெஸ்டில் வெற்றிபெறும் வழியைப் பாருங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com