Enable Javscript for better performance
unnodu potti podu - 50| உன்னோடு போட்டி போடு - 50- Dinamani

சுடச்சுட

  

  கடலுக்கு மேலே கனல்...!

  By பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்  |   Published on : 27th November 2017 12:00 AM  |   அ+அ அ-   |    |  

  0000_unnodu_potti_podu_50

   

  உன்னோடு போட்டிபோடு! 50 

  கடவுள் ஷெர்லாக்ஹோம்ஸை நோக்கி, " இதோ இங்கே ஆயிரக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆண்கள் நான் படைத்த "ஆதாம்' வடிவிலும், பெண்கள் எல்லோரும் "ஏவாள்' வடிவிலும் இருக்கிறார்கள். இவர்களில் என்னால் படைக்கப்பட்ட முதல் மனிதர்களான ஆதாமும், ஏவாளும் இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் அவர்களை உன்னால் கண்டுபிடிக்க முடியுமா?'' என்று கேட்டாராம்.
  இந்தக் கதையைச் சொல்லிக்கொண்டு வந்த செழியன்' "ஷெர்லாக் ஹோம்ஸ் அவர்களைக் கண்டுபிடித்தாரா? எப்படிக் கண்டுபிடித்தார் தெரியுமா?'' என்று
  எங்களைப் பார்த்துக் கேட்டார். நாங்கள் ஆச்சரியத்தோடு அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தோமே தவிர, இதற்குப் பதில் சொல்லத் தோன்றவில்லை.
  உடனே தமிழ்மணி, "ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகிற இளைஞர்கள் எல்லாம் கொஞ்சம் யோசிங்கப்பா, ஷெர்லாக் ஹோம்ஸ்தான் அறிவாளியா? அந்தக் காலத்துல
  எழுத்தாளர் தமிழ்வாணன், சங்கர்லால் என்ற நுட்பமான அறிவு மிகுந்த துப்பறியும் பாத்திரத்தைப் படைத்திருப்பாரே அவர் கதைகளைப் படித்திருக்கிறீர்களா?'' என்று கேட்டார். 
  "ஏன் சமீபகாலத்தில் நம்மோடு வாழ்ந்த எழுத்தாளர் சுஜாதா, கணேஷ், வசந்த் என்கின்ற துப்பறிவாளர்களைத் (DETECTIVES) தம் கதைகளில்
  அறிமுகப்படுத்தியிருப்பாரே, அந்தக் கதைகளை யாராவது படித்திருக்கிறீர்களா?'' என்று நானும் கேட்டேன்.
  இளைஞர்கள் ஒருவருக்கொருவர் கூடிப் பேசினார்கள். ஹெட்போன் பாட்டியும், பேத்தியும் "ஐபேடுக்குள்' புகுந்தார்கள். மீசைக்காரர் என்ன செய்வது என்று
  தெரியாமல் மீசையை முறுக்கிக் கொண்டு பரபரப்பாக இருந்தார். 
  தமிழையா என்னைப் பார்த்து மெதுவான குரலில், "ஐயா இவர் கேட்கிற கேள்விக்குப் பதில்சொல்ல முடியாது போலிருக்கிறதே, திருவிளையாடல் புராணத்தில்
  "பலியேந்திய படலம்' பகுதியில் வரும் மர்மம் போலல்லவா இருக்கிறது'' என்று கேட்டார். "அந்த மர்மம் என்ன?'' என்று மீசைக்காரரும் மெதுவான குரலில்
  எங்களிடம் கேட்டார். 
  "மொதல்ல இந்த மர்மத்தைக் கண்டுபிடிப்போம், அப்புறம் அந்த மர்மத்துக்குப் போவோம்'' என்று தமிழையா, மீசைக்காரருக்குச் சமாதானம் சொல்லிக்
  கொண்டிருக்க, செழியன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "சரி உங்களுக்குக் கொடுத்த நேரம் முடிந்தது. நானே சொல்லட்டுமா?'' என்று கேட்டுவிட்டு,
  "ஷெர்லாக் ஹோம்ஸ் கடவுள் கேட்ட கேள்விக்கு விடை சொல்லும் முன்பாக, அந்த மனிதர்களை எல்லாம் ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தபடி நடந்து வந்தாராம்.
  சட்டென்று ஆண்கள் பகுதியில் இருந்த ஓர் ஆணையும், பெண்கள் பகுதியில் இருந்த ஒரு பெண்ணையும் சுட்டிக்காட்டி இவர்கள்தான் நீங்கள் முதன்முதலில்
  படைத்த ஆதாமும், ஏவாளும் என்றாராம். கடவுளே கைதட்டி "சபாஷ்' என்றாராம்'' என்று செழியன் சொல்லிமுடித்தார்.
  "ஆச்சரியமா இருக்கே! ஷெர்லாக்ஹோம்ஸ் அவர்களை எப்படிக் கண்டுபிடித்தார்'' என்று ஆர்வமாய் கேட்டார் மீசைக்காரர். செழியன் சொன்னார், "கடவுளால்
  படைக்கப்பட்ட ஆதாமுக்கும், ஏவாளுக்கும் மட்டும் தொப்புள் இருக்காது, மற்றவர்கள் அத்தனை பேரும் தாய் வயிற்றில் பிறந்து இறந்தவர்கள். ஆதலால்
  அவர்களுக்குத் தொப்புள்கொடி உண்டு. இப்படித்தான் ஷெர்லாக் ஹோம்ஸ் கண்டுபிடித்தார் என்று அவரைப்பற்றி புகழ்ந்து சொல்லும் கதைகள் உண்டு'' என்று
  சொல்லி முடித்தார். 
  ஹெட்போன் பாட்டி "எக்ஸலண்ட்' குழந்தைகளைப் பெறுகிற பெண்களாகிய நாங்கள் கூட இதை மறந்து போனோமே! தொப்புள்கொடி உறவுதானே மறக்கமுடியாத
  உறவு. பள்ளிகொண்ட பெருமாளாகிய திருமாலின் தொப்புள்கொடியில் தாமரை மலரில்தானே பிரம்மன் தோன்றினான். நீங்கள் சொன்னது ஆச்சரியமான
  விஷயம்தான்'' என்று பெருமிதமாகச் சொன்னார் ஹெட்போன் பாட்டி. 
  பின்னிரவு நேரம் தொடங்கியது. கடற்காற்று திசைமாறி வீசத் தொடங்கியது. ஊர் உறங்கும் நேரம் அது. ஆனாலும் நாங்கள் அத்தனைபேரும் விழித்திருந்தோம்
  என்றால், அதற்குக் காரணம் அது அறிஞர்கள், இளைஞர்கள் நிறைந்த, குழந்தைகள் சூழ்ந்த இயற்கைச் சூழலாக இருந்ததுதான் காரணம்.
  தமிழ்மணி மெதுவாக எழுந்து, "சரி நாம் அனைவரும் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். நாளை அதிகாலை உணவை முடித்துவிட்டு நாம் புறப்பட
  வேண்டியிருக்கும். நாம் வந்த படகினை நான் வரச்சொல்லி இருக்கிறேன்'' என்று அவர் சொல்ல எல்லோர் முகத்திலும் லேசான கவலையிருந்தது. அப்போது
  அந்தப் பேத்தி "அங்கிள், நாம இந்த புஃல் நைட் தூங்காம இருந்தா என்ன? ஐ வான்ட் டு ஸீ (SEE) த சன் ரைஸ் ஆன் த ஸீ (SEA)" என்றது ஆர்வமாக.
  "ஓ, பென்டாஸ்டிக் ஐடியா, ஷி (SHE) வான்ட்ஸ் டு ஸீ (SEE) த சன்ரைஸ் ஆன் த ஸீ (SEA)'' என்று ஆங்கிலத்தில் அடுக்கு மொழியாய்ச் சொல்ல அத்தனை பேரும் கைதட்டி மகிழ்ந்தோம். 
  "எனக்கும் அதுதான்யா ஆசை, இனி எப்ப எல்லாரும் இது மாதிரி ஒண்ணா சேரப்போறோம்? நான் யார்ட்ட இவ்வளவு கேள்வி கேட்கப்போறேன், எனக்கு உங்கள
  மாதிரி யார்தான் இப்படி மகிழ்ச்சியோடு பதில் சொல்லப் போறாங்க, அதுனால விடியிற வரைக்கும் கண் முழிச்சாத் தப்பு ஒண்ணும் இல்லையா'' என்று
  நெகிழ்ச்சியோடு சொன்னார் மீசைக்காரர். 
  அதுவரை அவரைக் கேலி செய்துகொண்டிருந்த இளைஞர்கள் கூட, இந்த வார்த்தையால் சற்றே கலங்கித்தான் போனார்கள். "இவுங்கள்லாம் தூங்காம
  முழிக்கலாம்ன்னு சொல்றப்ப, நாங்க மட்டும் தூங்கவா போறோம்? நடுநிசிக் காட்சிய நாலு மைல் நடந்து போய் பார்த்த நல்லவங்க நாலுபேர் எங்களோட உண்டு, மிட்நைட் மசாலாவ விடியக்கால வரைக்கும் கண் முழிச்சுப் பார்த்துட்டு மறுநாளு விடிய விடிய தூங்கின வீரர்களும் எங்களோடுதான் இருக்கிறாங்க, கண்முழிக்க நாங்க ரெடி, நீங்க ரெடியா?'' என்று கோமாளி சவால் விட்டார். 
  அப்போது கடலுக்கு நடுவே திடீரென்று நெருப்பு ஜுவாலை போல ஓர் உருவம் பறந்து பின் சுழன்று மறைந்தது. அதைப் பார்த்த அத்தனை பேரும் திடுக்கிட்டுப்
  போனோம். 
  "ஐயோ, கடல் பிசாசு'' என்று ஓர் இளைஞர் சத்தமிட, 
  "வாவ், வாட் எ பென்டாஸ்டிக் ஸீ (SEA) கோஸ்ட்'' என்று பேத்தி கத்த, மற்றவர்களும் அதை வியப்போடும், பயத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
  "கேப்டன் ஐயா, உங்ககிட்ட துப்பாக்கி இருந்தா அதச் சுடுங்க'' என்று ஒருவர் கத்தினார். அப்போது கடல்சார் பொறியியல் பேராசிரியர், "சற்று நேரம் அமைதியாக
  இருங்கள். அது பேயும் இல்லை, பூதமும் இல்லை'' என்றார். 
  "ராத்திரி பூரா தூங்காம இருக்கணும்னு நெனச்சது உண்மைதான், அதுக்காக பூதத்தோடையா முழிச்சுருக்கணும், அது என்ன சாப்பிடும்னு தெரியலையே, இன்னிக்கு
  அது விரதமா இருந்தாப் பரவாயில்லை'' என்று ஒருவர் புலம்பத் தொடங்கினார். 
  நானும் தமிழையாவும் கூட சற்றே பதறித்தான் போனோம். "சதுப்பு நிலங்களில் பூமிக்கடியில் இருக்கும் எரியும் தன்மையுள்ள காற்று எரிவாயுவாக வேகமாக
  வெளியேறி நெருப்பு ஜுவாலையாய் பற்றி எரியும் என்பதை நான் படித்திருக்கிறேன்'' என்று தமிழையாவிடம் மெதுவாகக் கிசுகிசுத்தேன். உடனே அவரும், "ஆமாம்
  ஐயா, பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகத்தில் கோடியக்கரை எனும் கடற்கரை பகுதியில் பூங்குழலி, கதாநாயகனாகிய வந்தியத்தேவனுக்குத் தன் காதலர்களைக்
  காட்டுவதாக நள்ளிரவில் கூட்டிச்சென்று சதுப்புநிலபூமியில் இருந்து புறப்பட்டு வெளிவரும் தீ ஜுவாலைகளைக் காட்டுவாள். ஆனால் இது கடலுக்கு நடுவே
  தெரிகிறதே, இது என்ன?'' என்று அவரும் சற்றே யோசித்தபடி கேட்டார். அந்தக் காட்சியால் பதட்டப்படாமல் இருந்தவர்கள் மீசைக்காரர், அங்கிருந்த மீனவ
  நண்பர்கள், அப்பகுதியைச் சேர்ந்த சில வயதான பெரியவர்கள் போன்றவர்கள்தான். 
  ஹெட்போன் பாட்டி மெதுவாக கடல்சார் பொறியியல் பேராசிரியரைப் பார்த்து "அது கடல்பூதம், பேய் என்றெல்லாம் இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே,
  உண்மையில் அது என்ன? எனக்கே ஒரு கணம் நடுக்கம் ஏற்பட்டுவிட்டதே! காடுகளில் வனமோகினிகள் இருப்பதைப் போல மலைப்பகுதிகளில் கொல்லிப்பாவை
  என்னும் உயிர்களை அழிக்கும் கானகப்பேய் இருப்பது போல இதுவும் கடல்பேய் தானோ? நீங்க படிச்ச பேராசிரியர். உங்களாலதான் சொல்லமுடியும்'' என்று
  கேட்டார். 
  அப்போது தமிழ்மணி, "பேராசிரியர் விளக்கம் சொல்றதுக்கு முன்னாடி நான் ஒண்ணு சொல்லட்டுமா? 
  "நெருப்பாய் - பளபளப்பாய்
  }சுடரொழுகும் ஜொலிப்பாய்
  ஆடியது அக்கினிப்பேய்-
  கடலுக்கு மேலே கனல்
  பற்றியது போல''
  என்று கவிஞர் வைரமுத்து தனது "தண்ணீர் தேசம்' நாவலில் இந்தக் கடல்பேயைப் பற்றி சொல்லியிருப்பார். இனி இதற்கான விளக்கத்தை நம் பேராசிரியர்
  சொல்லட்டுமே!'' என்று கேட்டுக் கொண்டார்.
  உடனே கடல்சார் பொறியியல் பேராசிரியர், "அது உண்மையில் பேய் அல்ல. கடல் பேயும் அல்ல, "நாட்டிலூக்கா ...' என்று அவர் தொடங்க, கூட்டத்தில் இருந்த
  ஒருவர் 
  "ஆ...' என்று அலறினார்.
  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai