தொகுதி மறு சீரமைப்புக்கு என்ன காரணம்?

ஒரு மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகள் அருகில் உள்ள மாவட்டம் அல்லது ஊரின்  பெயரைக் கொண்ட மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளதை நாம் அறிகிறோம்.
தொகுதி மறு சீரமைப்புக்கு என்ன காரணம்?


ஒரு மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகள் அருகில் உள்ள மாவட்டம் அல்லது ஊரின்  பெயரைக் கொண்ட மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளதை நாம் அறிகிறோம். ஏன் இத்தகைய மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து நம்மில் பலருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே.
உதாரணத்துக்கு கோவை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளான தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகியவை பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு மக்களவைத் தொகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுடன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதிகள் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
இதேபோல், கோவை மக்களவைத் தொகுதியில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை ஒரு மக்களவைத் தொகுதிக்கு 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ள நிலையில் ஏன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளை இடம்பெறச் செய்யக்கூடாது என்று கேள்வி எழலாம்.
மறுசீரமைப்புக்கான காரணம்: ஒரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளானது அந்த மாநிலத்தில் உள்ள மக்கள்தொகையின் அளவுக்கு ஏற்ப வரையறை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி நிறைவடையும்போது, அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் மக்களவைத் தொகுதிகளானது ஒரு ஓட்டு, ஒரு மதிப்பு எனும் கொள்கைப்படி மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது.
இந்தியாவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் ஏற்படுத்தப்படுவதற்கு முன்பு மக்களவைக்கு 500 தொகுதிகளுக்கு மிகாமலே இருந்தன. 1951-52-இல் மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு முதன்முதலில் பொதுத் தேர்தல் நடத்தியபோது தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளை சாத்தியமான வகையில் பிரித்தது.
அதன் பிறகு இப்பணியானது சுதந்திரமாக செயல்படும் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து 1952 (1951 மக்கள் தொகை அடிப்படையில்), 1962 (1961 மக்கள் தொகை அடிப்படையில்), 1972 (1971 மக்கள் தொகை அடிப்படையில்) ஆகிய ஆண்டுகளில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையங்கள் அமைக்கப்பட்டன.
மறுசீரமைப்புக்குத் தடை: 1976-ஆம் ஆண்டு 42-ஆவது சட்டத்திருத்தத்தின்படி 2000-ஆம் ஆண்டு வரை தொகுதி மறுசீரமைப்புக்குத் தடைவிதிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை மொத்த இடங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. மக்களவைத் தொகுதி இடங்களைக் கருத்தில் கொண்டு குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு ஒரு சில மாநிலங்கள் ஆர்வம் காட்டாமல் இருந்ததே இந்தத் தடை விதிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம்.
2002-ஆம் ஆண்டு 84-ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையிலான மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையக் குழுவினர் 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மறுசீரமைப்பு தரவுகளை சேகரித்தது. ஆனால் 2003-ஆம் ஆண்டில் இந்த ஆணையத்திடம் 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பதிலாக 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை புள்ளி விவரங்கள் தரப்பட்டன.
குல்தீப் சிங் குழுவினரும் ஜம்மு - காஷ்மீர் நீங்கலாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தனர்.
ஆனால் இவற்றில் அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களில் எழுந்த குளறுபடிகள் காரணமாக குவாஹாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த 5 மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்புக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் இந்தத் தடையை விலக்கி உத்தரவிட்டபிறகு மீண்டும் மேற்கண்ட மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
தற்போதைய நிலவரம்: 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 499 தொகுதிகள் புதிதாக மறுசீரமைப்பு செய்யப்பட்டன. இதில் அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், ஜம்மு & காஷ்மீர், ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் தொகுதி மறு வரையறை செய்யப்பட்டன.
பெரும்பாலான தொகுதிகளின் பெயர்களில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், புவியியல் அமைப்பு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
2002-ஆம் ஆண்டு 84-ஆவது சட்டத்திருத்தத்தின்படி, 2026-ஆம் ஆண்டு வரையில் மறுசீரமைப்பில் மாற்றம் எதுவும் இருக்காது. அதன் பிறகு கிடைக்கப்பெறும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படியே இனி தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து திட்டமிடப்படும். அதுவும் அந்தந்த மாநிலங்களில் தற்போது உள்ள சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றங்கள் இருக்காது. அந்த எண்ணிக்கைக்கு உள்ளாகவே தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com