Enable Javscript for better performance
தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-4- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-4

    By M.A. சுசீலா  |   Published On : 26th September 2016 10:53 AM  |   Last Updated : 26th September 2016 10:53 AM  |  அ+அ அ-  |  

    painting-_jesus_enter

    செஞ்சதுக்கத்தின் பிரம்மாண்டமான காட்சிகளை மனதுக்குள் ஓட்டிப்பார்த்தபடி மதிய உணவுக்காக சிறப்புப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது எங்கள் குழுவினரிடம் ஒரு சிறு கவலையும் கூடக் குடியிருந்தது… குறிப்பாக மரக்கறி உணவை மட்டுமே உட்கொள்ளும் எனக்கு!

    ரஷ்யப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பே - என் தோழியர் பலரும் அங்கே இந்திய உணவு - குறிப்பாக சைவ உணவு கிடைப்பது கடினம் என்று பல முறை என்னை பயம் காட்டியிருந்தனர். அதனால் நானும் கொதிக்கும் நீரில் போட்டு உடனடியாக உண்ணக்கூடிய ஆயத்த உணவு வகைகள் பலவற்றையும் உடன் எடுத்துச் சென்றிருந்தேன்… ஆனால் முதல் நாள் இரவு மாஸ்கோவில் நாங்கள்
    தங்கியிருந்த அஸிமுட் விடுதியோடு இணைந்து இந்திய உணவகம் இருந்ததால் எப்படியோ தப்பி விட்டோம்.

    இப்போது அந்த இடம் வரை மீண்டும் செல்வது இயலாதது என்பதால், உணவுக்காக  எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்பது புரியாதவர்களாக நாங்கள் இருக்க, சென்னையிலிருந்து உடன் வந்த எங்கள் சுற்றுலாக்குழுவின் தலைவரும் உள்ளூர் வழிகாட்டியும் ஓர் இந்திய வடநாட்டு உணவகத்துக்கு எங்களைக் கொண்டு வந்து சேர்த்தபோது வியப்புக்கலந்த மகிழ்ச்சி எங்களை ஆட்கொண்டது. சுட்ட சுக்கா ரொட்டி… வெண்ணெய் தடவிய ரொட்டி, சீரகம் கலந்த பாசுமதிச் சோறு, பன்னீர்க்குழம்பு, ராய்தா எனப்படும் தயிர்ப்பச்சடி இவை பரிமாறப்பட்டபோது ஏதோ காணாதது கண்டது போல ஓர் உணர்வு! சோறு விரைத்துப் போய் விதை விதையாக இருந்தாலும் தயிரோடு கலந்து விழுங்கி விட்டு இரண்டு சுக்கா ரொட்டிகளையும் சாப்பிட்டு சுருக்கமாக மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டேன்.

    மதிய உணவு மிகுதியானால் ஓய்வெடுக்க உள்ளம் தூண்டும், சுற்றுலாவிலிருந்து கவனம் சிதறும் என்ற என் வழக்கமான போக்கைப் பொதுவாக எல்லாப் பயணங்களிலும் சற்று  விடாப்பிடியாகக் கடைப்பிடிப்பது என் வழக்கம். குறிப்பாக இப்படிப்பட்ட அரிதான பயணங்களின்போது பசிக்களைப்பில்லாமல் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே உணவைக் கருதவேண்டுமே தவிர, அதை ஒரு விருந்து போல ஆக்கிக்கொண்டு அசந்து போய்விடுவது பயண நோக்கத்தையே பாழ் செய்து விடக்கூடியது.

    எங்கள் ரஷ்ய சுற்றுலாவின் இரண்டாம் நாளான அன்று (24ஜூலை) மாலை அருங்கலைக்காட்சியகம் ஒன்றைக் காண்பதும் மாலை ஏழு மணி அளவில் ரஷ்ய நாட்டின் சிறப்புக்களில் ஒன்றான ரஷிய சர்க்கஸ் காட்சிக்குச் செல்வதும் எங்கள் பயணத்திட்டத்தில் இருந்தவை.

    உணவை முடித்துவிட்டுப் பேருந்தில் ஏறப்போகும் நேரம் பார்த்து என்னிடம் பாய்ந்து வந்தார் எங்கள் மாஸ்கோ வழிகாட்டியான டேன்யா. மாஸ்கோ வந்து சேர்ந்த கணம் முதல் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கி குறித்து அவரிடம் நான் விடாமல் அரித்தெடுத்துத் துளைத்துக்கொண்டு வந்திருந்தேன். தனிப்பட்ட முறையிலோ கல்விச் சுற்றுலாவாகவோ இல்லாமல் இப்படிப்பட்ட சுற்றுலாக்குழுக்களுடன் செல்லும்போது - குழுவினரோடு மட்டுமே - அதிலும்  பயணத் திட்ட வடிவமைப்பை சார்ந்து மட்டுமே செல்ல முடியும் என்பதையும்  நம் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வது கடினம் என்பதையும் நான் உணர்ந்திருந்தாலும் அவ்வப்போது என் உள்மன விருப்பத்தை - ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி சார்ந்த நினைவிடங்களைத் தொலைவிலிருந்தாவது எனக்குக் காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் நான் தொடர்ந்து விடுத்தபடியே இருந்தேன்.

    அதை நினைவில் கொண்டிருந்த டேன்யா, சாலையின் மறுபுறம் இருந்த ரஷ்ய தேசிய நூலகத்தையும் அதன் முன்பு கம்பீரமாக நின்றிருந்த தஸ்தயெவ்ஸ்கியின் சிலைவடிவையும் எனக்குக் காட்டினார். ரஷ்யப்பயணத்தை அந்த இலக்கிய ஆசானுக்காக மட்டுமே மேற்கொண்டிருந்த நான் தொலைவிலிருந்து அதைப் பார்த்தாலும் கூட மெய்சிலிர்த்துப் போனேன். இலக்கியத்தைக் கொண்டாடும் இந்த மண்ணில் - உலகஇலக்கியங்கள் பலவற்றின் ஊற்றுக்கண்ணான இந்த நாட்டில் - அதன் தேசியநூலகத்துக்கு முன்பாக ஒரு மாபெரும் நாவலாசிரியரின் சிலையை வடிவமைத்து வைத்திருந்தது தான் எத்தனை பொருத்தமானது.

    சுற்றுலாவில் வழிகாட்டுவது என்பது, தான் மேற்கொண்ட பணியாக இருந்தாலும் அதை ஒப்புக்குச் செய்யாமல் மனம் கலந்து செய்பவர் என்பதைத் தான் அழைத்துச்செல்லும் ஒவ்வொரு இடத்திலும் நிரூபித்துக் கொண்டே வந்தார் டேன்யா. உயரமும் கம்பீரமுமான தோற்றம், ஒரு குழுவைத் தலைமையேற்று நடத்துவதற்கான மிடுக்கான ஆளுமை, அங்கங்கே நேரம் ஒதுக்குவதிலும் நேரக்கணக்கைத் தவறாமல் கடைப்பிடிப்பதிலும் கண்டிப்பு!

    எடுப்பான குரலில் அங்கங்கே விரைவாக வழி நடத்திச்செல்லும் அவரது போக்கு, வயதில் மூத்த எங்கள் குழுவினர் சிலருக்கு அதிகார தோரணையாகத் தென்பட்டாலும் ஒரு வழிகாட்டிக்கே இருந்தாக வேண்டிய பொறுப்பையும், கடமையையும் அவர் மிகச் சரியாகச் செய்து வருவதாகவே எனக்குப் பட்டது. கல்லூரியில் பணியாற்றிய நாட்களில் மாணவியரோடு சுற்றுலாக்கள் பலவற்றை ஒழுங்கு செய்து வழி நடத்தியிருப்பதால், எந்த இடத்தையும் நேரம் பிசகாமல் காண்பதற்கும் எவரும் குழுவிலிருந்து பிரிந்து வழி விலகிப்போகாமல் இருப்பதற்கும் அவர் கையாண்ட அந்த வழிகளே முற்றிலும்
    சரியானவை என்பதை நான் நன்கு புரிந்து வைத்திருந்தேன்.

    இடங்களைக்காட்டி விளக்கம் தருவதோடு மட்டுமல்லாமல் தன் அளவு கடந்த நாட்டுப்பற்றையும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் டேன்யா வெளிப்படுத்திக்கொண்டே இருந்ததும் என்னைக் கவர்வதாக இருந்தது.

    கார்கி பூங்காவாகட்டும், செஞ்சதுக்கமாகட்டும்... எது பற்றிச்சொன்னாலும் ’இது என் தேசம்’ என்ற பெருமித உணர்வுடன் அதை வெளிப்படையாகச் சொன்னபடியே எங்களுக்கு எல்லா இடங்களையும் காட்டிக் கொண்டிருந்தார் அவர். தஸ்தயெவ்ஸ்கி சிலையை என்னிடம் சுட்டிக்காட்டிய அந்த வேளையிலும் கூட "இவர் எங்கள் நாட்டின் இலக்கியச்சொத்து" என்ற பெருமிதம் டேன்யாவிடம் கொப்பளித்துக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. அதனாலேதான் அத்தனை நேர நெருக்கடியிலும் என் கோரிக்கையை மறக்காமல் நினைவில் கொண்டபடி தேசிய நூலகத்தின் வாயிலிலுள்ள தஸ்தயெவ்ஸ்கியை அவரால் எனக்கு இனம் காட்ட முடிந்தது. தன் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த அந்த இலக்கிய மேதையின் மீது மொழிதெரியாத  ஏதோ ஒரு நாட்டிலிருந்து வந்த ஒருவர் அத்தனை ஆர்வம் காட்டுவது அவரை நெகிழ்த்தியிருக்க வேண்டும்.

    அடுத்தாற்போல அவர் எங்களை அழைத்துச்சென்ற இடம், மாஸ்கோவின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படும் ’ட்ரெட்யகோவ் நுண்கலை அருங்காட்சியகம்’. ரஷ்ய நாட்டு நுண்கலை வேலைப்பாடுகளின் களஞ்சியமாக அமைந்திருக்கும் இந்தக் காட்சியகத்துக்குப் பேருந்தை நிறுத்திய இடத்திலிருந்து சற்று நடந்து சென்றபோது காட்சியகத்தில் காணப்போகும் அரிய செய்திகளில் முதன்மையான சிலவற்றைத் தட்டிகளில் எழுதி அந்த வீதியின் குறுக்காக வைத்திருந்தார்கள். தகவல்கள் ரஷ்ய மொழியிலேயே தரப்பட்டிருந்தாலும் நாங்கள் எவற்றையெல்லாம் காணப்போகிறோம் என்பது பற்றிய  முன்னோட்டமாகவே அது அமைந்து விட்டது.

    மாஸ்கோ இந்நாட்டின் தலைநகராக இருந்தபோதும், பலநாட்டவரும் பல மொழி பேசுவோரும் வருகை புரியும் இடமாக இருந்தபோதும் அங்கிருந்த எல்லாஅறிவிப்புப் பலகைகளிலும் ரஷ்ய மொழியை மட்டுமே காண முடிந்ததே தவிர அதற்கு இணையான ஆங்கிலச் சொல் உடன் தரப்பட்டிருக்கவில்லை. மின் தூக்கிகள், ஓய்வு/ஒப்பனை அறைகள் ஆகியவை குறித்த அறிவிப்புக்களும் கூட அப்படித்தான். தங்கள் தாய்மொழியை எந்த அளவுக்கு அவர்கள் நேசிக்கிறார்களென்பதை அது எடுத்துக்காட்டிய போதும் அந்த மொழி தெரியாத பிறநாட்டுப் பயணிகளுக்கு – குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு அது சிக்கலளிப்பதாக இருப்பதை உணர்ந்து ஆங்கிலச் சொற்களையும் அவர்கள்  சேர்த்துக்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ட்ரெட்யகோவ் அருங்காட்சியகத்துக்கு நாங்கள் சென்று கொண்டிருந்தபோது எங்கள் குழுவில் சிலர் காலை முதல் கடும் வெயிலில் வெகு தூரம் சுற்றி அலைந்ததால் களைத்துப் போனவர்களாய் வெளியில் இருந்தபடியே ஓய்வு கொள்வதாகச் சொல்லி ஒதுங்கிக் கொண்டனர். உள்ளே சென்ற நாங்கள் திரும்பி வந்து அது குறித்த வருணனைகளை அடுக்கிய பிறகுதான் தாங்கள் எதையோ இழந்து விட்டதான உணர்வு அவர்களை ஆட்கொண்டது.

    மாஸ்கோ நகரில் பல அருங்காட்சியகங்கள் இருந்தபோதும் அவற்றையெல்லாம் தன்னிடமுள்ள கலைக்கருவூலங்களால் விஞ்சக்கூடிய தன்மை படைத்ததாக விளங்குவது ட்ரெட்யகோவ் நுண்கலை அருங்காட்சியகம். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரிலுள்ள லூவ் அருங்காட்சியகத்துக்கு ஓரளவு சமமாகும் தன்மை கொண்ட இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்க ஓரிரு மணிநேரம் மட்டுமே செலவிடுவது நிச்சயமாக அதற்கு நியாயம் சேர்க்க முடியாது என்றாலும் எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த குறைந்த பட்ச நேரத்தில் முடிந்தவரை சுற்றிப்பார்த்து அங்கிருந்த அருங்கலைப் பொக்கிஷங்களைக் கண்டு ரசிக்க நாங்கள் தவறவில்லை. 

    மாஸ்கோ நகரைச் சேர்ந்த பேவல் மிகேலோவிச் ட்ரெட்யகோவ், ஒரு வணிகர்; அதே நேரத்தில் அவர் கலைகளின் காதலரும் கூட! 1856 இல் தொடங்கி ரஷ்யநாட்டுக் கலைஞர்களிடமிருந்து  விலை கொடுத்து வாங்கித் தான் சேமித்து வந்த கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அரிய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை இந்நாட்டுக்கே உரியசொத்தாக 1892 இல் அவர் வழங்கி விட ரஷ்ய பாணிக் கலைகளின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் ஒரு காட்சியகம்  உருப்பெறத் தொடங்கியது. க்ரெம்லினின் தெற்குப் பகுதியில் ரஷ்ய நாட்டு தேவதைக் கதைகளில் இடம் பெறும் வீடுகளின் பாணியில் 1902–04 காலகட்டத்தில் இக்கட்டிடம் முழுமையாக வடிவமைக்கப்பட்டுக் காலப்போக்கில் விரிவுபடுத்தப்பட்டது.

    மேற்கத்திய நாடுகளில் வாழும் பெரும்பாலோருக்கும் ரஷ்யக்கலைப் பெருமைகள் இருபதாம் நூற்றாண்டு வரை மூடப்பட்ட புத்தகம் போலவே இருந்தன. உலகத்தாரால் மிகுதியும் அறியப்படாததாக இருந்த அவையனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தது இந்தக்காட்சியகம் உருவான பிறகுதான்.


     
    10 ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டு வரையிலான  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களும் சிற்பங்களும் ரஷ்யக்கலையின் படிப்படியான வளர்ச்சியையும் வெவ்வேறு காலகட்டங்களின் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப அவற்றின் உள்ளடக்கங்களில் ஏற்பட்டு வந்த மாற்றங்களையும் வெளிப்படுத்தியபடி  காட்சியகத்தில் உள்ள 62 அரங்குகளையும் அலங்கரித்து வருகின்றன. முழுக்க முழுக்க ரஷ்யத் தன்மை கொண்டவை என்றே அவற்றைக் கூறி விடலாம்.  மன்னராட்சிக் காலத்தைச் சேர்ந்தவை, போர்க்கொடுமைகளைக் காட்டுபவை,  இம்ப்ரஷினிச பாணி ஓவியங்கள், நிலப்புரபுத்துவ கால கட்டத்தில் ரஷ்யாவில் நிலவிய  அடிமை முறையை வெளிக்காட்டி அதன்  அவலங்களைச் சித்திரிக்கும் ஓவியங்கள், செவ்வியல் மற்றும் கற்பனாவாத பாணியைச் சேர்ந்தவை எனப் பலதரப்பட்ட
    வகைப்பாடுகள் கொண்டவை அவை.

    ட்ரெட்யகோவ் இயற்கையை மிகவும் நேசித்தவரென்பதால் பனி மூடிய மலைச்சிகரங்கள், குமுறும்கடல், பசுமை போர்த்தியிருக்கும் காடுகள், ஆறுகள், வானத்தின் பல வண்ணங்கள் என இயற்கைக் காட்சிகளுக்கும் அங்கே பஞ்சம் இல்லை. அருங்கலைப்பொருட்களை நேசித்ததோடு மட்டுமன்றி சிறந்த ஓவியத்திறமை கொண்டவர்களைத் தன்னிடம் அழைத்து அவர்களுக்கு உரிய சன்மானம் தந்து இந்நாட்டின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளான தல்ஸ்தோய், தஸ்தயெவ்ஸ்கி, துர்கனேவ் ஆகியோரின்  ஓவியங்களையும் வரையப் பணித்தார் ட்ரெட்யகோவ். அந்தப் படைப்பாளிகளின் புத்தக முகப்பட்டைகள் பலவற்றை இன்றுவரையிலும் அலங்கரித்து வருபவை அந்த ஓவியங்களே.

    ரஷ்யப்புரட்சி மலர்ந்து சோவியத் யூனியன் உருவான பின்பு சோஷலிசக் கோட்பாடுகளை வெளிப்படுத்தும் படைப்புக்களும் நவீன பாணிக் கலைப்படைப்புக்களும் கூட இந்தக்காட்சியகத்தில் இடம் பெறத் தொடங்கின.

    சமயச்சார்புகளை உள்ளடக்கியதாக இருக்கும் காட்சியகத்தின் முதல் தளத்தில் திருமுழுக்கு செய்பவரான ஜான் என்னும் புனிதர், மீட்பர் ஏசுவின் வரவைச் சுட்டிக்காட்டுவதான மிகப்பெரிய ஓவியம் ஒரு சுவர் முழுவதையும் நிறைத்துக் கொண்டிருக்கிறது. மனச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் தீட்டப்பட்டிருக்கும் அந்த வண்ண ஓவியத்தின் அருகே எங்கள் குழுவினர் பலரும் ஆர்வத்தோடு புகைப்படம்  எடுத்துக்கொண்டனர்.  காட்சியகத்தின் இரண்டாம்  தளம் இயற்கைச் சித்திரிப்புக்களுக்கானது.

    2012ஆம் ஆண்டில், இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தும் போரிஸ் ஜெஃப்லேண்டும் பங்கு பெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியும் கூட இந்தக்காட்சியகத்தின் ஓர் அரங்கிலே நடைபெற்றிருப்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

    அருங்காட்சியகத்தைப்பார்த்து முடித்து வெளியே வந்தபின் சிறிது நேரம் அருகிலிருந்த கலைப்பொருள் விற்பனைக் கடை ஒன்றில் சிறிது நேரம் செலவிட முடிந்தது. ரஷ்யாவுக்குச்சென்று வந்ததன் அடையாளமாக ஏதேனும் வாங்கிச் செல்ல நினைத்தால் அவை பொம்மைகள் மட்டும்தான். மரத்தில் செய்யப்பட்டு ஒன்றுக்குள் ஒன்றாக அடக்கப்பட்டிருக்கும் வினோத அமைப்புக்கொண்ட அந்த பொம்மைகள் பல வடிவங்களில் சிறிதும் பெரிதுமாகக் கடைகள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன.

    இரண்டாம் நாளின் இறுதி நிகழ்வாக நாங்கள் காண இருந்தது ரஷ்யநாட்டு சர்க்கஸ் காட்சி. சர்க்கஸ் கலைக்கும், அதை மிக நுட்பமாகப் பயின்று லாவகமாக வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கும் பெயர் பெற்ற நாடு ரஷ்யா. என் இளம் வயதில் நான் வசித்த சிறு நகரத்தில் மணல் பரப்பிய பொட்டல் வெளியில் கூடாரம் அடித்தபடி எந்தக் குழுவினர் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தினாலும் அது ரஷ்யன் சர்க்கஸ் என்றே விளம்பரப்படுத்தப்படும்; அந்த அளவுக்கு  இந்தநாட்டின் இன்னொரு தனித் தன்மையாக விளங்குவது சர்க்கஸ் கலை. 

    நாங்கள் சென்ற சர்க்கஸ் அரங்கம் குளிரூட்டப்பட்ட ஓர் உள்ளரங்கம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மிகவும் பிரம்மாண்டமான காட்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. குழுவில் என்னுடன் வந்திருந்த தோழி ஒருவர் மிகுந்த ரசனையோடு அவற்றில் லயித்திருக்க… எனக்கோ, காலை முதல் சுற்றி அலைந்த களைப்பில் கண் செருகிக் கொண்டு செல்ல, பயங்கரமான  தூக்கத்தின்
    வயப்பட்டிருந்தேன்; அந்தத் தோழி பல முறை பல விதமாகச் சுண்டி எழுப்பிப் பார்த்தும் என் துயில் கலைவதாக இல்லை. அதற்கு இன்னொரு காரணமும் கூட உண்டு. சிறுவயது முதலே சர்க்கஸ் காட்சிகள் எனக்கு உகப்பானதாக இருந்ததில்லை; அதுவும் ஒரு கலையே என்ற அளவில் அதை மதித்தாலும் கூட மனிதர்கள் இவ்வாறு தங்களையும் துன்பப்படுத்திக் கொண்டு வாயில்லா ஜீவன்களையும் துன்புறுத்துவதை சகிக்க முடியாததால் பள்ளி நாட்களிலேயே சர்க்கஸ் செல்வதை நான் தவிர்த்து விடுவேன்… இங்கும் கூட யானை, குரங்கு, பூனை, நாய் ஆகியவற்றை வைத்து வினோத வினோதமாய் வித்தை காட்டும் விளையாட்டுக்கள் பலவும்  அரங்கேறிக் கொண்டிருந்தன.

    ஒரு வழியாகப் பத்தரைக்கு அது நிறைவுக்கு வர நாங்கள் அஸிமுட் விடுதியோடு இணைந்த இந்திய உணவகத்துக்குச் சென்றோம். திருநெல்வேலியைச் சேர்ந்த அந்த உணவகத்தின் பொறுப்பாளர்களில் ஒருவர் சூடான சோறு, மிளகு ரசம், இட்லி ஆகியவற்றுடன் எங்களை வரவேற்றபோது நாம் இருப்பது ரஷ்யாவில் தானா! என்று கிள்ளிப் பார்த்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது...

    இன்றும் அறைக்குச் சென்று பொருட்களை ஒழுங்கு படுத்தி உறங்கும்போது நள்ளிரவாகி விட்டிருந்தது.

    - தொடரும்...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp