இந்துஸ்தானத்தின் அமர காதல் கதைகளில் ஒன்று!

தன்னிடம் பெண் கேட்டு வரும் புன்ஹனுக்கு ஒரு பரீட்சை வைக்கிறார். காதல் பரீட்சை ஆயிற்றே அமர காதலன் தோற்பானா? சஸ்சியின் தந்தை ஊரார் துணிகளை எல்லாம் சுத்தமாக துவைத்து இஸ்திரி போடும் பரீட்சையை புன்ஹனுக்கு
இந்துஸ்தானத்தின் அமர காதல் கதைகளில் ஒன்று!

சஸ்ஸுயி & புன்ஹன்...

பலுசிஸ்தான் நாடோடிக் கதைகள் இன்றும் இவர்களது அழியாக் காதலை முடிவற்றுப் பேசிக் கொண்டிருக்கின்றன. இந்துஸ்தானத்தின் சிந்தி பகுதியைச் சேர்ந்த பாம்போரே எனும் குறுநில மன்னரின் மகள் தான் சஸ்ஸி. ஆனால் அவள் பிறந்த அடுத்த கணமே, அரண்மனை ஜோதிடர்கள், அரச குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டி ஒரு சாபமாகவே அவள் இங்கு வந்து பிறந்திருக்கிறாள் என்று கூறி விடவே அறியாமையாலும், ஜோதிடத்தின் மீதிருந்த கண் மூடித்தனமான நம்பிக்கையாலும்  ராஜா, தனது மகளை ஒரு மரப்பேழையில் வைத்து சிந்து நதி தீரத்தில் விட்டு விடச் சொல்லி கட்டளையிடுகிறார். அரச கட்டளைக்கு மறுப்பு ஏது?!

அப்படி ஆற்றில் விடப்பட்ட குழந்தை ஒரு வண்ணான் கைகளுக்குப் போய்ச் சேருகிறது. குழந்தைப்பேறில்லாத அவன், அந்தக் குழந்தையை தனக்குக் கிடைத்த வரமாகவே எண்ணி மிகக் கருத்தோடு வளர்க்கின்றான். குழந்தையும் வளர்கிறது, அவளோடு சேர்ந்து அவளது பேரழகும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இந்துஸ்தானத்தின் சூதர்களும், வணிகர்களும் செல்லுமிடந்தோறும் பரவுகிறது. சஸ்ஸியின் பேரழகைப் புகழாதோர் யாருமில்லை.  இப்படித்தான் சஸ்ஸியின் அமரக் காதலனும் , பலூச்சி( பலுசிஸ்தான்) மலைப்பழங்குடி இனத்தலைவனான மிர் அல்லியின் மகனுமான மிர் புன்ஹன் நாடோடிகள் வாயிலாக சஸ்ஸியின் அழகைப் பற்றி அறிகிறான்.

அறிந்ததிலிருந்தே அவனுக்குத் தனது ஊரில் இருப்புக் கொள்ளவில்லை. அந்தப் பேரழகை எப்படியாவது ஒருமுறை தரிசித்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் பலுசிஸ்தானத்தில் இருந்து (இன்றைய பாகிஸ்தானின் ஒரு பகுதி) பாம்போரேவுக்கு பயணிக்கிறான். இங்கே வண்ணான் வீட்டுப் பெண்ணாக வளர்ந்து பருவ வயதை எட்டிய சஸ்ஸியை எப்படிச் சந்திப்பது? தனது அழுக்குத் துணிகளை வண்ணானான அவளது தகப்பனிடத்தில் துவைக்கப் போட்டால்....  துணிகளை வாங்கும் சாக்கில் போக வர அவளைப் பார்க்கலாம் என திட்டமிட்டு தன் எண்ணத்தைச் செயலாக்குகிறான். 

ஒரு மலைப்பழங்குடி இளவரசன், தன்னை முன்னிட்டே இத்தனையும் நிகழ்த்தும் போது சஸ்ஸிக்கு அவன் மீது காதல் உண்டாகிறது. இருவரும் பழகுவதை அறிந்த சஸ்ஸியின் வளர்ப்புத் தந்தையான வண்ணான், எப்படியாகிலும் தன் மகள் ஒரு சிறந்த வண்ணானை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டுமே தவிர வேறெவரையும் அல்ல, அவளது வாழ்க்கைக்கு அது மட்டுமே பாதுகாப்பு என முடிவு செய்கிறார். அதனால், தன்னிடம் பெண் கேட்டு வரும் புன்ஹனுக்கு ஒரு பரீட்சை வைக்கிறார். காதல் பரீட்சை ஆயிற்றே அமர காதலன் தோற்பானா? சஸ்சியின் தந்தை ஊரார் துணிகளை எல்லாம் சுத்தமாக துவைத்து இஸ்திரி போடும் பரீட்சையை புன்ஹனுக்கு வைக்க அவன் துணிகளைத் தோய்க்கிறான். அவன் தோய்த்துத் தரும் துணிகளைக் கண்டு ஊரார் அவனைப் பாராட்ட வேண்டும். அப்படியல்லாது யாரேனும் ஒருவர் அவனது துவைக்கும் திறனைப் பற்றி குறை கூற முன்வந்தாலும் தன்னால் சஸ்ஸியை புன்ஹனுக்கு மனமுடித்துத் தர இயலாது என்கிறார் சஸ்சியின் வளர்ப்புத் தந்தை.

ஒரு இளவரசனாக அவன் அதுவரை வாள் பயிற்சி, குதிரையேற்றம், ஈட்டி எறிதல், வேட்டைக்குச் செல்தல் என வாழ்ந்திருந்தானே அன்றி அவனது துணிகளை அவன் ஒருநாளும் தோய்த்துப் பழகியிருக்கவில்லை. அதற்கான அவசியமும் அவனுக்கு இதுவரை வந்ததில்லை. ஆனால் இன்றோ... காதலியின் தகப்பன் இப்படி ஒரு பரீட்சை வைத்து விட்டாரே?! என்ன செய்வது?! துவைத்துத் தான் தீர வேண்டும். அப்படி ஒரு திடமான முடிவோடு புன்ஹன் ஊராரின் துணிகளைத் துவைக்கிறான். அடடா... அவன் துவைத்த வேகத்தில் எல்லாத் துணிகளுமே ஏதோ ஒரு விதத்தில் கிழிந்து தொங்கவே மனமுடைந்து போன புன்ஹனுக்கு திடீரென ஒரு ஐடியா வருகிறது.

அவனிடம் தான் ஏராளமாகத் தங்கக் காசுகள் உண்டே. அதில்  சிலவற்றை எடுத்து கிழிந்த துணிகள் ஒவ்வொன்றிலும் வைத்து ஊராருக்கு தருகிறான். தங்களது ஆடைகளை விடப் பலமடங்கு மதிப்பு கொண்ட தங்கக் காசுகள் கிழிந்த துணிகளுக்கு ஈடாகக் கிடைக்குமென்றால் ஊராருக்குக் கசக்குமா என்ன? அவர்கள் சந்தோசமாக தங்கக் காசுகளைப் பெற்றுக் கொண்டு புன்ஹனின் துவைக்கும் திறனை ஆகா... ஒஹோ எனப் புகழ்கின்றனர். ஊராரின் பாராட்டுதலையும், மெச்சுதலையும் கண்டு மனம் மகிழ்ந்து போய் தன் மகளை புன்ஹனுக்கு மணமுடித்துத் தர ஒப்புக் கொள்கிறார் சஸ்ஸியின் வளர்ப்புத் தந்தை.

ஆனால், அமர காதல் என்றால் எதிர்ப்பில்லாமல் சாத்தியமாகுமா?! சஸ்ஸி, புன்ஹன் காதலுக்கும் மிகத்தீவிரமான எதிர்ப்பு எழுகிறது. எங்கிருந்து என்றால்? அது புன்ஹனின் அரண்மனையில் இருந்து; ஒரு வண்ணான் பலூச்சி இளவரசனின் திருமணத்தை நடத்தி வைப்பதா? அவனது பாரம்பரியம் என்ன? பரம்பரைப் பெருமை என்ன? அவனுடைய கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா எல்லாம் எப்பேர்ப்பட்ட மகாவீரர்கள்! அந்த மரபில் வந்த புன்ஹனுக்கு ஒரு அரசிளங்குமாரியைத் தேடி விவாஹம் செய்விக்க நினைத்தால் போயும் வீடு, வீடாக அழுக்குத் துணிகளை வாங்கித் துவைத்துத் தரும் ஒருவனது மகள் தங்கள் அரண்மனையின் இளவரசிகளில் ஒருத்தியாவதா? என்று ரொம்பவும் கெளரவம் பார்த்த புன்ஹனின் தந்தையும் அவனது சகோதரர்களும் திருமணத்தைத் தடுப்பதற்காக பாம்போரேவுக்கு விரைந்து வருகிறார்கள். என்ன தான் ரதத்திலும், குதிரையுலுமாக கடுகிப் பாய்ந்து வந்தும் அவர்களால் திருமணத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர்கள் வருவதற்குள் திருமணம் நடந்து முடிந்து விடுகிறது.

உள்ளுக்குள் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் கரை மீறிக் கொண்டிருந்த போதும் புன்ஹனின் சகோதரர்கள் மிகத் தந்திரமாக அவனது திருமணத்தை பந்தத்தை முறியடிக்கத் திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி அவர்கள் தங்களது தரப்பிலும் அத்திருமணத்தை அங்கீகரித்து விட்டதாகவும், அதற்கொரு அடையாளமாக அன்றைய இரவே மண விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் ஊர்மக்களும், சஸ்ஸியைச் சேர்ந்தவர்களும் அவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்கள். புன்ஹன் அகமகிழ்ந்து போகிறான். இரவில் மிகப் பிரமாண்ட விருந்து நடைபெறுகிறது. களிமண்ணில் சுட்ட கோழிக்கறி, முயல் இறைச்சி, காட்டுப்பன்றி இறைச்சி, மான் இறைச்சி, முழு இளங்கன்றின் இறைச்சி, இனிப்பு, காரமெனத் தனித்தனியே திகட்டும் அளவுக்கு மிருதுவான கோதுமை ரொட்டிகள், குடம், குடமாக மதுவும், திராட்சை ரசமும் என விழாவும், விருந்தும் அல்லோலகல்லோலப் பட்டது.

விருந்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் உண்ட மயக்கத்திலும், மது மயக்கத்திலுமாக ஆங்காங்கே உருண்டு, புரண்டு கிடந்தனர். நேரம் நள்ளிரவைத் தாண்டிக் கொண்டிருந்தது, மிதமிஞ்சிய சந்தோஷத்திலும், பேரழகியான புது மனைவியை தனித்துச் சந்திக்கவிருக்கும் முதலிரவு குறித்த குதூகலக் கனவுகளிலும் ஆழ்ந்திருந்த புன்ஹனை அவனது சகோதரர்கள் இன்னமும்  மது விருந்திலிருந்து வெளியேற அனுமதித்த பாடில்லை. மேலும், மேலுமென விதவிதமான திராட்சை ரசங்களை அழகிய யவனக் கோப்பைகளில் நிரப்பி அவனை அருந்த வைத்துக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் அவனால் மறுக்க முடியாமல் போகவே மிதமிஞ்சிய இறைச்சியுணவாலும், மதுவாலும் மயங்கிப் போகிறான். இதற்குத் தானே ஆசைப்பட்டோம் பாலகுமாரா? என ஒருவருக்கொருவர் விசமப் புன்னகையைப் பரிமாறிக் கொண்ட சகோதரர்கள் தங்களது கூடாரத்தை விட்டு வெளியில் எட்டிப் பார்க்க ஊரே மயக்கத்தில் இருப்பது தெரிந்தது.

மணப்பெண் சஸ்ஸி மட்டும் தான் அன்றைய இரவில் அப்போதும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தவள். அவளுக்கும் கூட, கணவனை இன்னும் காணா விட்டால் என்ன? அவர் அவரது சகோதரர்களுடன் தானே இருக்கிறார், வந்து விடுவார் என்ற எண்ணம் தான் மிகுந்திருந்தது. அதனால் நள்ளிரவைத் தாண்டிய சில நாழிகைப் போதில் அவளும் சோர்ந்து போய் உறங்கத் தொடங்கி விட்டாள்.

பொழுது விடிந்தது... சஸ்ஸி தன் கணவனைத் தேடினாள். கணவன் மட்டுமல்ல, அவனுடன் இருந்த அவனது சகோதரர்கள், உடன் வந்த வீரர்கள் என எவரையும் காணோம். அந்த ஊரில் புன்ஹன் என்ற இளவரசனுக்கும், தனக்கும் நேற்று திருமணம் நடந்ததும் அதையொட்டி நிகழ்த்தப்பட்ட களி விருந்தும், கள் விருந்தும் கூட கனவோ, மதி மயக்கோ என சஞ்சலப் படும்படியாக இருந்தது புன்ஹன் இல்லாத தனிமை. உள்ளும், புறமுமாகக் கணவனைத் தேடி ஓய்ந்த சஸ்ஸி தன் வளர்ப்புத் தந்தையிடம் கூடத் தெரிவிக்காமல் அந்தக் கணமே தன் கணவனைத் தேடி தன்னந்தனியே காலில் பதாகைகள் கூட  அணியாது மணக்கோல உடுப்பில் புறப்பட்டு விடுகிறாள். இதுவரை அவள் பாதங்கள் அந்த ஊரின் எல்லையைக் கூடத் தாண்டியதில்லை.    `ஆனால் இப்போது கணவனுக்காக எல்லை தாண்டி அவனைத் தேடத் துணிந்து விட்டாள். நடுவில் எல்லையற்றுப் பரந்து விரிந்து கிடந்தது பாம்போரேவை அடுத்த பாலைவனம். அவள் பொருட்படுத்தவில்லை... ஒருமுறை தனது தேசம் பலூச்சி என புன்ஹன் தன்னிடம் கூறியதை மனதில் வைத்து அதையே உடும்பாய்ப் பற்றிக் கொண்ட சிந்தையோடு சஸ்ஸி பாலைவனத்தில் தனது பயணத்தைத் தொடர்கிறாள்.

அனிச்ச மலர் போன்ற மிக மெல்லிய மிருதுவான மேனிகொண்டவளாதலால் பாலைவனக் கொடும் வெப்பத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவளது வதனம் வதங்குகிறது. இரவிலோ கடுங்குளிர், பகலிலோ சுட்டெரிக்கும் சூரியன் என மல்லுக்கட்டிக் கொண்டு நடந்தாலும் அவளது வாய் புன்ஹனின் பெயரை சதா ஜபம் செய்யத் தவறவில்லை. அவள் வேறேதும் பேசினாளில்லை. கணவனின் பெயரை மட்டுமே மந்திர ஜபம் போலும் உச்சரித்துக் கொண்டு நடந்தாள். நடுவில் ஓரிடத்தில் அவளால் தாங்க இயலாத அளவிக்கு இயற்கை அவளை வாட்டி வதைக்கிறது. சஸ்ஸிக்கு உதடுகள் வெடித்துப் போய், வறண்டு போன சருமத்துடன் சுட்டெரிக்கும் உச்சிச் சூரியனின் இரக்க்மற்ற தன்மையால் தலை சுற்றிக் கொண்டு வந்து ஓரிடத்தில் மயங்கி விழுந்து விடுகிறாள். சற்று நேரம் யாருமே அவளைக் கவனித்திர வாய்ப்பில்லாது போயிருக்குமாயின் பாலைவன சூறாவளியொன்றில் மணல் மூடி மூச்சு முட்டி இறந்தே போயிருப்பாள். ஆனால் விதியென ஒன்று உண்டே! அவள் விழுந்த நேரத்தில் வெகு அருகிலிருந்த பாலைவனச் சோலையொன்றில் இடையனொருவன் தன் குடிசையிலிருந்து எதற்காகவோ வெளியில் வந்து எட்டிப் பார்த்தவன்.. தூரத்தில் பெண்ணொருத்தி மயங்கித் தரையில் சரிவதைக் கண்டுவிடவே... அவளைக் காக்கும் எண்ணத்துடன் ஓடி வருகிறான். வந்தவன் தந்து தோல் குடுவையில் இருந்த தண்ணீரை அவளுக்குப் புகட்டவே மயக்கம் தெளிந்து சஸ்ஸி எழுந்தமருகிறாள்.

அத்துவானப் பாலைவனம், தன்னந்தனிமை, அருகிலொரு பேரழகுப் பெண். இடையன் நல்லவனாகவே இருந்தும் அவனால் சஸ்ஸியின் மீது தனக்கெழுந்த தாபத்தை அடக்க முடியவில்லை. இங்கே இவளை யார் வந்து அழைத்துச் செல்லப் போகிறார்கள், என்ற எண்ணத்தில் அவளை அடைய முயல்கிறான். இயற்கையின் பழிவாங்கலைப் பொருத்துக் கொண்ட சஸ்ஸியால், தன்னையொத்த மானிடன் ஒருவனால் தனக்கு நிகழவிருந்த மானபங்கத்தைப் பொருத்துக் கொள்ள இயலவில்லை. தன் உயிர் காத்தவன் என்றாலும் கணவனுக்கென தன் மனதில் வரித்த இல்வாழ்வைக் கண்டவனுடனும் வாழவேண்டிய நிர்பந்தம் தனக்கில்லை என்று தீர்மானித்த சஸ்ஸி, அவனிடமிருந்து தப்பியோடுகிறாள். ஒரு கட்டத்தில் அவளால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத சோர்வில் கண்கள் மயங்க சிந்தை மருள சஸ்ஸி மனமுருக இறைவனை அழைக்கிறாள்,  ‘ஒன்று என்னை என் கணவனிடம் சேர்பித்து விடு இல்லையேல் இச்சை கொண்ட மானிடர் கண்களில் படாத வண்ணம் என்னை உனக்குள் மறைத்துக் கொள்’ என, நெக்குருகி வேண்டுகிறாள். அவளது வேண்டுதல் இறைவனின் செவிகளைச் சென்றடைந்ததோ... இல்லையோ உடனடியாக அவளது காலடி மண் நழுவ அவ்விடத்தில் பூமி நெகிழ்ந்து கொடுக்க அப்படியே பூமிக்குள் புதைந்து போகிறாள் சஸ்ஸி. இதைக் கண்ணாரக் கண்ட ஒரே சாட்சி இடையன் மட்டுமே! அவனும் மன வேட்கையால் தான் செய்யவிருந்த தவறை எண்ணி தனக்குள் குமைந்து போய் பலமுறை தனக்குத் தானே மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்கிறான்.

இங்கே பலூச்சியில்... ஊர் திரும்பிய மூன்றாம் நாளே புன்ஹனால் மயக்கம் தெளிந்து தன்னைச் சுற்றி நடப்பவற்றை அவதானிக்க முடிந்தது. தன் மனைவியிடமிருந்து பிரிக்கப்பட்டு சகோதரர்களின் சூழ்ச்சியால் தான் பலுசிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்டதை அறிந்து உயிரற்றவன் போல் அரற்றுகிறான் புன்ஹன். யார் தடுத்தும், அவனால் ஒரு நொடி கூட சஸ்ஸியின்றி அங்கிருக்க முடியவில்லை. சஸ்ஸி போலவே எதைக் குறித்தும் கவலைப்படாமல் வெறும் காலோடு பாலைவனத்தைக் கடந்து தன் மனைவியை அடையும் வேகத்தில் பலூச்சியிலிருந்து காற்றாகக் கடுகி விரைகிறான் புன்ஹன். சஸ்ஸியைப் போலவே அவனது உதடுகளில் இருந்தும் அப்போது கசிந்து கொண்டிருந்த ஒரே வார்த்தை ‘சஸ்ஸி...சஸ்ஸி’ எனும் ஒரே நாம ஜபம் மட்டுமே. அந்தப் பாலைபெருமணம் வெளியில் சஸ்ஸி இருந்தால் அல்லவோ அவனது அழைப்புக்கு பதில் குரல் அளித்திருக்கக் கூடும். அத்துவானப் பாலவனத்தில் ஒரு இளம்பெண்ணைத் தேடி பித்துப் பிடித்தவன் போல ஒரு ஆடவன் அலைவதைக் கண்ட இடையன் அவனை அணுகி, தான் கண்ட பெண் தான், அவன் தேடும் பெண்ணா என வினவுகிறான். புன்ஹன் தன் மனைவியின் பெயர் சஸ்ஸி எனவும், தன் பெயர் புன்ஹன் எனவும்... அவளைத் தேடியே தான் இங்கே வந்ததாகவும் கூறவே, புன்ஹன் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் இடையனுக்கு டான் கண்ட பெண்ணின் கணவனே இவன் என்பது புரிந்து விடுகிறது. அவளுக்கு நேர்ந்த கதியை அவன் அப்படியே புன்ஹனுக்குச் சொல்ல. சஸ்ஸி பூசமாதி அடைந்த அதே இடத்துக்கு விரைந்த புன்ஹன் மரண வலியில் இரு கைகளை உயர்த்தி முழு சரணாகதி போல ஆன்மாவிலிருந்து கரைந்து வந்த அழுகையினூடே ‘ இறைவா என்னை என் மனைவியுடன் சேர்ப்பித்து விடு, இல்லையேல் இங்கே இந்த மண் பிளந்து அவளைப் போல என்னையும் விழுங்கி ஏற்றுக் கொள்... அவளற்ற உலகில் நான் வாழ்தல் வீண். அது மரணத்துக்கு ஒப்பானது’ என தொழுது நிற்கவே அடுத்த நொடி பூமி பிளந்து அவனை உள்ளிழுத்துக் கொண்டது.

சஸ்ஸியும், புன்னுவும் உயிரோடு சமாதி அடைந்த இடம் இது தானாம்!

சஸ்ஸியையும், புன்ஹனையும் பூமித்தாய் தனக்குள் கவர்ந்து வைத்துக் கொண்டாலும் இன்றும் கூட அவர்கள் இருவரும் பூமிக்குள் சமாதியடைந்த அந்த மலைப்பள்ளத்தாக்குப் பகுதி காதலர்களின் வணக்கத்திற்குரிய இடமாகவே திகழ்கிறது. அமர காதலுக்கு இலக்கணமாக தனது பிரியத்துக்கு உகந்த ஆணோ, பெண்ணோ  இவ்வுலகில் இல்லாவிடில் தம்மாலும் வாழமுடியாது என முடிவெடுத்து மாண்டுபோன அந்த இளஞ்ஜோடி உலகை விட்டு நீங்கினாலும் அவர்தம் நினைவுகள் இன்னும் நீங்கியபாடில்லை. பலுசிஸ்தான் பகுதியில் இப்போதும் உலவும் மிகப்பிரபல்யமான நாடோடிக் கதைகளில் இவர்களின் கதையும் ஒன்று.

அம்பிகாபதி, அமராவதி; பிரித்வி ராஜ், சம்யுக்தா; சலிம், அனார்கலி கதை போல, இதுவும்கூட  நிஜத்தில் நடந்ததாகவே சரித்திரம் காட்டுகிறது. சிலர் இதைக் கற்பனை என்கிறார்கள். ஆயினும் கெச் மக்ரானில் இப்போதும் இவர்கள் இருவரும் பூமிக்குள் மறைந்த சமாதி என ஓரிடம் அடையாளம் காணப்படுவதும் வாஸ்தவமே!

இந்த வருட காதலர் தின ஸ்பெஷலாக இவர்களையும் நாம் நினைவு கூறலாம். இவர்களின் கதை கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கதை. அப்போதும் அந்தஸ்து பேதம் ஆணவக் கொலை, பெண்களுக்குப் பாதுகாப்பின்மை போன்றவை நிலவு வந்தன. எத்தனை நூற்றாண்டுகளாகியும் இச்சமூகம் மாறவேயில்லை. அப்படியேதான் இருக்கிறது! கொண்டாட்டங்கள் மட்டுமே வித்யாசப்படுகின்றன. அந்தஸ்து பேதங்கள் நிறைந்த காதலுக்கான எதிர்ப்பு மட்டும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com