காதலி காதலிப்பது காதலனுக்கு தெரியாமலேயே...

கல்லூரி மாணவர்களுக்கிடையேயான காதலை மையமாக வைத்து மிக எளிமையாகவும், எதார்த்தமாகவும் எடுக்கப்பட்டு 1980ல் வெளியான 'ஒருதலை ராகம்' என்ற படம் இன்றும் காதலின் வலியை சொல்லும் படமாக இருக்கிறது. 
காதலி காதலிப்பது காதலனுக்கு தெரியாமலேயே...

படத்தின் தலைப்பிற்கு ஏற்றார்போல் காதலி காதலிப்பது காதலனுக்கு தெரியாமலேயே முடிவடைகிற படம் ஒருதலை ராகம்.

1980-ஆம் ஆண்டு வெளியான இப்படம் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான காதலை மையமாக வைத்து மிக எளிமையாகவும், எதார்த்தமாகவும் எடுக்கப்பட்டது.

இப்படத்தில் நாயகன் ராஜாவாக சங்கரும், நாயகி சுபத்ராவாக ரூபா நடித்துள்ளார்கள். இப்படத்தின் இயக்குநர் இப்ராஹிம் என்று டைட்டிலில் வரும். ஆனால் இப்படத்தை இயக்கியது டி.ராஜேந்தர் என்று பேச்சு உண்டு. படத்தின் ஒளிப்பதிவு ராபர்ட் ராஜசேகரன். இப்படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் ஏறக்குறைய புதுமுகங்கள் என்றும் கூறலாம்.

இப்படத்தின் நாயகன் ராஜா வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். அம்மா இல்லை, அப்பா சிங்கப்பூரில் வசித்து வருவதாக கூறுகிறார்கள். நாயகன் ராஜா கல்லூரியில் படிப்பதற்காக இங்கு கிராமத்தில் தனியே வசித்து வருகிறான். ஆனால் நாயகி சுபத்ரா மிக ஏழ்மையான குடும்பத்தைச்  சேர்ந்தவள். தந்தை இல்லை, அம்மா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறாள்.

படத்தின் துவக்கமே நாயகன் ராஜாவை மூர்த்தியாக (நடிகர் சந்திரசேகர்) மாணவர் சங்கத் தலைவனிடம் இவன் எனது நண்பன் என அறிமுகப்படுத்துகிறார். பின் கதாநாயகி மற்ற அனைவரும் கதைக்குள் வருகிறார்கள். நாயகன் ராஜா, நாயகி சுபத்ராவை பார்த்த முதல் சந்திப்பிலேயே அவள்மீது காதல் கொள்கிறான்.

படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கல்லூரி விழா மேடையில் டி.ராஜேந்தர் ஏக்.. தோ.. தீன்.. என இந்தி பாடல் ஒன்று பாட, அதற்கு மாணவர்கள் மேடையிலிருந்து கீழிறங்குமாறு கூச்சலிட அதற்கு  டி.ராஜேந்தர் மாணவர்களைப் பார்த்து 'ஏம்பா மேடை ஏறினதில் என்ன தப்பு இந்தி தெரியாதா' என்று கேட்டு 'எங்கே நீ வந்து பாடு' என்று கூற அதற்கு நடிகர் தியாகு நாயகன் ராஜாவை 'இவன் ரொம்ப நல்லா பாடுவான்' என்று கூறி மேடையேற்றி பாடவிடுகிறார்கள். ‘மன்மதன் ரட்சிக்கனும் மங்கையர் காளைகளே’ என்ற பாடலை பாடுகிறான்.

நாயகி சுபத்ரா அவளது குடும்பச்சூழல் காரணமாக யாரிடமும் பேசுவது கிடையாது. ஒருவித சோகத்துடனே இருப்பது போல இருப்பாள். மேலும் தன் தோழி லாவண்யாவிடம் (நடிகை உஷா) மட்டுமே பேசுவதாக கதை அமைந்திருக்கும்.

இப்படம்  கிராமம் சார்ந்த கல்லூரி, ரயில் பயணம் மற்றும்  கல்லூரி வளாகம் மாணவர்களுக்கிடையேயான உரையாடல் போன்ற நிகழ்வுகளுடன் மாணவர்களை சுற்றியே கதை ஓட்டம் அமைந்துள்ளது. காதலியைத் தொடாமல் காதலித்த முதல் படம் ஒருதலைராகம். நாயகனைச் சுற்றி ஒரு மாணவர் கூட்டம், நாயகியைச் சுற்றி மாணவிகள் கூட்டம் இவர்களுக்கிடையேயான உரையாடல்களுடன் கதை நகர்கிறது.

படத்தில் ’வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது’, ’கடவுள் வாழும் கோவிலிலே’, இன்றளவும் காதலில் தோல்வியடைந்தவர்கள் கேட்கும் பாடலாக ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்ற பாடலும் ‘என் கதை முடியும் நேரமிது’ என அனைத்துப் பாடல்களும் ரசிகர்களை கவர்வதாக அமைந்துள்ளது. 

தொடர்ந்து நாயகன் ராஜா தன் காதலை நாயகி சுபத்ராவிடம் தெரிவித்தும் பதில் இல்லாததாலும், மேலும் சில சந்தர்ப்பங்களில் சுபத்ரா ராஜா மீது வெறுப்பை காட்டியதாலும் ராஜா மனமுடைந்து நோய் வாய்ப்படுகிறான். 

கல்லூரி இறுதிநாளில் மூர்த்தி (நடிகர் சந்திரசேகர்) மாணவர்களிடம் கூறும் கதை இன்றளவும் பேசப்படுகிறது.

"ஒரு அழகான வெள்ளை ரோஜாவை ஒரு குருவி காதலிச்சுதாம். அந்த வெள்ளை ரோஜாவோ நான் எப்போ சிகப்பா மாறுகிறனோ அப்ப தான் உன்னை காதலிப்பேன் என்று சொல்லிச்சாம். அதற்கு அந்த குருவி நீ எப்போ சிகப்பா மாறுவது நான் எப்போ உன்னை காதலிக்கிறது என சொல்லி அந்த ரோஜா செடியில் இருக்கிற முள்ளில் தன்னுடைய உடம்பை குத்தி உடம்பில் உள்ள ரத்ததை எல்லாம் சிந்த அந்த ரோஜாவும் கொஞ்சம் கொஞ்சமாக சிகப்பா மாறிகிட்டோ வந்துச்சாம். அந்த ரோஜா முழு சிகப்பா மாறுகிற போது அந்த குருவி உயிரோட இல்லை செத்துப்போச்சு" என்று கூறி நான் சொன்ன கதை யாருக்கு புரியுதோ, இல்லையா சுபத்ரா உனக்கு கூடவா புரியலா என்று மூர்த்தி கூற பார்வையாளர்களை சோகத்தின் எல்லைக்கே கொண்டு செல்கிறது படம்.

கிளைமாக்ஸில் சுபத்ரா ராஜாவுக்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கிறாள். ராஜாவும் மூர்த்தியும் ரயிலில் கல்லூரி நாட்களின் அனுபவங்களை பேசிக்கொண்டுவருகிறார்கள். ரயில், ரயில் நிலையம் வரும் சமயம் ராஜாவுக்கு உடல் நிலை மோசமடைய மூர்த்தி தண்ணீர் கொண்டுவர செல்லும் சமயத்தில் ரயிலில் அமர்ந்திருக்கும் ராஜா இறந்து விடுகிறார்.  

இச்சமயம் ராஜா எதிரில் வந்து அமர்ந்த சுபத்ரா, "நீங்க இன்னைக்கு வருவீங்கன்னு எனக்கு தெரியும். நீங்க என மனதை எந்த அளவுக்கு புரிஞ்சு வச்சிருக்கீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்" என்று கூறி "நீங்க அன்றைக்கு சென்னீங்களே நான் ஒரு வட்டத்துக்குள்ளே இருக்கன்னு அந்த வட்டத்தை தாண்டி வந்துவிட்டேன். நீங்க தான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ணீட்டேன்" என்று கூறுகிறார். "என்ன நானே தான் பேசுறேன் நீங்க பேச மாட்டேங்குறீங்க என் மீது கோபமா" என்று கேட்க ரயில் கிளம்பவே ராஜா இறந்தது சுபத்ராவுக்கு தெரிகிறது. அவன் மடியில் விழுந்து கதறி அழுகிறாள். 

சுபத்ரா காதலுக்கு சம்மதம் தெரிவித்ததை அறியாமலே ராஜா இறந்துவிடுகிறான்.

ரயில் வருவதைக் காட்டித் தொடங்கும் இந்தத் திரைப்படம், ’ரயில் பயணத்தில் துணையாய் அவள் வந்தாள்’ என்ற பாடலுடன் மீண்டும் ரயில் காட்சியுடனே முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com