திருச்சி மாவட்டத்தில் 3,451 பதவிகளுக்கு 11,870 பேர் போட்டி!

திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் 3,451 பதவிகளுக்கு 11 ஆயிரத்து 870 பேர் போட்டியிடுகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் 3,451 பதவிகளுக்கு 11,870 பேர் போட்டி!
12 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 614 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்

திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் 3,451 பதவிகளுக்கு 11 ஆயிரத்து 870 பேர் போட்டியிடுகின்றனர்.

12 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 614 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 626 பேர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூர், உப்பிலியபுரம் உள்ளிட்ட 14 ஒன்றியங்களில் டிச.27, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஒன்றியங்களில் 24 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், 404 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 241 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 3,408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 4,077 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளான கடந்த 19ஆம் தேதிக்குப் பிறகு இறுதியாக உள்ள வேட்பு மனுக்கள் கணக்கிடப்பட்டு, ஒருவர் மட்டுமே மனுத் தாக்கல் செய்துள்ள இடங்களுக்கு போட்டியின்றித் தேர்வாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 14 ஒன்றியங்களிலும் மொத்தம் 614 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.

இவைத்தவிர, 404 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் 12 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, அந்தநல்லூர், புள்ளம்பாடி, துறையூர் ஒன்றியத்தில் தலா ஒருவர், மணிகண்டத்தில் 2 பேர், மருங்காபுரியில் 4 பேர், லால்குடியில் 3 பேர் தேர்வாகியுள்ளனர்.

மீதமுள்ள 3,451 பதவிகளுக்கு 11,870 பேர் போட்டியிடுகின்றனர். இதன்படி, அந்தநல்லூர் ஒன்றியத்தில் 821 பேர், மணிண்டத்தில் 691 பேர், திருவெறும்பூரில் 775 பேர், மணப்பாறையில் 745, மருங்காபுரியில் 1,137, வையம்பட்டியில் 690, லால்குடியில் 1,224, புள்ளம்பாடியில் 742, மண்ணச்சநல்லூரில் 1,236, முசிறியில் 847, தொட்டியத்தில் 831, தா.பேட்டையில் 686, துறையூரில் 834, உப்பிலியபுரத்தில் 611 தேர்தல் களம் காணுகின்றனர்.

6 ஒன்றியங்களுக்கு வெள்ளிக்கிழமை டிசம்பர் 27ம் தேதியும், 8 ஒன்றியங்களுக்கு டிசம்பர் 30ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

5 பறக்கும் படை
ஊரகப் பகுதிகளில் நடைபெறும் தேர்தலில் வாக்காளர்களுக்கு தேர்தல் விதிமுறைகளை மீறி பணம், பொருள், இதர பொருள்கள் வழங்குவதை தடை செய்யவும், தேர்தல் பணிகளை கண்காணிக்கவும் 5 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 8 மணிநேரத்துக்கு ஒரு குழுவாக 24 மணிநேரமும் ரோந்து சுற்றி வருவர். இந்த குழுவில், வட்டாட்சியர், காவல் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், 2 காவலர்கள், விடியோ ஒளிப்பதிவாளர் என 6 பேர் இடம்பெற்றுள்ளனர். 

24 மணிநேர கட்டுப்பாட்டு அறை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை விசாரிக்கவும், பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினரது புகார்களை கேட்டு பதிவு செய்யவும் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 8 மணிநேரத்துக்கு தலா 2 பேர் வீதம் பணியில் இருக்கும் வகையில் 6 பேர்  பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

0431-2410085 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com