மண்டை காயவைக்கும் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட இதையெல்லாம் உடனடியாக செய்து பாருங்கள்!

இந்த உபாதையிலிருந்து விடுபட முடியுமா? என்றால் நிச்சயம் முடியும்? அதற்காக அதிகமாகப் பணமும் செலவழிக்கத் தேவை இல்லை.
மண்டை காயவைக்கும் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட இதையெல்லாம் உடனடியாக செய்து பாருங்கள்!

வெயில் இப்பவே பட்டையைக் கிளப்ப ஆரம்பித்து விட்டது. கொட்டும் வியர்வைக்கு அளவே இல்லாமல் இருக்கிறது. முகம் வியர்த்தால் அப்பொழுதைக்கு அப்பொழுது கழுவிக்கொள்ளலாம். ஆனால் தலைமுடிக்குள் வியர்த்தால் அடிக்கடி தலைமுடியை அலசிக்கொள்ளவா முடியும்? 

அதுவும் பெண்களின் பாடு இருக்கிறதே, ரொம்பக் கஷ்டம். சரி. பொடுகு எப்படி வருகிறது? 

தலையின் மேற்புறத்தில் உள்ள சருமத்தில், இறந்து போன உயிரணுக்களின் வெளிப்பாட்டினையே பொடுகு என்கிறோம். வெயில் நாட்களில், அதிக வியர்வை ஏற்படும் பொழுது, வியர்வையில் உள்ள உப்பு. தலையில் தங்கி விடுவதாலும், பொடுகு உண்டாகும். இந்தப் பொடுகு வந்துவிட்டால், தலையில் ஏற்படும் அரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது.  வீடாக இருந்தால் ஒரு பெண், தன்  தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, இரண்டு கைகளையும் தலையில் வைத்து, பரக் பரக் என்று சௌகர்யமாக சொரிந்து கொள்வாள். அதுவே ஆபீசாகவோ, பொது இடமாகவோ இருந்தால் அவளால் என்ன செய்ய முடியும்? ஒரு விரலாலோ அல்லது பேனாவினாலோ லேசாக அதுவும் நாசூக்காக சொரிந்து கொள்வாள். ஆணாக இருந்தால், பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து, லாவகமாக முடியை வாரிவிட்டுக் கொள்வான். 

இந்த உபாதையிலிருந்து விடுபட முடியுமா? என்றால் நிச்சயம் முடியும்? அதற்காக அதிகமாகப் பணமும் செலவழிக்கத் தேவை இல்லை. அன்றாடம் உபயோகிக்கும் வீட்டிலுள்ள பொருட்களின் உதவியோடு பொடுகுக்கு டாட்டா சொல்லி விடலாம். 

 வீட்டில் நிச்சயம் பேக்கிங் சோடா இருக்கும். ஒரு கை பேக்கிங் சோடாவை எடுத்து, தலையில் தேய்த்து, முடியை வெறும் தண்ணீரில் அலசுங்கள். இரண்டு வாரம் தொடர்ந்து செய்தால் போதும். துப்புரவாகப் போய்விடும். 

 நான்கு டீஸ்பூன் ஆலிவ் அல்லது ஆல்மெண்ட் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளவும். தலையில், மண்டையோட்டில் படும்படி பரபரவென்று தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு முடியை அலசவும். இம்முறையை மூன்று நாளைக்கொருமுறை செய்யவும். விரைவில் குணம் தெரியும். 

 தரமான தூள் உப்பை எடுத்துக் கொண்டு, முடிக்கால்களில் படுகிறாற்போல் அழுந்தத் தேய்த்து விட்டு, ஷாம்பூ போட்டு குளிக்கவும். அப்புறம் பாருங்கள். பொல்லாப் பொடுகு பொடிப் பொடியாகிவிடும்.

 வீட்டில் எலுமிச்சம்பழம் இருக்கிறதா? கவலையை விடுங்கள். இரண்டு ஸ்பூன் எலுமிச்சம்பழ சாற்றினை, தலையில் நன்றாகத் தடவிக் கொள்ளவும். தலையை வெறும் நீரில் அலசவும். மீண்டும் ஒரு ஸ்பூன் எலுமிச்சம்பழ சாற்றிற்கு ஒரு கப் தண்ணீர் என்கிற விகிதத்தில் தலையை தனியாக அலசவும். பொடுகு தலைதெறிக்க வாபஸாகி விடும். 

ஆஸ்பிரின் மாத்திரையில், சாலிசிலிக் ஆசிட் உள்ளது. இது பொடுகை ஒழிக்கும் ஷாம்பூவில் உள்ள மருத்துவப் பொருள் அதுதான். இரண்டு ஆஸ்பிரினை எடுத்துப் பொடித்து, வழக்கமாக உபயோகிக்கும் ஷாம்பூவுடன் கலந்து, தலையில் தேய்த்து, இரண்டு நிமிடங்கள் ஊறவும். தலையை அலசிய பின், வழக்கமாக உபயோகிக்கும் ஷாம்பூ போட்டு மீண்டும் தலையை அலசவும். ஆச்சர்யப்படும் படியான குணம் தெரியும். பொடுகுத் தொல்லை குறைந்தால், முடி உதிர்வதும் குறையும். 

மேற்படி கொடுத்துள்ளதில், எது உங்களுக்கு சௌகர்யமாக உள்ளதோ அம்முறையைப் பின்பற்றலாம். 

பிறகு என்ன? இரு பாலாருக்கும் குஷிதானே? ஆணாக இருந்தால் ரஜினி ஸ்டைலில் அலட்டிக் கொள்ளலாம். பெண்ணாக இருந்தால், பிடித்த ஹேர் ஸ்டைலில், தலையில் கை வைக்காமல் தூள் கிளப்பலாம். என்ஜாய் பண்ணுங்க. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com