தினமும் காபி குடிப்பவர்களுக்கு 'அல்சைமர்' வரும் வாய்ப்பு குறைவு: ஆய்வில் தகவல்

தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபியுடன் உங்களுடைய நாளைத் தொடங்குகிறீர்களா? அப்படியெனில் இந்த நல்ல செய்தி உங்களுக்குத்தான். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபியுடன் உங்களுடைய நாளைத் தொடங்குகிறீர்களா? அப்படியெனில் இந்த நல்ல செய்தி உங்களுக்குத்தான். 

தினமும் காபி குடிப்பவர்களுக்கு அல்சைமர் எனும் ஒருவகை மறதி நோய் வரும் வாய்ப்பு குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு. 

எந்தவொரு சூழ்நிலையையும் தேநீர், காபியுடன் பகிர்ந்துகொள்ளும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சந்தோஷமானாலும் சரி, துக்கமானாலும் சரி ஒரு காபி அல்லது டீ குடித்துவிட்டு ஆசுவாசம் பெறுபவர்கள் ஏராளம். பெரும்பாலானோருக்கு காலையில் எழுந்ததும் காபி/டீ யோடு தான் அந்த நாள் தொடங்கும். 

அதிலும் தற்போது மணக்க மணக்க காபிக்கு அடிமையானோர் அதிகம். கடைகளைத் தேடி தேடி காபி அருந்தும் நபர்களின் நாமும் ஒருவராக இருக்கக்கூடும்.  

காபி, டீ குடிப்பது நல்லதா? கெட்டதா? காபி, டீ இவற்றில் எது நல்லது போன்ற ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. எனினும் பொதுவாக காபியில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால் உடலில் நச்சுகளை வெளியேற்றுவதாக கூறப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில் தான் சமீபத்திய ஆய்வு காபி குடிப்பதனால் ஏற்படும் ஒரு நன்மை குறித்து விளக்குகிறது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் 'Frontiers in Aging Neuroscience Journal' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழகத்தின் (ECU) ஆராய்ச்சியாளர்கள் காபி குடிப்பதால் நினைவுத்திறன் பாதிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, காபிக்கும் அல்சைமர் நோய்க்கும் உள்ள தொடர்புகள் கண்டறியப்பட்டன. 

அதிக காபி குடிப்பது மூளையில் அமிலாய்டு புரதத்தின் திரட்சியைக் குறைப்பதால் அல்சைமர் நோயை அதாவது நினைவுத்திறனை அதிகரிக்க உதவுகிறது. 

அல்சைமர் நோய் வருவதைத் தடுக்க/ தாமதமாக்க காபி குடிப்பது எளிதான வழி என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

நாள் ஒன்றுக்கு இரண்டு கப் காபி குடித்தால் அதாவது சராசரியாக காபி அருந்துபவர்களுக்கு இந்த ஆய்வின் முடிவுகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அல்சைமர் என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒருவிதக் கோளாறு. இது மூளையை பலவீனப்படுத்துவதால் ஞாபக சக்தி குறைகிறது. பொதுவாக வயதானவர்களிடம் இது அதிகம் காணப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com