Enable Javscript for better performance
சூரியன் உதிக்குமா... தாமரை மலருமா?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சூரியன் உதிக்குமா... தாமரை மலருமா?

    By DIN  |   Published On : 11th April 2019 02:38 AM  |   Last Updated : 11th April 2019 11:29 AM  |  அ+அ அ-  |  

    kanimozhi


    வரலாற்றில் இடம்பிடித்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புமிக்க தலைவர்களை உருவாக்கிய பெருமை உடையது தூத்துக்குடி மாவட்டம். இந்த மாவட்டப் பகுதிகள், கடந்த 2008-ஆம் ஆண்டு வரை திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதிகளில் பிரிந்து காணப்பட்டன.

    தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு திருச்செந்தூர் தொகுதி நீக்கப்பட்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் இருந்த தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் (தனி), ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளும், திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றிருந்த திருச்செந்தூர் பேரவைத் தொகுதியும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றன. மாவட்டத்தில் இருந்த சாத்தான்குளம் பேரவைத் தொகுதி நீக்கப்பட்டது.

     திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 1952 மற்றும் 1957-ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாணுபிள்ளை, 1962-இல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முத்தையா, 1967-இல் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த எஸ். சேவியர், 1971-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முருகானந்தம், 1977-இல் அதிமுகவைச் சேர்ந்த ஆலடி அருணா, 1980-இல் திமுகவைச் சேர்ந்த சிவப்பிரகாசம், 1984, 1989, 1991-ஆம் ஆண்டுகளில் அதிமுகவைச் சேர்ந்த கடம்பூர் ஜனார்த்தனம், 1996-இல் திமுகவைச் சேர்ந்த சிவப்பிரகாசம், 1998-இல் அதிமுகவைச் சேர்ந்த கடம்பூர் ஜனார்த்தனம், 1999-இல் அதிமுகவைச் சேர்ந்த பி.எச். பாண்டியன், 2004-இல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

     தொகுதி சீரமைப்புக்குப் பிறகு தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினர் என்ற பெருமையை திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர். ஜெயதுரை கடந்த 2009 ஆண்டு தேர்தல் மூலம் பெற்றார். அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த சிந்தியா பாண்டியனைவிட கூடுதலாக 87,652 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

     தொடர்ந்து, கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெகனைவிட கூடுதலாக ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 2 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

     திமுக ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் வென்றுள்ள தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தற்போது கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 2 தொகுதிகள் அதிமுக வசமும், தூத்துக்குடி, திருச்செந்தூர் தொகுதிகள் திமுக வசமும் உள்ளன. விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

     முத்துநகர் தொகுதியின் மூன்றாவது உறுப்பினர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டி கடுமையாக உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும், திமுக கூட்டணியில் திமுக சார்பில், அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினின் சகோதரியான கனிமொழியும் களமிறக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

     இதுதவிர,  அமமுக சார்பில் ம. புவனேஸ்வரன், மநீம சார்பில் டிபிஎஸ் பொன் குமரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜசேகர், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 37 பேர் களத்தில் உள்ளனர். முக்கிய கட்சிகளைச் சேர்ந்த அனைவருமே தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிடுகின்றனர்.

    முக்கிய தொழில்கள்: தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் விவசாயம், மீன்பிடித்தல், உப்பு உற்பத்தி, தீப்பெட்டி உற்பத்தி போன்றவை முக்கியத் தொழில்களாக உள்ளன. இதுதவிர,  தூத்துக்குடி, துறைமுகம், கனநீர் ஆலை, ஜிர்கோனியம், ஸ்பிக், தாரங்கதாரா கெமிக்கல், ஸ்டெர்லைட் ஆலை (தற்போது இயங்கவில்லை) உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும், 1500-க்கும் மேற்பட்ட சிறிய தொழில் நிறுவனங்களும் உள்ளன. 5 அனல் மின் நிலையங்கள் உள்ளன.

    நீண்டநாள் கோரிக்கைகள்: புதியம்புத்தூர் பகுதியில் நடைபெறும் பின்னலாடை தொழிலை மேம்படுத்தி, நவீன பின்னலாடை பூங்கா அமைக்க வேண்டும், விளாத்திகுளம் பகுதியில் மிளகாய் வற்றல் தொழிலை பாதுகாக்க புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும், தூத்துக்குடியில் இருந்து சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களுக்கு கூடுதல் ரயில் சேவை வேண்டும், கோவில்பட்டி தீப்பெட்டித் தொழிலை பாதுகாக்க வேண்டும், இங்கு நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் போன்றவை இந்தத் தொகுதியின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன.

    மேலும், ஓட்டப்பிடாரத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும், ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வேண்டும், தாமிரவருணி ஆற்றை மேம்படுத்த வேண்டும், திருச்செந்தூர் கோயிலில் கூடுதல் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் போன்றவையும் நீண்டநாள் கோரிக்கைகள்.

    சாதிகள் பலம்:  இந்து-நாடார், கிறிஸ்தவ-நாடார், பட்டியலினத்தவர்கள், மீனவர்கள், பிள்ளைமார் சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். மேலும், கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளில் நாயக்கர் மற்றும் ரெட்டியார் சமூகத்தினர் அதிகளவில் உள்ளனர். தேவர் சமூகத்தினர் மாவட்டம் முழுவதும் பரவியுள்ளனர். தூத்துக்குடி மற்றும் காயல்பட்டினம் பகுதியில் இஸ்லாமியர்கள் கணிசமான அளவு உள்ளனர்.

    கள நிலவரம்: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் வேட்பாளர்கள் பட்டியலில் 37 பேர் இருந்தபோதிலும், திமுக மற்றும் பாஜக இடையேதான் போட்டி நிலவி வருகிறது. அமமுக, மநீம, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதில் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றன.

     முக்கிய கட்சிகள் சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் பெண்கள் என்பதோடு, வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு நிலவிவருகிறது. மேலும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் முதல் பெண் உறுப்பினரைத் தேர்வு செய்ய மக்கள் தயாராக உள்ளதும் தற்போதைய கள நிலவரமாக உள்ளது.

     பாஜகவுக்கு என பெரிய அளவிலான வாக்கு வங்கி இல்லாத நிலையில், அக்கட்சியின் வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன் அதிமுக வாக்குகளை நம்பியே களமிறங்கி உள்ளார். மேலும், கூட்டணிக் கட்சிகளான புதிய தமிழகம் மற்றும் தேமுதிகவின் வாக்கு வங்கியும், மாவட்டத்தில் முற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளும் தனக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்ற நோக்கில் அவரது பிரசாரம் இருந்து வருகிறது.

     தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அதிமுக மாவட்டச் செயலராக இருந்த முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மாற்றப்பட்டது ஒரு பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், தூத்துக்குடி மாவட்டம் வடக்கு மற்றும் தெற்கு எனப் பிரிக்கப்பட்டு அமைச்சர் கடம்பூர் ராஜுவும், எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏவும் மாவட்டச் செயலர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கள் தலைமையிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் எனத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

     ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம், சிறுபான்மையினரின் வாக்குவங்கி உதவுமா என்ற கேள்வி உள்ளிட்டவை பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு பலவீனமாக உள்ளது.

    திமுக வேட்பாளர் கனிமொழியை பொருத்தவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே அவர் இந்தத் தொகுதியை குறிவைத்து பணியாற்றத் தொடங்கிவிட்டார் என்றே கூறலாம். மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி, தூத்துக்குடி மாவட்டம், வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சியைத் தத்தெடுத்து ரூ. 1 கோடியில் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே திமுக சார்பில் நடத்தப்பட்ட ஊராட்சி சபை கூட்டங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து தன்னை பலப்படுத்திக் கொண்டார். இருப்பினும், மாவட்ட பொறுப்பாளர்களான கீதாஜீவன் எம்எல்ஏ (வடக்கு), அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ (தெற்கு) ஆகியோரின் தேர்தல் பணிகளை நம்பியே அனைத்துப் பகுதிகளுக்கும் கனிமொழி சென்று வருகிறார்.

     மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், சிறுபான்மையினரின் வாக்குகளைக் குறிவைப்பது மட்டுமின்றி, தாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல என வலியுறுத்தும் வகையிலும் கனிமொழி தனது பிரசாரத்தில் குறிப்பிட்டு வருகிறார்.

     தொகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் வாக்குகள் தனக்கு சிதறாமல் கிடைக்கும் என முழுமையாக நம்பியுள்ளார். அதிமுகவின் வாக்குவங்கி அதிகம் உள்ள விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

     விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு அதிமுக வேட்பாளர் சின்னப்பனை எதிர்த்து சட்டப்பேரவை அதிமுக முன்னாள் உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் சுயேச்சையாக களமிறங்குவதால் அந்தத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கும், மக்களவைத் தேர்தலில் கனிமொழிக்கும் அதிக வாக்குகளைப் பெற்றுத்தர வேண்டும் என்ற முனைப்பில் திமுகவினர் களப்பணியாற்றி வருகின்றனர்.

    அதுபோல, மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தேவர் சமுதாயத்தினரின் வாக்கு, இஸ்லாமியர்கள் மற்றும் மீனவர்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ம. புவனேஸ்வரன் எதிர்பார்த்துள்ளார்.

    நடுநிலையாளர்கள், புதிய வாக்காளர்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்பதில் மநீம வேட்பாளர் டிபிஎஸ் பொன் குமரன் நம்பிக்கை கொண்டுள்ளார்.
     இருந்தபோதும், பிரதான கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், உதயசூரியன் மீண்டும் ஒருமுறை உதிக்குமா? அல்லது தாமரை முதல் முறையாக மலருமா? என்பது விரைவில் தெரியவரும். யார் வெற்றி பெற்றாலும், தூத்துக்குடி தொகுதியில் இருந்து முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு மக்களவைக்குச் செல்வார் என்ற நம்பிக்கையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    வாக்காளர்கள் விவரம்:
    ஆண்கள்    7,00,373
    பெண்கள்    7,24,912
    மூன்றாம் பாலினம்    116
    மொத்தம்    14,25,401
    -தி. இன்பராஜ்


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp