Enable Javscript for better performance
தேர்தல் தகிப்பில் நீலகிரி!- Dinamani

சுடச்சுட

    
    nilagiri

    மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தை உள்ளடக்கிய நீலகிரி மக்களவைத் தொகுதி உதகை, குன்னூர், கூடலூர் (தனி), மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் (தனி) ஆகிய ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இதில், உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளன. மேட்டுப்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்திலும், அவிநாசி தொகுதி திருப்பூர் மாவட்டத்திலும், பவானிசாகர் தொகுதி ஈரோடு மாவட்டத்திலும் அமைந்துள்ளன.

     நீலகிரி மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரை, மலைப் பகுதியைச் சேர்ந்த தொகுதிகளும், சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்த தொகுதிகளும் வெவ்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. மலை மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் அதிகம் என்பதால் சிறு மற்றும் குறு விவசாயிகளில் 60 சதவீதத்தினர் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மலைக் காய்கறி விவசாயமும் குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதைத் தவிர சுற்றுலாத் தொழிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

     நீலகிரி மக்களவைத் தொகுதி

     நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ளூர் வேட்பாளர்களைக் காட்டிலும் வெளியூர் வேட்பாளர்களே அதிக முறை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீலகிரி மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகள் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்கு உள்பட்டவை. மேட்டுப்பாளையம் கோவை மாவட்டத்திலும், பவானிசாகர் ஈரோடு மாவட்டத்திலும், அவிநாசி திருப்பூர் மாவட்டத்துக்கும் உள்பட்டவை என்பதால் சுமார் 60 சதவீத வாக்காளர்களைக் கொண்ட இந்த மூன்று தொகுதிகளே பிரதானமாகும். இதனால் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக சமவெளிப் பகுதி இருப்பதால் வெளியூர் வேட்பாளர்களே அதிக அளவில் போட்டியிடுகின்றனர்.

     நீலகிரி மக்களவைத் தொகுதியில் படகர்கள், பழங்குடியினர், தலித், கவுண்டர்கள், ஒக்கலிகர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இதில் மலை மாவட்டத்தில் படகர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். அதேபோல, சமவெளிப் பகுதி மாவட்டங்களில் தலித்துகளும், கவுண்டர்களும் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர்.

     தொகுதியில் நிலவும் முக்கியப் பிரச்னைகள்

     இம்மாவட்டத்தைப் பொருத்தமட்டில் தேயிலைத் தொழிற்சாலைகளைத் தவிர வேறு தொழிற்சாலைகள் ஏதும் இல்லை. இருந்த ஒரே ஒரு பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையும் மூடப்பட்டுவிட்டது. இளைஞர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் வெளி மாநிலங்களிலும், வெளி மாவட்டங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

     சுற்றுலாத் தொழிலை பொருத்தவரை ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே குறிப்பிடத்தக்க வருமானம் கிடைக்கிறது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பிரிவு 17 நிலங்களில் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்கப்படாமல் உள்ளதும், தனியார் வனப் பாதுகாப்புச் சட்டம் போன்றவையும் மக்களை கடும் சிரமத்திற்குள்ளாக்குபவையாக உள்ளன. இம்மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியோ அரசுப் பொறியியல் கல்லூரியோ இல்லை. பல ஆண்டுகளாகப் பசுந்தேயிலைக்கு உரிய ஆதார விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.30 ஆதார விலையாக வழங்க வேண்டும் என்பதே நீண்ட கால முக்கியக் கோரிக்கையாகும்.

     அதேபோல, மாற்றுத் தொழிலாக அரசு முன்வைத்த மலர் சாகுபடித் தொழிலுக்கு ஏற்றுமதி மையம், பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும் என்பதும், குன்னூரில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க கொண்டு வரப்பட்ட எமரால்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதும், மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை உதகையிலிருந்து வட மாநிலத்துக்கு இடமாற்றும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கைகளாகும்.

     சமவெளிப் பகுதிகளில் விவசாயப் பிரச்னைகள், அத்திக்கடவு-அவிநாசி திட்டம், நான்கு வழிச்சாலை, விளைநிலங்களில் அமைக்கப்படும் உயர்மின் கோபுரம், குடிநீர்த் தட்டுப்பாடு, விவசாயத்திற்கு நீர்ப் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் உள்ளன.

     தொகுதி நிலவரம்
     நீலகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம்தான் அதிகம். ஏழு முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 1967இல் சுதந்திரா கட்சி, 1971 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் திமுக, 1977, 2014 ஆகிய ஆண்டுகளில் அதிமுக ஆகியவை வென்றுள்ளன. இரு முறை பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.பிரபு ஐந்து முறை வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

     கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுகவும், கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுகவும், சமவெளிப் பகுதிகளில் உள்ள மேட்டுப்பாளையம், அவிநாசி மற்றும் பவானிசாகர் ஆகிய மூன்றிலுமே அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது.

     இங்கு அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாகவே கூறலாம். அமமுக குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளைப் பிரிப்பதால் அந்த வாக்குகள் அதிமுகவுக்கு மட்டுமின்றி திமுகவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழலே நிலவுகிறது. அதேபோல, புதிய இளம் வாக்காளர்கள் மநீமவுக்கு ஆதரவாக இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும்.

     இந்தச் சூழலில் மலை மாவட்டத்தில் திமுகவுக்கு ஆதரவான சூழல் நிலவினாலும், சமவெளிப் பகுதிகளில் உள்ள மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளும் அதிமுக வசம் உள்ளதால் மலை ராணியின் மகுடம் எந்த ராஜாவுக்கு என்பதைக் கணிப்பது சற்றே கடினமானதாகும்.

     வாக்காளர்கள் விவரம்
     ஆண்கள் 6,65,337
     பெண்கள் 7,00,202
     மூன்றாம் பாலினம் 69
     மொத்தம் 13, 65,608

     முக்கிய வேட்பாளர்கள்
     அதிமுக எம்.தியாகராஜன்
     திமுக ஆ.ராசா
     அமமுக எம்.ராமசாமி
     மநீம என்.ராஜேந்திரன்

     2009ஆம் ஆண்டு தேர்தலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்

     ஆ.ராசா (திமுக)  3,16,802
     சி.கிருட்டிணன் (மதிமுக)  2,30,781
     எஸ்.செல்வராசு (தேமுதிக)  76,613

     2014ஆம் ஆண்டு தேர்தலில் முதல் மூன்று இடங்களைப்பிடித்தவர்கள்

     சி.கோபாலகிருஷ்ணன் (அதிமுக) 4,63,700
     ஆ. ராசா (திமுக)  3,58,760
     பி.காந்தி (காங்கிரஸ்)  37,702
     
     -ஏ.பேட்ரிக்
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai