Enable Javscript for better performance
மணிமுடி யாருக்கு என்று பிரச்சினை வரும் போது, அரசன் சிறையில் அடைக்கப்படுவான் (அ) இளவரசன் நாடு கடத்தப்- Dinamani

சுடச்சுட

  

  மணிமுடி யாருக்கு என்று பிரச்சினை வரும் போது, அரசன் சிறையில் அடைக்கப்படுவான் (அ) இளவரசன் நாடு கடத்தப்படுவான்: டி.டி.கோஷாம்பி

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 03rd February 2017 06:01 PM  |   அ+அ அ-   |    |  

  1_vedic

   

  படிக்கப் படிக்க வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது  பண்டைய இந்திய வரலாறு. நாம் இது வரையிலும்  நினைத்திருந்தது மாரியம்மன், கருப்பசாமி, ஐயனார், காளியம்மன் இன்னும் பலப் பல பெயர்களில் எல்லா கிராமங்களிலும வணங்கப்பட்டுக் கொண்டுள்ள  சிறுதெய்வங்கள் மட்டுமே இறந்து போன மூதாதையர்கள் அதாவது அவர்களது மரணத்தின் பல ஆண்டுகளுக்குப் பிறகு தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்ட கிராம தெய்வங்கள் என்பதே... ஆனால்  சரித்திரம் கூறுவது என்னவென்றால் நம்  பிரதான தெய்வங்களான ராமன், கிருஷ்ணன், மகிசாசுர மர்த்தினி, பசுபதி (சிவன்), ஏன் பலராமன், இந்திரன்,  இந்திரன் மனைவி உஷா, எமன் (கிரேக்க புராணங்களில் இமா) எல்லோருமே பழங்குடி மக்களின் மூதாதையர்கள், அதாவது இந்தியப் பூர்வபழங்குடி மக்கள் வணங்கி  வந்த தாய் தெய்வங்கள் மற்றும் ’இந்தோ ஆரியக்’ கலப்பின தலைவர்களில் பல வெற்றிகளை பெற்ற ஆரியகுல வீராதிவீரர்கள் போன்றவர்கள் வேதங்களை இயற்றிய ஆரிய புரோகிதர்களால் தெய்வநிலைக்கு புகழ்ந்து  ரிக்வேத பாசுரங்களில் பாடப்பட்டனர் என்று சான்றுகளின் அடிப்படையில் விளக்கம் தருகிறது. நம் ’கிருஷ்ணன்’ தான் கிரேக்க புராணங்களில் வரும் ’ஹெர்குலிஸ்’ என்பதை சில உதாரணங்கள் மூலமாகப் பார்க்கலாம்.

  ’அரை மனித அரைதெய்வ உருவகம் இருவருக்கும் பொருந்தும்’ மேலும் கிருஷ்ணன் யமுனை நதிக்கு செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு படுத்து மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்த காளியா (காளியமர்த்தனம்) என்கிற ஐந்து தலை சர்பத்தை அடக்கி அதன் தலை மீது நர்த்தனம் ஆடுகிறான். இதே விதமாக பல தலைகளைக் கொண்ட நாக சர்ப்பம் ஒன்றை ஹெர்குலிஸ் அடக்குவதாக கிரேக்க புராணம் கூறுகிறது. அதோடு கிருஷ்ணனின் இறப்பும் ஹெர்குலிஸின் இறப்பும் ஒரே விதமாகத் தான் நிகழ்கின்றன. வேடன் ஒருவன் எய்த அம்பு குதிகாலில் பாய்ந்ததால் கிருஷ்ணன் இறப்பதாக இதிகாசமும் வேதமும் கூறுகிறது. ஹெர்குலிஸ் அவ்வாறே இறக்கிறான். இந்த இறப்பின் மறுபக்கமிருப்பது பண்டைய பலி சம்பிரதாயமே.

  இன்னொரு அபூர்வ ஆச்சர்யமான உதாரணம்; ராமன் ஆரண்யம் செல்லுதல். இதற்கொரு காரணமாகக் கூறப்படுவது அன்றைய காலத்தே தொடக்க நிலை முடியரசில் எழுதப் படாத சட்டமாகப் பின்பற்றப் பட்டு வந்த ஒரு பழக்கம் மணிமுடி யாருக்கு என்று பிரச்சினை வரும் போதெல்லாம் ஒன்று அரசன் சிறையிலடைக்கப்படுவான் அல்லது இளவரசன் நாடு கடத்தப்படுவான். இதற்கு இராமாயணம் மட்டுமல்ல மகாபாரதத்திலும் உதாரணங்களைக் கூறலாம். பரதன் அரசுரிமை பெற வேண்டி கைகேயியால் இராமாயணத்தில் ராமன் நாடு கடத்தப்படும் தண்டனையை வலிந்து ஏற்கிறான்.

  மகாபாரதத்தில் கிருஷ்ணனின் மாமன் ஹம்சன் அரசுரிமைக்காக தன் தந்தை உக்கிர சேனரை சிறையில் அடைக்கிறான். மேலும் தன் தங்கை தேவகியையும் அவள் கணவர் வசுதேவரையும் சிறையில் தள்ளுகிறான். ஹம்சன் தன் தங்கையை  சிறையில் தள்ளக் காரணம் கதையில் சொல்லப்பட்டது போல அவளது வயிற்றில் பிறக்கும் மகன் இவனைக் கொல்லப் போவதால் என்பதைக் காட்டிலும் உண்மையை ஒட்டிய காரணம் ’அந்தக் காலத்தில் மதுராவை ஆண்ட உக்கிர சேனர் வம்சாவளிப் பழங்குடியினரின் முறைப்படி பெண் மக்களின் வாரிசுகளே அடுத்த வாரிசு உரிமையைப் பெற்று நாட்டை ஆள முடியும் என்பதால்’ எனக் கொள்ளலாம். அப்படியே நோக்கினால் ஹம்சன் கிருஷ்ணனை அழிக்க நினைத்தற்கான காரணம் அவன் அடுத்த மன்னனாகக் கூடும் என்பதால் மட்டுமே எனக் கொள்ளலாம். இந்த நிஜக் காரணத்தையே கிருஷ்ணனுக்கு தெய்வ அம்சம் தர எண்ணிய பிற்கால வைதீக பிராமணர்கள் தமது கற்பனைகளுக்கு ஏற்ப அதீத தெய்வீகத் திறமைகளை கிருஷ்ணனிடம் ஏற்றி வைத்து மகாபாரதக்கதை புனையப்பட்டிருக்கலாம் என்பது யூகம்.

  நதிக்கரை நாகரிகங்கள் தோன்றி வளர்ந்த இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சரியாகச் சொல்லப் போனால் கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கி.மு.2000 ஆண்டெனக் கணக்கிடப் படும் சிந்து சமவெளி நாகரிக காலம் தொட்டே இந்தியாவுக்கும் அல்லது மெசபடோமியாவுக்கும் இடையே வர்த்தகம் நடந்து வந்திருந்தது. சிந்துவெளி நாகரிக காலத்தில் இங்கிருந்து மயில்கள், முத்துகள் (மீன் கண்கள்) தந்தங்கள், போன்றவை ரோமுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன. அங்கிருந்து இங்கு இறக்குமதி ஆனவை என்னென்னவென்று குறிப்புகள் ஏதும் காணோம். இந்த வர்த்தகம் நடைபெற முக்கிய வியாபார கேந்திரமாக இருந்த இடம் பாரசீக வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் தீவு. இந்த பஹ்ரைன் தீவு தான் பைபிளில் காட்டப்படும் ’டில்மூன்’

  இந்த வர்த்தகத்தின் பெருமளவு லாபம் பஹ்ரைன் மன்னருக்கே எனினும் இந்த வர்த்தகத்தின் மிகப்பெரிய வாடிக்கையாளராகவும் அந்த மன்னரே இருந்திருக்கிறார் என்பதும் வரலாறு கூறும் செய்தி. மேலும் இந்த ’டில்மூனில்’ தான் ஊழிப்பிரளயம் நடந்த காலத்தே நமது ஆலிலைக்  கிருஷ்ணரைப் போல பைபிளில் காவிய நாயகனாகக் காட்டப்படும் ’சையசுதாஸ்’ இருந்ததாக பைபிள் கூறுகிறது. மேலும் இவனிடம் இருந்து சஞ்சீவினி ரகசியத்தை அறிந்து கொள்ள கிரேக்க காவிய நாயகன் கில் காமேஷ் அப்போது இவனைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் என்பதும் பைபிள் கதை. இதிலிருந்து சொல்ல விரும்புவது யாதெனில் தெய்வங்கள் யாவும் மனிதர்களால் சரியாகச் சொல்லப் போனால் ஆதிப் பழங்குடி மனிதன் நாகரிகம் பெற்று வளர வளர இந்நாள் வரையில் அவனது வளர்ச்சிக்கு தக்கவாறே தெய்வங்களும் வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டே வந்திருப்பதன் வடிவங்களைக் காணலாம். புத்தகம் இப்படி நிறைய அருமையான சிந்திக்க வைக்கத்தக்க வரலாற்று உண்மைகளைச் சொல்லிக் கொண்டே விரிகிறது.

  இந்தியாவில் நிலையான அரசுமுறையாக மலர்ந்த பெரிய சாம்ராஜ்யம் ”மௌரிய சாம்ராஜ்யமே!”மௌரியர்கள் சாம்ராஜ்ய நிலையை அடையும் முன்பு பண்டைய இந்தியாவில் திக்குக்கு ஒன்றாக சிந்து நதிப் பகுதிகளில் சிதறிக் கிடந்த பத்துக்கும் மேற்பட்ட பல்வேறுபட்ட ஆதிப் பழங்குடியினரை ஜெயிக்க வேண்டிய அவசியம் இருந்தது. மௌரிய சாம்ராஜ்யத்திற்கு முன்பே மகத ராஜ்ஜியம் இருந்தது. மகதமும் கோசலமும் புராதன இந்திய ராஜ்யங்கள். இந்த ராஜ்யங்கள் தவிர்த்து முரட்டு வனங்களாக இருந்த கங்கைப் புறத்துக் காடுகளை அழித்து அவற்றை தேர்ந்த விவசாய பூமியாக மாற்ற அந்த மக்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. முன்பே கூறியதன் படி;

  இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பழைய கற்காலத்தில் சுமார் 250 மனிதர்கள் தான் இருந்தனர், அவர்களும் 10 சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்திருந்தனர் என புதை பொருள் ஆராய்ச்சியாளர் கிரஹாம் க்ளெர்க் கூறுகிறார். இங்கிலாந்து ,ஸ்காட்லாந்து ,அயர்லாந்து ஆகிய பகுதிகளில் இடைக்கற்காலத்தில் மனித சமூகத்தில் 4500 நபர்களும்; புதிய கற்காலத்தில் 20,000 நபர்களுமே வாழ்ந்திருக்க சாத்தியமிருப்பதாக மேற்படி தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன.

  வரலாற்றுக்கு முந்தைய கற்காலங்களில் வாழ்ந்த பூர்வகுடியினர் வேட்டைத்தொழில் செய்தே வாழ்ந்து வந்தனர். அந்த மனிதர்களுக்கு உணவை சேகரிக்க மட்டுமே தெரிந்திருந்தது. உணவு உற்பத்தி பற்றி அம்மக்கள் அறிய நேர்ந்த பல ஆயிரம் ஆண்டுகளின் பின் கி.மு 2000 ஆண்டுக் காலத்தில் புதிய கற்காலத்தில் இருந்த மனிதர்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு எண்ணிக்கை கொண்ட மனிதர்கள் மட்டுமே வாழ்ந்திருக்க சாத்தியம் உண்டு.

  இதற்கு சம காலத்தில் இந்தியாவிலும் இதைப் போல ஒரு மதிப்பீடு சாத்தியமில்லை, இந்திய துணைக்கண்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் கற்காலத்தில் பத்து சதுர மைல்களுக்கு ஒருவருக்கு மேல் இருந்திருந்தால் அதுவே மிகவும் வியப்புள்ளது.

  இப்படி இருந்த காலத்தில் இருந்து மீண்டு சிந்துவெளி நாகரிகத்தில் ’வெண்கலத்தின்’ பயனை அறிந்தது மனித சமுதாயம்.

  அதன் பிறகு துருக்கியரின் படையெடுப்பின் பின் இரும்பை ’இரும்பின்’ பயனை அறிந்தார்கள், அதையே ஹிட்டைடு காலம் என அறிகிறோம்.

  உலோகங்களின் பயன்களை ஒவ்வொன்றாய் அறிந்த பின்பே மனிதனின் நாகரிக வளர்ச்சி படிப்படியாக நிகழ்கிறது.

  வடக்கே மௌரிய சாம்ராஜ்யம் நிலைபெற்று விட்ட போதிலும் தென்னிந்தியாவில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்த ஒரு பேரரசுகளும் தோன்றி இருக்க காணோம். கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வடக்கே பெரிய சாம்ராஜ்யங்கள் தோன்றி விட்டன. ஆயினும் தெற்கில் முற்கால சோழர்கள் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கல்லணை கட்டிய கரிகால் சோழன் ஆட்சியெல்லாம் கி.மு ஒன்றாம் நூன்றாண்டில் தான் இங்கே நிகழ்ந்தது. கரிகாலனுக்கு முன்பு சொல்லிக் கொள்ளும் படியான பேரருசுகள் எதுவும் தென்னிந்தியாவில் இல்லை எனலாம்.

  கி.மு இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவனின் இளவல் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் படைத்தார். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இன்னுமுள்ள பதினெண் கீழ்கணக்கு நூல்களும், பத்துப் பாட்டு, எட்டுத்தொகை நூல்களும் இல்லாவிடில் நாம் தென்னிந்திய வரலாற்றை கிஞ்சித்தும் அறிந்திருக்க வழிவகை இல்லை. மதுரையைப் பொறுத்தவரை கோவலனைக் கொன்றவனாக கண்ணகியால் குற்றம் சாட்டப்பட்ட பாண்டியன் நெடுஞ்செழியனை அறிய முடிகிறது. இவர்களே அன்றைய தென்னிந்திய அரசுகள். நமது கண்ணகி தான் சேர நாட்டில் பகவதி என்ற பெயரில் உக்கிர தேவியாக வணங்கப்படுகிறாள்.

  சில வருடங்களுக்கு முன் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பில் அயோத்தியில் ராமர் பிறந்த செய்தி ஊர்ஜிதம் செய்யப்பட்டது. அது உண்மை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தன்ர். ராமன் பிறந்த அயோத்தி பண்டைய இந்தியாவில் முதன் முதலில் நிலவிய இரு அரசுகளான மகதம் மற்றும் கோசலத்தில் கோசல நாட்டின் பிற்காலத்திய தலைநகராக விளங்கியது. சரித்திரப்படி ராமன் நாடு கடத்தப் படும் தண்டனையை வலிந்து ஏற்றுக் கொண்ட பின் அவன் தெற்கு நோக்கி கடந்து வந்த பாதையே ’தட்சினாபதம்’ எனும் தெற்கு நோக்கிய பிரபல ’வியாபார கேந்திரப் பாதையானது’ , அதாவது வர்த்தகப்பாதை. அப்படி எனில் ராமன் எனும் இளவரசன் நாடு கடத்தப்பட்டு காடுகளில் புகுந்து புறப்பட்டு தென்னிந்தியாவை நோக்கி வந்த இதிகாசக்கதை உண்மையாக்கப்படுகிறது. மேலும் இன்னும் பற்பல தொடர்புபடுத்தத்தக்க உதாரணங்கள் அநேகம். விதேகர்கள் அல்லது வைதேகர்கள் என்போர் மிதிலையை ஆண்டனர். வைதேகர்கள் என்போர் வணிகர்கள் என்கிறது வேதம். அந்த மிதிலை மன்னனின் மகளே ’வைதேஹி’ என்றும் அழைக்கப்படும் ’ஜானகி’ என்ற ’சீதா பிராட்டி’ .

  இப்படி இதிகாசக் கதைகள் மற்றும் வேதங்களில் உள்ள குறிப்புகளின் துணை கொண்டு நாம் நமது பண்டைய இந்தியா குறித்த சித்திரத்தைப் பெற முடிகிறது. பிற்காலப் பிராமணர்கள் செய்த பயனுள்ள காரியம் புராதன இந்தியப்பழங்குடிகள்(ஓரண, சந்தால், புரூக்கள், அலினார்கள், மத்சியர்கள், மோர்கள்(மௌரியர்கள்), லிச்ச்சாவிகள், வணங்கிய தாய் தெய்வங்கள் மற்றும் ஆரியப் படையெடுப்பின் பின் வணக்கத்திற்கு ஆளான இந்திரன்,வருணன் ,மித்திரன், கிருஷ்ணன் ( கிருஷ்ணன் ஆரியன் அல்லன் ...ஆரியர்களுக்கு எதிரான தஸ்யூக்கள் குலப் பிரிவான யதுக்களின் தலைவன்) அவனையும் பிற்காலத்திய பிராமணர்கள் ஒன்றிணைத்து ஒருங்கிணைத்து எல்லோரும் பொதுவில் வணங்கும்  பெருதெய்வங்கள் ஆக்கினர். அதோடு அந்த தேவன்கள் அனைத்திற்கும் அவர்களே உரிமையாளர்கள் என்பதாய் பிரகடனம் செய்து கொண்டனர். இப்படி விரிந்து செல்கிறது இந்திய சரித்திரம்.

  ஒவ்வொரு பக்கத்தையும் இரண்டு மூன்று முறை வாசிக்க வேண்டி இருக்கிறது. வருடங்கள், மன்னர்கள், பழங்குடிப் பிரிவுகள், நதிக்கரை நாகரிகம் என்ற நிலை தாண்டி உட்புறத்து அடர் கானகங்கள் அழிக்கப்பட்டு பழங்குடி விவசாயம் பலப்பட்ட நிலை ( இந்த நிலை வர உலோகங்களின் கண்டுபிடிப்பும் அவற்றின் பயனை அறிவதும் முக்கியமானது) காடுகளை அழிக்க கடினமான இரும்பின் பயன் அத்தியாவசியமானது. இப்படி இரும்பு கண்டு பிடிக்கபட்ட பின்பே நிலையான வேகமான முன்னேற்றம் நிகழ்ந்தது எனக் கொள்ளலாம்.

  ஆதார நூல்கள்:

  பண்டைய இந்தியா- டி.டி.கோசாம்பி

  மித் அண்ட் ரியாலிட்டி- டி.டி.கோசாம்பி

  பதினோராம் வகுப்பு- வரலாறு புத்தகம்

  தி ஹிஸ்டரி ஆஃப் ஆரியன் ரூல் இன் இண்டியா- இ.பி.ஹாவெல்

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai