கூட்டணியா கூடா நட்பா?
By DIN | Published On : 01st April 2019 03:32 AM | Last Updated : 01st April 2019 02:36 PM | அ+அ அ- |

கர்நாடகத்தில் தலைவர்கள் அளவில் காங்கிரஸூம், மஜதவும் ஒன்றிணைந்திருந்தாலும், தொண்டர்கள் மத்தியில் இரு கட்சிகளின் இதயமும் இணக்கமாகவில்லை. அப்படியானால், காங்கிரஸ்-மஜத இணைந்துள்ளது - கூட்டணியா அல்லது கூடா நட்பா என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள கேள்வியாகும்.
கர்நாடகத்தில் முக்கியக் கட்சிகளான காங்கிரஸ், மஜத மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. நீண்ட காலமாகத் தீராப் பகை உணர்வுடன் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்துவந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளது தேர்தல் களத்தில் உண்மையிலேயே பலன் தருமா என்ற எதிர்பார்ப்பு பரவலாகக் காணப்படுகிறது.
1980-ஆம் ஆண்டுகளின் தொடக்கக் காலம் வரை கர்நாடகத்தில் தன்னிகரில்லா அரசியல் சக்தியாக வலம் வந்த காங்கிரஸ், மஜதவுடன் தொகுதி உடன்பாடு செய்துகொண்டு எதிர்வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது.
அரசியலில் எதிரும் புதிருமாக விளங்கி வந்த காங்கிரஸூம் மஜதவும் நெருங்கி வந்து தேர்தலை சந்திப்பது அரசியல் விமர்சகர்களால் புதிய அணுகுமுறையாக பார்க்கப்பட்டாலும், இரு கட்சிகளின் தொண்டர்களிடையே போதுமான வரவேற்பைப் பெறவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியின் அசைக்க முடியாத ஆட்சி பலம், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் துணிச்சலான தலைமை, எடியூரப்பாவின் செல்வாக்கு போன்றவற்றால் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு அமைந்த மஜத-காங்கிரஸ் கூட்டணியால் துவண்டு போயிருந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் மஜதவும் காங்கிரஸூம் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது பாஜகவை சற்று சோர்வடையத்தான் செய்துவிட்டது.
1996-ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸூம், மஜதவும் பெற்ற வாக்குகளின் கூட்டுத் தொகைதான் பாஜகவின் கலக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தும்கூரு நிலவரம்
காங்கிரஸ் எம்.பி.க்களாக இருக்கும் 10 பேருக்கும் மீண்டும் தேர்தல் வாய்ப்பு கொடுக்க உறுதி அளித்திருந்த காங்கிரஸ் மேலிடம், தும்கூரு தொகுதி காங்கிரஸ் எம்பி முத்தனுமே கெளடாவுக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு தராமல் அந்தத் தொகுதியை மஜதவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டது.
நாடாளுமன்றத்திலும், தொகுதியிலும் சிறப்பாக பணியாற்றி நாடாளுமன்றவாதிகள், மக்களிடையே நன்மதிப்பை பெற்றிருக்கும் முத்தனுமே கெளடாவுக்கு காங்கிரஸின் நடவடிக்கை ஏற்புடையதாக இல்லை. மேலும் இத்தொகுதியில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடாவே போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தது காங்கிரஸாரின் கோபத்தை கிளறிவிட்டது. இதுநாள்வரை அரசியல் எதிரிகளாக மோதிக்கொண்டவர்கள், தோள்மீது கைபோட்டு வாக்குசேகரிப்பதுசாத்தியமில்லை என்று வாதிட்டனர். தொண்டர்களின் தூண்டுதலின்பேரில் முத்தனுமே கெளடா காங்கிரஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கலும் செய்துவிட்டார். காங்கிரஸ் தலைவர்களின் பெருமுயற்சியால் முத்தனுமே கெளடாவின் வேட்புமனுவை திரும்பப் பெற்றாலும், அதிருப்திக்கான காரணங்கள் அப்படியே இருப்பதாக முத்தனுமே கெளடா அறிவித்துள்ளது, மஜதவை நெளிய வைத்துள்ளது.
வடபெங்களூருவில் வேட்பாளரை கண்டுபிடிக்கமுடியாத மஜத, அத்தொகுதியை திரும்ப காங்கிரஸூடமே ஒப்படைத்துவிட்டது. உடுப்பி தொகுதியில் வேட்பாளர் இல்லாததால், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரமோத் மத்வராஜை இரவலாக பெற்று தங்கள் சின்னத்தில் போட்டியிடவைத்துள்ளது மஜத. வடகன்னடம், விஜயபுரா தொகுதிகளில் கட்சிக்கு கட்டமைப்பே இல்லாத நிலையில், அங்கு வேட்பாளர்களை மஜத நிறுத்தியுள்ளது. தமது கட்சி செல்வாக்கு பெற்று விளங்கும் மைசூரு தொகுதியை ஒதுக்காததால், காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்துள்ள மஜத தொண்டர்கள், மண்டியாவில் காங்கிரஸ் ஒத்துழைக்காவிட்டால், மைசூருவில் காங்கிரஸூடன் நாங்கள் ஒத்துழைக்கமாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
வாக்குக் கணக்கு
1999-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் தான் மஜத முதல்முறையாக தனித்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் மஜதவுக்கு 10.85% வாக்குகள் கிடைத்திருந்தன. இதை தொடர்ந்து, 2004-இல் 20.45% வாக்குகளையும், 2009-இல் 13.58% வாக்குகளையும், 2014-இல் 11% வாக்குகளையும் மஜத பெற்றுள்ளது. இதேகாலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சி 1999-இல் 45.41%, 2004-இல் 36.82%, 2009-இல் 37.65%, 2014-இல் 40.80% வாக்குகளை பெற்றிருந்தது. 1999-இல் 27.19%, 2004-இல் 34.77%, 2009-இல் 41.63%, 2014-இல் 43% வாக்குகளை பாஜக பெற்றுள்ளது.
பாஜகவின் வாக்குகள் ஆண்டுக்காண்டு முன்னேறியிருந்தாலும், காங்கிரஸ், மஜதவின் கூட்டு சதவீதம் பாஜகவின் வாக்குகளை விஞ்சுவதைக் காணலாம். ஒவ்வொரு தேர்தலிலும் பெருகிவரும் பாஜகவின் வாக்குவங்கி வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாது, மதச் சார்பற்ற வாக்குகளை சிதறவிடாமல் வெற்றிக்கனியாக மாற்றுவதே காங்கிரஸ், மஜதவின் நோக்கமாக உள்ளது. வரும் மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு மட்டுமல்ல காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேசிய அளவில் பலம் பொருந்திய கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை வீழ்த்துவதற்கு, எதிர்க்கட்சிகளின் பலமான கூட்டணியே கைகொடுக்கும் என்ற நம்பியுள்ள காங்கிரஸ், அதற்கான சிறிய வாய்ப்பையும் விட்டுத்தர தயாராக இல்லை.
கர்நாடகத்தில் காங்கிரஸ் பலமான கட்சியாக இருந்தபோதிலும், பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு, வாக்குவங்கியில் சிறிய கட்சியான மஜதவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது.
வாக்கு சதவிகிதத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி பலம் பொருந்தியதாக தென்பட்டாலும், அதற்காக அலட்டிக்கொள்ள தேவையில்லை என்ற முடிவுக்கு பாஜக வந்துள்ளது. தலைவர்கள் அளவில் காங்கிரஸூம், மஜதவும் ஒன்றிணைந்திருந்தாலும், தொண்டர்கள் மத்தியில் இரு கட்சிகளின் இதயமும் இணக்கமாகவில்லை. அப்படியானால், காங்கிரஸ்-மஜத இணைந்துள்ளது - கூட்டணியா அல்லது கூடா நட்பா என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள கேள்வியாகும்.
சுமலதா அரசியல் பிரவேசம்
மண்டியா மாவட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.யாக, அமைச்சராக, எம்எல்ஏவாக கோலோச்சியவர் நடிகர் அம்பரீஷ். சில மாதங்களுக்கு முன்பு இவர் மறைவைத் தொடர்ந்து, இவரது மனைவி நடிகை சுமலதா, மக்களவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்கும்படி காங்கிரûஸ அணுகினார்.
முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுவதால் மண்டியாவை மஜதவுக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கைவிரித்ததை தொடர்ந்து, அத்தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார் சுமலதா.
வெற்றி வாய்ப்பில் இருக்கும் நடிகை சுமலதாவுக்கு வாய்ப்பு வழங்க காங்கிரஸ் தவறியதைத் தொடர்ந்து, தொண்டர்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. மஜதவுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய காங்கிரஸ் தொண்டர்கள், நடிகை சுமலதாவை பின் தொடர்ந்துள்ளனர்.
தனது மகன் நிகிலை முதல்முறையாக தேர்தலில் களமிறக்கியுள்ள முதல்வர் குமாரசாமி, எப்படியும் வெற்றிக்கனியை பறித்துவிடும் துடிப்பில் இருக்கும்போது முட்டுக்கட்டையாக பாஜக அல்ல கூட்டணிக்கட்சியான காங்கிரúஸ இருப்பது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணியில் குழப்பம்
கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளை காங்கிரஸூம், 8 தொகுதிகளை மஜதவும் பகிர்ந்துகொண்டு தேர்தலை சந்திப்பது என்று முடிவானது. முதலில் 12 தொகுதிகளை ஒதுக்கித்தருமாறு அடம்பிடித்த மஜத, பின்னர் 8 தொகுதிகளுக்கு அடங்கிப்போனது. மஜதவுக்கு ஒதுக்கப்பட்ட உடுப்பி, ஹாசன், தும்கூரு, மண்டியா, வட பெங்களூரு, விஜயபுரா, வடகன்னடம், சிவமொக்கா தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள், முன்னணியினர் கட்சிக்கு எதிராக முழங்கத்தொடங்கினர்.
மஜதவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஹாசன், மண்டியா தொகுதிகளில் தனது பேரன்கள் பிரஜ்வல் ரேவண்ணா, நிகில் குமாரசாமியை தேவெகெளடா களம் இறக்கியுள்ளார். இது காங்கிரஸாருக்கு ஏற்புடையதாக இல்லை. இதுநாள்வரை ஹாசன் தொகுதியில் போட்டியிட்டு வந்த தேவெகெளடா, தனது பேரனுக்காக அத்தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளார். மூத்த அரசியல்வாதி என்பதால் தேவெகெளடா போட்டியிடுவதை பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் அவரது பேரன் பிரஜ்வலுக்கு வாக்கு சேகரிப்பதா என்று பொங்கியெழுந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஏ.மஞ்சு, பாஜகவுக்கு தாவி அத்தொகுதியின் வேட்பாளராகிவிட்டார்.
பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் பிரச்னைகளை காட்டிலும் காங்கிரஸாரின் எதிர்ப்பு முழக்கங்களே பிரஜ்வலின் காதில் அதிகம் ஒலிப்பதால், அவர் குழம்பிப் போயிருக்கிறார்.
மஜதவின் செல்வாக்கு
கர்நாடக முதல்வராகவும், பிரதமராகவும் பதவி வகித்திருந்தாலும், தனது கட்சியை ஒட்டுமொத்த கர்நாடகத்தின் கட்சியாக மாற்றுவதில் எச்.டி.தேவெ கெளடா தோல்வி அடைந்திருக்கிறார்.
தான் சார்ந்திருக்கும் ஒக்கலிகர் சமுதாயத்தின் ஆதரவில் அரசியல் நடத்திவருகிறார் தேவெகெளடா. அச்சமுதாய மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் சாமராஜ்நகர், மைசூரு, ஹாசன், மண்டியா, தும்கூரு, கோலார், சிக்பளாப்பூர், சிவமொக்கா, ராமநகரம், சித்ரதுர்கா மாவட்டங்களில் மட்டுமே பலமான கட்சியாக மஜத விளங்குகிறது. இம்மாவட்டங்களில் மஜதவின் அரசியல் எதிரியே காங்கிரஸ்தான்.
வடமாவட்டங்களில் ராய்ச்சூரு, விஜயபுரா, பீதரில் சில சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றியிருக்கும் மஜத, இங்கு பெரிய வாக்குவங்கியை வைத்திருக்கவில்லை. தென்மாவட்டங்களில் தனது அரசியல் எதிரியான மஜதவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் காங்கிரஸூக்கு பெரிய லாபம் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதி. அடிமட்டத்தில் காங்கிரஸ், மஜத தொண்டர்கள் இணங்கி வராததால், மஜதவின் வாக்குகள் காங்கிரஸூக்கும், காங்கிரஸின் வாக்குகள் மஜதவுக்கும் கைமாறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. வாக்குவங்கி கணக்கு, கடந்தகாலத்தில் பதிவான வாக்கு சதவிகிதங்கள் கூட்டணிக்கு சாதகமாக இருந்தாலும், அவை வாக்குகளாக மாறாது என்பதால், ஒருவகையில் கர்நாடகத்தில் காங்கிரஸ், மஜத, பாஜக இடையே மும்முனை போட்டி நடக்கிறது என்றே கூறவேண்டும். இது பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளதை மறுக்க முடியாது.
கூட்டணியா கூடா நட்பா?
7 தொகுதிகளில் மண்டியா, தும்கூரு, ஹாசன், சிவமொக்கா ஆகிய 4 தொகுதிகளில் மட்டுமே மஜத கவனம் செலுத்திவருகிறது. அப்படியானால், உடுப்பி, வடகன்னடம், விஜயபுரா தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாத நிலையில், அது பாஜகவுக்கு சாதகமாக அமையும். தென்மாவட்டங்களில் பலமாக இருக்கும் காங்கிரஸ் மண்டியா, ஹாசன், தும்கூரு, உடுப்பி தொகுதிகளில் போட்டியிடாத நிலையில் மஜதவின் நேரடி எதிரியாக பாஜக கருதப்படும். அப்போது அது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும். ஆண்டாண்டு காலமாக மஜதவை கடுமையாக எதிர்த்து வந்த காங்கிரஸார், திடீரென அக்கட்சிக்கு வாக்களிக்க மனமில்லாமல் தவிக்கிறார்கள்.
அண்மையில் நடந்த மண்டியா தொகுதிக்கான மக்களவை இடைத்தேர்தலில் மஜத வேட்பாளர் சிவராமேகெளடாவை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் டி.ஆர். சித்தராமையா, கடந்த தேர்தலை காட்டிலும் 1.5 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளார். காங்கிரஸாரின் வாக்குகள் மஜதவுக்கு கைமாறவில்லை என்பது உறுதியாவதோடு, காங்கிரஸின் வாக்குகள் பாஜகவுக்கு சென்றுள்ளது மஜதவுக்கு பாதகமாக மாறியுள்ளது. எனவே, கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, அதிலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 4 தொகுதிகளை மஜதவுக்கு விட்டுக்கொடுத்திருப்பது பாஜகவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
காங்கிரஸ் வாக்குகள் விழாது என்பதால், வட கர்நாடகத்தில் 3 இடங்களில் போட்டியிட்டாலும் மஜதவுக்கு வெற்றி பெறத்தக்க வாக்குகள் கிடைக்காது. வடகர்நாடகத்தில் வலுவாக இருப்பதால், அங்கு மஜத போட்டியிடுவதும் பாஜகவுக்கு சாதகமாக அமையப்போகிறது. இந்த கூட்டணியால் காங்கிரஸூக்கு இழக்க ஏராளமான வாக்குகள், தொகுதிகள் இருக்கின்றன. மஜத-காங்கிரஸ் கூட்டணியைக் கண்டு பாஜக அஞ்சாதிருப்பதன் ரகசியம் இதுதான். மஜத-காங்கிரஸ் கூட்டணிக் குழப்பத்தில் தேர்தல் அறுவடைக்கு பாஜக காத்திருக்கிறது.