விஐபிக்கள் மோதும் திருவனந்தபுரம் தொகுதி

கேரள மாநிலத்தின் தலைநகர் தொகுதியான திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் விஐபிக்கள் களம் காணுவதால் இத்தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விஐபிக்கள் மோதும் திருவனந்தபுரம் தொகுதி

கேரள மாநிலத்தின் தலைநகர் தொகுதியான திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் விஐபிக்கள் களம் காணுவதால் இத்தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 பிரபலங்கள்: கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் வரும் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தலைநகர் தொகுதியான திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் தலைமையிலான யூடிஎப் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன், மார்க்சிஸ்ட் தலைமையிலான எல்டிஎப் கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி. திவாகரன் ஆகியோர் களம் காணுகின்றனர்.
 சசிதரூர் இத்தொகுதியில் 2009 மற்றும் 2014 இல் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். 3 ஆவது முறையாக அவர் களம் காணுகிறார். பாஜக வேட்பாளர் கும்மனம் ராஜேசேகரன், கேரள மாநிலத்தின் பாஜக தலைவராக இருந்து, பின்னர் மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டவர். தற்போது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு இத் தொகுதியில் களம் காணுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி. திவாகரன் தற்போது நெடுமங்காடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக இருப்பவர். இவர் ஏற்கனவே வி.எஸ். அச்சுதானந்தன் அரசில், மாநில உணவு மற்றும் கால்நடைத் துறை அமைச்சராக இருந்தவர்.
 சுவர் விளம்பரங்கள்: கேரள மாநிலத்தில் மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சி என்ற வகைப்பாட்டிலேயே அதிக பகுதிகள் இருப்பதால் மாநகராட்சி, நகராட்சி பகுதி தவிர அனைத்துப் பகுதிகளிலும் வேட்பாளர்களின் சுவர் விளம்பரங்களும், சுவரொட்டிகளும் விதவிதமான வண்ணங்களில் மின்னுகின்றன. அரசியல் கட்சிகளும் போட்டி போட்டு சுவர் விளம்பரங்கள் வரைந்துள்ளனர். குறிப்பாக குமரி மாவட்ட எல்லையோரத்திலுள்ள கேரள கிராமங்களில் கூட இந்த விளம்பரங்கள் வண்ண மயமாய் ஜொலிக்கின்றன.
 திருவனந்தபுரம் தொகுதியில் 2014 இல் காங்கிரஸ் சார்பில் சசிதரூர், பாஜக சார்பில் ஓ. ராஜகோபால், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டாக்டர் பென்னட் ஆபிரகாம் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், சசிதரூர் 2,97,808 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஓ. ராஜகோபால் 2,82,336 வாக்குகள் பெற்றார். இவர்களுக்கு இடையே வாக்கு வித்தியாசம் 15,470 வாக்குகள் மட்டுமே. டாக்டர் பென்னட் ஆபிரகாம் 2,48,941 வாக்குகள் பெற்றார்.
 தலைவர்கள் பிரசாரம்: இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். பாஜக வேட்பாளரை ஆதரித்து மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். மேலும் இத்தொகுதியில் அகில இந்திய அரசியல் தலைவர்கள் பிரசாரம் செய்யவிருக்கின்றனர்.
 எதிர்பார்ப்பு அதிகம்: மாநிலத்தின் தலைநகராகவும், விஐபிக்கள் போட்டியிடும் தொகுதியாகவும் திருவனந்தபுரம் தொகுதி இருப்பதால் வாக்குப்பதிவிற்கு முன்பும், வாக்குப் பதிவுக்குப் பின்னரும் எதிர்பார்ப்புகளுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லை. கடுமையான மும்முனைப் போட்டி நிலவும் இத்தொகுதியின் தேர்தல் களம் தற்போது நிலவும் வெப்பத்தை விட சூடாகவே உள்ளது.
 - ஜே. லாசர்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com