நானும் மருதகாசியும் சேர்ந்து பாடல் எழுதிய படம்!

மருதகாசி போன்றவர்கள் பல கவிஞர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் வளர்ச்சிக்கு உதவியாகவும் இருந்தவர்கள். "நல்லவன் வாழ்வான்" என்ற படத்தில் வாலி எழுதிய பாடல் ஒலிப்பதிவாகாமல்
நானும் மருதகாசியும் சேர்ந்து பாடல் எழுதிய படம்!

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -30

கல்லையும் கரைய வைக்கக் கூடிய ஆற்றல் இசைக்கு உண்டு என்பதை 1956-ஆம் ஆண்டு வெளிவந்த "பாசவலை" என்ற படத்தில் எடுத்துக் காட்டியிருப்பார்கள்.
இதுதான் உலகமடா - மனிதா
இதுதான் உலகமடா - பொருள்
இருந்தால் வந்துகூடும் - அதை
இழந்தால் விலகி ஓடும்
இதுதான் உலகமடா - மனிதா
இதுதான் உலகமடா
இந்தப் பாடல் சிந்துபைரவியில் ஆரம்பிக்கும். இதன் இறுதிச் சரணம்,
மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
வீணே சிறையில் பூட்டிவிடும்
பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னைப்
புகழ்ந்தே பாடல் புனைந்து விடும்
என்று முடியும். நம் நாட்டின் நிலையும் இன்றைக்கு இப்படித்தான் இருக்கிறது.
இந்த இறுதிச் சரணத்தில் முதலிரண்டு அடிகளைப் பாடும்போது "தர்பாரி கானடா" ராகத்தில் ஆலாபனை வரும். இசைச் சித்தர் ஜெயராமன் உருக்கமாகப் பாடியிருப்பார்.
அந்த ஆலாபனையில் நடிகை எம்.என். ராஜம் கழுத்தில் அணிந்திருந்த மாணிக்க மாலையில் உள்ள மாணிக்கக் கல் உருகுவதை அற்புதமாகக் காட்டியிருப்பார்கள். இந்தப் பாடலை எழுதியவர் மருதகாசி. இசையமைப்பாளர்கள் விசுவநாதன் - ராமமூர்த்தி. எம்.கே. ராதா பாடுவது போல் காட்சியிருக்கும். படமும் வெற்றிப் படம்.
மருதகாசி போன்றவர்கள் பல கவிஞர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் வளர்ச்சிக்கு உதவியாகவும் இருந்தவர்கள். "நல்லவன் வாழ்வான்" என்ற படத்தில் வாலி எழுதிய பாடல் ஒலிப்பதிவாகாமல் பல தடைகளைச் சந்தித்தபோது இயக்குநர் நீலகண்டன் மருதகாசியை அழைத்து காட்சியைச் சொல்லி வேறுபாடல் எழுதச் சொல்லியிருக்கிறார். வாலி எழுதிய பாட்டைக் காட்டுங்கள் என்று வாலியின் பாட்டை மருதகாசி பார்த்திருக்கிறார்.
இதைவிட நான் என்ன எழுதிவிடப் போகிறேன். இந்தப் பையனுடைய வார்த்தைப் பிரயோகத்தைப் பார்க்கும்போது மிகப் பெரிய அளவில் வளருவான் என்று நினைக்கிறேன். அப்போது அவனிடம் காத்திருந்து நீங்கள் பாடல் எழுதி வாங்கவேண்டிய நிலை ஏற்படும். என்னால் அந்தப் பையனின் வளர்ச்சி பாதிக்கப்படக் கூடாது. எத்தனை தடங்கல் வந்தாலும் இந்தப் பாடலையே ஒலிப்பதிவு செய்யுங்கள். பாடல் நன்றாக வரும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதுவரை மருதகாசி வாலியை நேரில் பார்த்ததில்லை. வாலியும் அவரைப் பார்த்ததில்லை.
"நல்லவன் வாழ்வான்' படம்தான் எம்.ஜி.ஆர். படங்களில் வாலி எழுதிய முதல் படம். 
அதற்கு முன்பு நடிகர் வி. கோபால கிருஷ்ணன் ஒருமுறை வாகினி ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆரிடம் வாலியை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர் அதை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை.
"படகோட்டி' படத்திற்கு வாலி பாடல் எழுதியபோதுதான் வாலியைப் பற்றி எம்.ஜி.ஆரிடம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேலுமணி சொன்னபோது அவருக்கு ஞாபகம் வந்திருக்கிறது.
"படகோட்டி' படத்திற்கு வாலி எழுதிய முதல் பாடல்: 
என்னை எடுத்து தன்னைக் கொடுத்துப் 
போனவன் போனான்டி
என்ற பாடல்.
அதற்கடுத்து அவர் எழுதிய இரண்டாவது பாடல்:
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன்
யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
என்பது.
சத்தியா ஸ்டுடியோவில் ஒப்பனை அறையில் எம்.ஜி.ஆருக்கு இந்த இரண்டு பாடல்களையும் தயாரிப்பாளர் வேலுமணி போட்டுக் காட்டியபோது அவர் கேட்டுவிட்டு படப்பிடிப்புத் தளத்திற்குள் எடுத்துச் சென்று எல்லாரும் கேட்கும்படி எம்.ஜி.ஆர் போட்டுக் காட்டியிருக்கிறார்.
அதைக் கேட்ட வசனகர்த்தா ஆரூர்தாஸ், "கண்ணதாசன் அரசியல் மேடைகளில் என்னதான் தாக்கிப் பேசினாலும் படத்திற்குப் பாட்டெழுதும் போது உங்களுக்கு என்ன எழுதவேண்டும் என்பதை உணர்ந்து எழுதியிருக்கிறார். "கண்ணதாசன் இஸ் கிரேட்' என்று பாராட்டியிருக்கிறார்.
""நானும் அப்படித்தான் முதலில் நினைத்தேன். அதன்பிறகுதான் கண்ணதாசன் எழுதவில்லை. வாலி என்ற புதுக்கவிஞர் எழுதிய பாடல் என்று சொன்னார்கள். ஏற்கெனவே "நல்லவன் வாழ்வான்' படத்தில் எழுதியிருக்கிறார் என்றும் சொன்னார்கள். சொன்ன பிறகுதான் எனக்கு அது நினைவுக்கு வந்தது'' என்று எம்.ஜி.ஆர் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.
அதன்பிறகுதான் அவரை அழைத்து வரச் சொல்லி எம்.ஜி.ஆர் பாராட்டியிருக்கிறார். அதற்குப் பின்னர் திருக்கழுக்குன்றத்தில் நடந்த தி.மு.க கூட்டத்தில் பேசும்போது, "இனிமேல் என்படத்திற்கு வாலி என்ற கவிஞர்தான் பாடல்கள் எழுதுவார்'' என்று பகிரங்கமாக அறிவித்தார்.
எதிர்காலம் ஒன்று எல்லார்க்கும் உண்டு. அது எப்போது வரும்? யாரால் வரும்? தெரியாது. அந்த எதிர்காலம் வாலிக்கு எம்.ஜி.ஆர் வடிவிலும், மருதகாசி வடிவிலும் வந்திருக்கிறது என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
"பூ' என்ற ஓரெழுத்தொரு மொழியை வைத்தும் "பூ' என்று ஓசை தரக்கூடிய "பு' கரத்தை வைத்தும் முதன்முதல் பாடல் எழுதியவர் மருதகாசி. இவருக்குப் பிறகுதான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றவர்கள் எழுதினார்கள்.
1954-ஆம் ஆண்டு வெளிவந்த "தூக்குத் தூக்கி' என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜியும், நடிகை லலிதாவும் பாடுவதுபோல் ஒரு பாடல்.
டி.எம். செüந்தரராஜனும், எம்.எஸ். ராஜேஸ்வரியும் அதைப் பாடியிருப்பார்கள். இசையமைத்தவர் ஜி. ராமநாதன்.
கண்வழி புகுந்து கருத்தினிற் கலந்த
மின்னொளியே ஏன் மெüனம்
வேறெதிலே உந்தன் கவனம்?
என்று தொடக்கமாகும் அந்தப் பாடல். அதில் சரணத்தில்,
பெண் : எண்ணம் வேம்பு மொழி கரும்பு
எனைப் - பிரிந்த உன்மனம் இரும்பு
ஆண் : கண்ணே போதும் சொல்லம்பு
உனைக் - கணமும் பிரியேன் எனை நம்பு
பெண் : உண்மையில் என்மேல் உமக்கன்பு
உண்டென்றால் இல்லைஇனி வம்பு
ஆண் : கண்ணில் தவழுதே குறும்பு
கனிமொழியே நீ எனை விரும்பு
இந்தப் பாட்டுக்கு ஏகப்பட்ட பாராட்டு அந்த நாளில் கிடைத்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற எல்லாப் பாடல்களுமே பிரபலமான பாடல்கள். 
அதுபோல 1967-க்குப் பிறகு வெளிவந்த ஜெமினி கணேசன், சரோஜாதேவி நடித்த "குலவிளக்கு' என்ற படத்தில் இதைவிட அற்புதமான பாடலொன்றைக் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். அது எல்லோரும் கேட்டு ரசித்த பிரபலமான பாடல்.
கேள்வி : பூப்பூவாய்ப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம்பூ
பூவிலே சிறந்தபூ என்ன பூ?
ஒரு குழந்தை : ரோஜாப் பூ
இன்னொரு குழந்தை : தாமரைப் பூ
பதில் : ஊஹும்... அன்பு! 
இப்படி இவர்கள் எழுதுவதற்குப் பாட்டு வயலில் முன்னேர் ஓட்டியவர் மருதகாசி.
இதைப் போல 1956-இல் வெளிவந்த "ராஜா ராணி' என்ற படத்திற்கு "சிரிப்பு' என்ற வார்த்தையை வைத்தே மருதகாசி ஒரு பாடல் எழுதியிருப்பார்.
கலைவாணர் என்.எஸ்.கே அவர்களுக்காக உடுமலை நாராயண கவிதான் அந்தப் பாடலை எழுதுவதாக இருந்தது.
சிரிப்பு - அதன் சிறப்பை
சீர்தூக்கிப் பார்ப்பது நம் பொறுப்பு
என்ற வார்த்தைக்கு மேல் உடுமலையாருக்கு எதுவும் தோன்றவில்லையாம்.
அதனால் என்.எஸ்.கே.யும் உடுமலையாரும் மருதகாசியை அழைத்து வரச்செய்து அந்தப் பாடலை நிறைவு செய்தார்கள். அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் டி.ஆர். பாப்பா. இந்தப் பாட்டில் மருதகாசியின் பெயர்தான் இடம் பெறும். 
நானும் மருதகாசியும் சேர்ந்து ஆர். சுந்தர்ராஜன் டைரக்ட் செய்த "தூங்காத கண்ணின்று ஒன்று" என்ற படத்தில் பாடல் எழுதியிருக்கிறோம். இசையமைத்தவர் கே.வி. மகாதேவன். அதில் நான் எழுதிய பாடல்,
இதயவாசல் திறந்தபோது உறவுவந்தது
உறங்கும்போது கனவு நூறு
பருவம் தந்தது
மலர்மீதிலே பனிசிந்துதே
மனமென்னும் தேனாற்றில் அலைபாயுதே
என்று தொடக்கமாகும்.
இதில் சரணத்தில் ஒருவரியில் "முப்பாலின் மூன்றாம் பால் எப்போதும் நீதானே எப்போது படித்தாலும் இன்பம் இன்பம்' என்று வரும். இந்த இரண்டு வரியைக் குறிப்பிட்டு அண்ணன் மருதகாசி என்னைப் பாராட்டினார். தினகரன் பத்திரிகை சார்பில் வெளிவரும் "வசந்தம்' என்ற வார ஏட்டில் ஆசிரியரும் இதைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தார்.
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com