கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்! அனுதாபம் தேடும் அதிமுக, திமுக

தமிழகத்தில் 1967-இல் காங்கிரûஸ வீழ்த்தி திமுக ஆட்சியைப் பிடித்த பிறகு கடந்த 52 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகின்றன.
கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்! அனுதாபம் தேடும் அதிமுக, திமுக

தமிழகத்தில் 1967-இல் காங்கிரûஸ வீழ்த்தி திமுக ஆட்சியைப் பிடித்த பிறகு கடந்த 52 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகின்றன.

 இதுமட்டுமல்லாது மத்தியில் அமைய வேண்டிய ஆட்சியையும் தீர்மானிக்கும் சக்திகளாக தமிழகத்தில் இந்த இரு கட்சிகள் மட்டுமே இன்றளவும் நீடித்து வருகின்றன. திமுக தலைவர் மு. கருணாநிதி, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஆகிய இருவரும் பேரவைத் தேர்தலாக இருந்தாலும், மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் தங்களது கட்சியே ஆட்சி அதிகாரத்தில் இடம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் சதுரங்கத்தில் கச்சிதமாக காய்களை நகர்த்தி வெற்றி பெற்று வந்தனர். மிகப் பெரும் ஆளுமைகளாக விளங்கிய கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் இரு கட்சிகளுமே முதன் முறையாக மக்களவைத் தேர்தலைச் சந்திக்கின்றன.

 இந்தச் சூழலில் அதிமுக நிலைக்க வேண்டுமெனில் மக்களவைத் தேர்தல் மட்டுமல்லாது, 22 தொகுதி இடைத்தேர்தலிலும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் ஏற்பட்டுள்ளது. அதேபோல, கருணாநிதி மறைவுக்குப் பிறகு கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கும், கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் பெரிதும் சவாலாகவே அமைந்துள்ளது.

 இதன் காரணமாக இரு கட்சிகளுமே தங்களது கட்சித் தொண்டர்களிடமும், பொதுமக்களிடத்திலும் அனுதாபத்தைத் தேட முயற்சித்து வருகின்றன.

 அதை உறுதிப்படுத்தும் வகையில், கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். அதுமட்டுமல்லாது தேர்தல் பிரசார கூட்டங்களில் எல்லாம், தலைவர் கருணாநிதி இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் என்பதைச் சுட்டிக்காட்டியே பேசி வருகிறார். கருணாநிதி இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை மேடைதோறும் பேசி கட்சித் தொண்டர்களின் அனுதாபத்தைப் பெற்று வருகிறார். கருணாநிதியின் மகனாக வந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். இது திமுக தொண்டர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 அதேபோல், அதிமுகவினரும் ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தலில், "மக்கள் எங்கள் பக்கம் இருந்து இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என தேர்தல் பிரசாரத்தில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

 கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்திலும் அனுதாபம் பெற முயற்சித்துள்ளனர். "தாயில்லாத பிள்ளைக்கு நடைபெறும் தலைப் பிரசவத்தைப் போல, ஜெயலலிதா இல்லாமல் மக்களவைத் தேர்தலை அதிமுக எதிர்கொள்கிறது என்றும், இந்தப் பிரசவம் சுகப்பிரசவமாகவே வெற்றி அடையும்' என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 மேலும் "வெல்லப் பாயும் குதிரை, கொள்ளும் நோக்காது, புல்லும் பார்க்காது என்பதுபோல அதிமுகவினர் பணிபுரிய வேண்டும்.

 மக்களவைக்கான 40 தொகுதிகள் மட்டுமல்லாது பேரவைக்கான இடைத்தேர்தலில் மொத்த வெற்றிகளையும் பெற்று வங்கக் கடலோரம் சந்தனப் பேழையில் உறங்கும் ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு காணிக்கையாக சமர்ப்பிப்போம்' எனவும் அந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது அக் கட்சியினரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 தலைவர்கள் இல்லாத முதல் தேர்தல் என்பது இரு கட்சிகளின் தொண்டர்களிடம் அனுதாபத்தைத் தேடித் தந்திருந்தாலும், இதே அனுதாபம் மக்கள் மத்தியிலும் எழுந்து வாக்குகளாக மாறுமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவில் விடை கிடைக்கும்.

 -ஆர். முருகன் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com