கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? போல நடன ஆசிரியையே தமிழறிஞராகவும் இருப்பது டபுள் ட்ரீட்!

திருநெல்வேலியில் இருந்த காலத்திலிருந்தே பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரனிடம் நடனம் கற்க வேண்டும் என்று ஆசை. என் மகன் விக்னேஷ் பத்துமாதக் குழந்தையாக இருந்தபோது என் ஆசை நிறைவேறியது.
கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? போல நடன ஆசிரியையே தமிழறிஞராகவும் இருப்பது டபுள் ட்ரீட்!


நடன ஆசிரியை ஒருவர் தமிழறிஞராகவும் இருப்பது அரிது. அப்படியொருவர் இருக்கிறார் என்னும் பெருமைக்குரியவர் முனைவர் லட்சுமி ராமசுவாமி. குறிப்பாக, சங்க இலக்கியங்களில்  புலமையுடையவர். சென்னை கோட்டூர் புரத்தில் ஸ்ரீமுத்ராலயா நடனப்பள்ளியை கடந்த 23 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். நடனம் மற்றும் நடன வடிவமைப்பில் செய்து வரும் சாதனைகள் பற்றியும், சங்க இலக்கியங்களில் முழுவதும் அறியக் கிடைக்காமல் போன நடனக்கலைக்குரிய "கூத்த நூல்' பற்றியும் பல அரிய தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

"நான் பிறந்தது சென்னையென்றாலும், வளர்ந்தது - படித்தது - நாட்டிய குரு இந்திரா கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் நடனம் பயின்றது எல்லாம் திருநெல்வேலியில்தான். எனது நடன அரங்கேற்றம் நடைபெற்றது நெல்லை சங்கீத சபையில்தான். திருமணத்திற்குப்பின் 1990-லிருந்து மீண்டும் சென்னை வாசம் தொடங்கியது.

திருநெல்வேலியில் இருந்த காலத்திலிருந்தே பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரனிடம் நடனம் கற்க வேண்டும் என்று ஆசை. என் மகன் விக்னேஷ் பத்துமாதக் குழந்தையாக இருந்தபோது என் ஆசை நிறைவேறியது. நடனம் என்றால் பாடலுக்கு ஆடுவது மட்டும் என்றிருந்த எனது மதிப்பீட்டைத் தகர்த்தது அவரிடம் கிடைத்த வகுப்புகளால்தான். ஒரு நடனமணிக்கு நடனம் என்பது ஒரு உன்னத பொறுப்பு; எனவே, Be a thinking dancer என்பார். அவரது வீட்டிலே அத்தனை புத்தகங்கள். எனக்கு படிக்கத் தடையின்றிக் கிடைத்தன. நிறைய விஷயங்களைப் பற்றி பேசுவார், சிந்திப்பார், கற்றுத் தருவார். ஒரு குருகுலம் போல ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் அவருடன் நேரம் செலவிடக் கிடைத்தது எனது வாழ்வின் பாக்கியம். பின்னர், முனைவர் பத்மா சுப்பிரமணியம் அவர்களிடம் கரணங்களைக் கற்கவும், கலாநிதி நாராயணன் அவர்களிடம் அபிநய வகுப்பு வாய்ப்புகளும் இறைவன் அருளால் எனக்குக் குறைவின்றிக் கிடைத்தன.

நடனம் ஆடுவது தவிர நடனத்தினைப் பற்றி எழுதுவது, பேசுவது, நடனம் அமைப்பது, பயிற்சிப் பட்டறை செய்வது, பாடமாக பல்கலைக் கழகத்தில் நடத்துவது  இவற்றையெல்லாம் நான் செய்வேன் என எண்ணியதில்லை. ஆனால் அவை தானாக எனது வாழ்வில் அமைந்தது. 

இந்திய அரசின் மாணவர் ஊக்கத்தொகை (senior scholarship), ஐக்கிய அமெரிக்க அரசின் ஃபுல் பிரைட் ஃபெலோஷிப் (Fulbright Fellowship), சென்னைப் பல்கலைக் கழகத்தில் பரதநாட்டியத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம், ரோம் நகரில் நடந்த மாநாட்டில் பங்கேற்பு, உலக செம்மொழி மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வாசிப்பு என பல அமைந்தன. தற்போது சிலப்பதிகாரத்தில் இசை, நாட்டியம் மற்றும் நாடகக்கூறுகள் என்ற ஆராய்ச்சியினை Senior fellowship-க்காக செய்து கொண்டிருக்கிறேன்.

பல நடன மணிகள் சில பாடல்களை சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்து செய்தாலும், செம்மொழித்தமிழின் சங்க கால இலக்கியங்கள் பலவற்றினை (நற்றிணை, புறநானூறு, ஐங்குறு நூறு) முழுநீள நடனத் தயாரிப்பாக வடிவம் தந்ததில் முன்னணி என்னுடைய நடனப் பள்ளியே என பெருமையுடன் கூறலாம். சங்க இலக்கியம் தவிர, தூது, கலம்பகம், குறவஞ்சி, தேவாரம், திவ்யப்பிரபந்தம், புதுக்கவிதை ஆகியவற்றையும் நடன வடிவில் இரசிகர்கள் மகிழும் வண்ணம் தந்திருக்கிறேன். தாய் மொழி தமிழில் அதிக ஆர்வம் என்றாலும் மீரா பஜன், தாஸர் நாமாக்கள், தெலுங்கில் ஷேத்ரையார் பதங்கள், ஜாவளிகள், தஞ்சை நால்வர் வர்ணங்கள், கீர்த்தனைகள் போன்றவற்றையும் செய்திருக்கிறேன். சங்க இலக்கியங்களை மேடையேற்ற தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சிறு மானியம் அளித்து உதவியுள்ளது. மத்திய அரசின் (Ministry of culture) கலை-கலாசார மையத்தின் தயாரிப்பு உதவியும் கிடைத்துள்ளது. "ஐந்தும் ஐயனும்', "ஆளாவது எப்படியோ', "சுந்தர காண்டம்' ஆகிய முழுநீளத் தயாரிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுத் தந்தன. 

"கூத்த நூல்' எனப்படும் சுவை நூல், தொகை நூல், வரி நூல், கலை நூல், கரண நூல், தாள நூல், இசை நூல், அவை நூல், கண்ணூல் ஆகிய நவ நூல்களை ஆராய்ச்சி செய்து, சுவை நூலின் குறிப்புகளைக் கண்டெடுத்து, எனது முனைவர் பட்ட ஆராய்ச்சியினை "கூத்த நூலின் இழைகள்' என்ற பகுதியில் செய்தேன். பல காரணங்களால் இந்நூலின் சிறப்பு அறியக் கிடைக்காமலே இருந்தது. இந்த ஆராய்ச்சினால் இவ்விலக்கண நூலின் சிறப்பை எடுத்துக்கூற இயன்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கு சென்னை மியூசிக் அகாடமியின் ஃபெலோஷிப் கிடைத்தது.

பல ஆண்டுகளாக நான் படித்த கலை சார் இலக்கண-இலக்கியச் செய்திகளைத் தொகுத்து, ʻʻShall we know Natyaʼʼ என்று புத்தகமாக வெளியிட்டுள்ளேன். நடனம் சார்ந்த 25 கட்டுரைகள் அடங்கிய இப்புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு தலைப்பிலும் தமிழ் மற்றும் சமஸ்கிருத பாரம்பரியங்களை விளக்கியும் ஒப்பிட்டும் எழுதியுள்ளேன். ஆசான் ரகுராமன் அவர்களுடைய தமிழர் நடன வரலாறு நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். 

சோதனைகள் இல்லாவிட்டால் சாதனைகள் இனிக்காது அல்லவா? முதலில், கீழ்நடுத்தரவர்க்க குடும்பத்திலிருந்து நடனம் போன்ற கலைகளைத் தொடர்ந்து செய்வதென்பது மிகவும் கடினம். பேருந்து தவிர வேறு வாகனங்களில் பயணம் செய்ய முடியாத நிலைமையில், உடைகளும், ஆபரணங்களும், ஆடல் நிகழ்வினுக்கான செலவுகளையும் செய்வது மிகக் கடினமாகவே இருந்தது. இந்த சமயத்தில் தொடர்ந்து ஆதரவளித்த எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பலமுறை நன்றி கூற வேண்டும்.

பல சோதனைகளுக்கு நடுவே விபத்தினால் எனது கால் மூட்டுத்தசையில் ஏற்பட்ட காயம் வேறு. அதனை அறுவைசிகிச்சை மூலம் செப்பனிட்டுத் தந்த மருத்துவர்கள் டாக்டர் ஆறுமுகம் மற்றும் தியாகராஜன் ஆகியோர் நன்றிக்குரியவர்கள். கடவுள் அருளால் மனதிற்கு நிறைவான கலை வாழ்வாகக் கிடைத்திருக்கிறது.

-ரவிவர்மா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com