சென்னையிலும் இதைச் செய்யலாமே? திருமண ஆடைக்கென ஒரு வங்கி

திருமண வைபவத்தில் அதிகச் செலவை உள்ளிழுத்துக் கொள்பவையாக ஆடை, அலங்காரச் செலவுகள் மாறிவிட்டன.
சென்னையிலும் இதைச் செய்யலாமே? திருமண ஆடைக்கென ஒரு வங்கி
சென்னையிலும் இதைச் செய்யலாமே? திருமண ஆடைக்கென ஒரு வங்கி

கோட்டயம்: மாறிக்கொண்டேயிருக்கும் உலக வாழ்வில் திருமணம் என்பது விலைஉயர்ந்த செலவாகிவிட்டது. திருமண வைபவத்தில் அதிகச் செலவை உள்ளிழுத்துக் கொள்பவையாக ஆடை, அலங்காரச் செலவுகள் மாறிவிட்டன.

திருமணத்துக்கு வரும் உறவினர்களே அதிகம் செலவிட்டு ஆடம்பர ஆடைகளை அணிந்து வரும்போது, மணமக்கள் சும்மா இருக்க முடியுமா? அந்த ஒரே ஒரு நாளுக்காக, மிக விலை உயர்ந்த ஆடையை எடுத்து அணிந்து கொள்கிறார்கள். அதை மற்ற தருணங்களில் அணியவே முடியாது என்பது அவர்களுக்கும் தெரிந்திருக்கத்தான் செய்கிறது. ஆனா, வேறு வழியில்லாமல் மற்ற அனைவரையும் போல புதிய மணமக்களும் அதே தவறைத்தான் செய்கிறார்கள்.

இவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம் திருத்த கேரள மாநிலம் இராட்டுப்பேட்டா பகுதியில் இருக்கும் இளைஞர், இளைஞிகள் ஒன்றிணைந்து ஒரு சூப்பரான வேலையைச் செய்திருக்கிறார்கள்.

திருமண ஆடை வங்கி என்ற ஒன்றை உருவாக்கி, அது தொடர்பான தகவல்களை பலருக்கும் பரப்பி வருகிறார்கள். முதலில் வெறும் மூன்று பேர் யோசித்து இந்த திட்டத்தை செயல்படுத்த, மெல்ல இந்த குழு 10 பேராக மாறி, அதற்போது இதில் 250 பேர் இணைந்துள்ளனர்.

இவர்கள் ஒரு வாட்ஸ்ஆப் குழுவை அமைத்து, திருமண ஆடைக்காக மிகப்பெரிய அளவில் செலவிட முடியாத ஏழை, எளிய பெண்களுக்கு உதவ முன் வந்துள்ளனர். இதில் வெகு சிறப்பான விஷயம் என்னத் தெரியுமா? இந்த ஆடை வங்கியிலிருந்து அவர்கள் திருமணத்துக்குப் பயன்படுத்தும் ஆடைக்காக ஒரு பைசாவும் செலவிட வேண்டாம் என்பதே. அது மட்டுமில்லை, திருமண ஆடையை திரும்பக் கொண்டு வந்து கொடுப்பதும் இல்லை அவர்களே வைத்துக் கொள்வதும் கூட அவர்கள் விருப்பம்தானாம். கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்பதும் கட்டாயமில்லையாம்.

இதுவரை 25 ஏழை, எளிய குடும்பத்துக்கு இந்த வங்கி உதவியிருக்கிறதாம். அது மட்டுமல்ல, இந்தக் குழுவைப் பற்றி தகவல் அறிந்து, ஏராளமானோர், பயன்படுத்தாமல் வைத்திருக்கும் தங்களது திருமண ஆடையை இங்கே கொண்டு வந்து கொடுத்துவிட்டார்களாம்.

சிலர் அதற்கும் மேலே சென்று, புதிதாக சில ஆடைகளை வாங்கி வந்தும் நன்கொடையாக அளித்திருக்கிறார்கள். இதனை சிந்தித்து தொடங்கியிருக்கும் சமூக ஆர்வலர் மெஹரூஃப் கூறுகையில், வாட்ஸ்ஆப் மூலம் எங்களைத் தொடர்பு கொள்வோரிடம் விவரங்களைப் பெற்றுக் கொண்டு கடைக்கு வரச் சொல்கிறோம். மற்றக் கடைகளைப் போலவே, இங்கு வந்து அவர்கள் விரும்பும் ஆடைகளை தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களது விவரங்கள் யாருக்கும் எங்கும் தெரிவிக்கப்படாது என்கிறார்.

இது போன்று சென்னை உள்ளிட்ட மிகப்பெரிய நகரங்களிலும் கூட இந்த திருமண ஆடை வங்கியைச் செயல்படுத்தினால் எண்ணற்றவர்களுக்கு பயனாகவும் இருக்கும், பயன்படுத்தாமல் இருக்கும் எண்ணற்ற திருமண ஆடைகளுக்கு வெளிச்சம் பிறக்கும் என்றும் பொதுவாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com