கிச்சன் சிங்க் அடைத்துக் கொண்டால் சரி செய்ய எளிமையான டிப்ஸ்!

இந்த முறையில் கிச்சன் சிங்க்கை சுத்தப்படுத்தினால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை. கொதிக்கும் நீரில் நோயை உண்டாக்கும் கிருமிகளும் அழியும். அத்துடன் கரப்பான் பூச்சித் தொல்லையும் குறையும்.
how to unclog kitchen sink
how to unclog kitchen sink

கிச்சன் சிங்க் எதனால் அடைத்துக் கொள்கிறது என்று யோசித்துப் பாருங்கள். எல்லாம் நம்முடைய கவனக்குறைவால் தான் இருக்கும். சாப்பிட்டு விட்டு மீதமாகும் காய்கறிக் கழிவுகளை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் எச்சங்களை குப்பைத் தொட்டியில் அப்புறப்படுத்தாமல் அப்படியே கிச்சன் சிங்க்கில் கொட்டினால் பிறகு அது அடைத்துக் கொள்ளாமல் என்ன செய்யும்? ஒவ்வொரு முறை சிங்க் பயன்படுத்தும் போதும் நாம் மிகக் கவனமாக வெறும் பாத்திரங்களை மட்டுமே அதில் இட வேண்டும். அது பெரும்பாலும் முடியாது எனும் போது ஜல்லடையுடன் கூடிய குழாய்களை சிங்க்கில் பொருத்திக் கொள்ள வேண்டும்.

சரி இதனால் மட்டும் தான் கிச்சன் சிங்க் அடைத்துக் கொள்கிறதா என்றால் அது தான் இல்லை. நீங்கள் சமையலுக்கு அதிக எண்ணெய் பயன்படுத்தி விட்டு அதை சிங்கில் கொட்டினால் கூட அந்த எண்ணெய் கிச்சன் சிங்க்கில் இருக்கும் குழாயின் மடிப்புகளில் படிந்து தடிமனான தடையாகி அதற்குள் தண்ணீரின் சரளமான ஓட்டத்தை தடை செய்து விடும். பலன் மீண்டும் அடைப்பு தான். இதைப் போக்க சிலர் ஆசிட் பயன்படுத்துகின்றனர். சிலர் சூப்பர் மார்கெட்டுகளில் விற்கப்படும் பிரத்யேகமான ரசாயன உப்புகளைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் பக்க விளைவுகள் உண்டு என்பதாலும் பெருமபாலான சமயங்களில் இவை நாம் விரும்பும் பலன்களைத் தருவதில்லை என்பதாலும் இவற்றால் பெரிதாகப் பலன் ஏதும் இல்லை என்று நினைப்பவர்கள் கீழ்க்காணும் எளிய டிப்ஸைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

உப்பு: ஒரு கப்
பாத்திரம் விளக்கும் திரவ சோப்: 1/4 கப்
கொதிக்கக் கொதிக்க தண்ணீர்: 1 லிட்டர்.

செய்முறை

கிச்சன் சிங்க்கில் மேல் பக்கம் படிந்திருக்கும் திடக்கழிவுகளை முதலில் அகற்றி சுத்தம் செய்து விட்டுப் பிறகு டேப்பைத் திறந்து விட்டு சிங்க்கை ஒருமுறை சுத்தமாக அலசிக் கொள்ளவும். பின்னர் 5 நிமிடங்களில் சிங்க்கில் தண்ணீர் நன்கு வடிந்ததும் முதலில் உப்புத்தூளை சிங்க் குழாய்க்குள் சிறிது சிறிதாக தூவவும். இந்த உப்புத்தூள் குழாயின் ஓரங்களில் படிந்திருக்கும் எண்ணெய்ப்பிசுக்கின் மீது சென்று ஒட்டிக்கொண்டு அவற்றைக் கரைக்க முயலும். பிறகு 1/4 திரவ சோப்பை 1 லிட்டர் கொதிக்கும் நீரில் கலந்து அதைச் சிறிது சிறிதாக கிச்சன் சிங்க்கில் ஊற்றவும். கொதிக்கும் நீர் குழாயின் பக்கங்களில் ஒட்டிக்கொண்டுள்ள உப்புடன் சேர்த்து அதைக் கரைக்க முயற்சிக்கும் போது உப்பு பக்கவாட்டுச் சுவரில் ஒட்டியிருக்கும் எண்ணெய்ப்பிசுக்குக் கரையைக் கரைத்துக் கொண்டு அப்படியே கீழிறங்கத் தொடங்கும். இதனால் சிங்க் குழாயில் இருக்கும் அடைப்பு நீங்கும். 1 லிட்டர் தண்ணீரையும் விட்டு முடித்ததும் அடைப்பு நீங்கி இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள மீண்டும் 1 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து சிங்க்கில் ஊற்றிக் கழுவலாம்.

இந்த முறையில் கிச்சன் சிங்க்கை சுத்தப்படுத்தினால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை. கொதிக்கும் நீரில் நோயை உண்டாக்கும் கிருமிகளும் அழியும். அத்துடன் கரப்பான் பூச்சித் தொல்லையும் குறையும்.

முயன்று பார்த்து விட்டு எங்களுக்கு எழுதுங்கள். கிச்சன் சிங்க் அடைப்பை நீக்க நீங்கள் பின்பற்றும் வேறு எளிமையான டிப்ஸ்கள் ஏதேனும் இருந்தால் அதையும் நீங்கள் பகிரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com