கேரளத்தில் ராகுல் போட்டியால் 3 மாநிலங்களில் தாக்கம்?

மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளது.
கேரளத்தில் ராகுல் போட்டியால் 3 மாநிலங்களில் தாக்கம்?

மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளது.

 தமிழக, கர்நாடக மாநிலங்களின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி, பிரபல சுற்றுலா மையமாகும். இத்தொகுதியில் தற்போது ராகுல் காந்தி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுவதால் நாடு முழுதும் புகழ்பெற்று விட்டது.

 2009 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் கோழிக்கோடு மக்களவைத் தொகுதியிலும், கண்ணூர் மக்களவைத் தொகுதியிலும் இடம் பெற்றிருந்த வயநாடு 2009ஆம் ஆண்டில்தான் பிரிக்கப்பட்டு தனி தொகுதியாக மாறியுள்ளது.

 அதன்பின்னர் நடைபெற்ற இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே இங்கு வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருந்த ஷாநவாஸின் மறைவுக்குப் பின்னர் மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தியே வேட்பாளராகக் களம் இறங்குகிறார்.

 வயநாடு மக்களவைத் தொகுதியில் கல்பெட்டா, சுல்தான் பத்தேரி, மானந்தவாடி, நிலம்பூர், ஏரநாடு, திருவம்பாடி, வண்டூர் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 13 லட்சத்து 20,000 வாக்காளர்கள் உள்ளனர்.

 இத்தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களேஅதிகம். கிறிஸ்தவர்கள், ஹிந்துக்கள், மவுண்டாடன் செட்டி வகையிலான பழங்குடியினர் உள்ளிட்டோரும் உள்ளனர்.

 கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இத்தொகுதியின் ஒருபுறம் தமிழகத்தின் நீலகிரி மக்களவைத் தொகுதியும், மற்றொரு புறம் கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர் மக்களவைத் தொகுதியும் அமைந்துள்ளன.

 காங்கிரஸ் கட்சியின் வலிமை வாய்ந்த தொகுதிகளில் ஒன்று வயநாடு மக்களவைத் தொகுதி என்றும், ராகுலின் வருகையால் தொண்டர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர் என்றும், வயநாடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மண்டலத் தலைவர் சிறில் ஜோசப் தெரிவித்தார். ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து அவர் தெரிவித்ததாவது:

 வயநாடு மக்களவைத் தொகுதி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும். இங்கு வசிப்பவர்களுக்கும், தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கும் அதிக தொடர்புள்ளது.

 குறிப்பாக இப்பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். வயநாடு தொகுதியின் நீலகிரி மாவட்ட எல்லையாக தாளூர், பாட்டவயல் பகுதிகள் அமைந்துள்ளன.

 ராகுல் காந்தி கேரளத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால், அதன் தாக்கம் அண்டை மாநிலங்களான கர்நாடகம், தமிழகத்திலும் மிகப் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

 ராகுல் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே இது பிரதமர் வேட்பாளர் போட்டியிடும் மாநிலமாக மாறிவிட்டது. அதனால் பெருமைக்குரிய தொகுதியாக மாறிவிட்ட வயநாடு மட்டுமின்றி கேரளத்திலும், கர்நாடகத்திலும் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றி பெறும்.

 அண்டை மாவட்டமும், அண்டை மக்களவைத் தொகுதியுமான நீலகிரி மாவட்டத்திலும் இதன் தாக்கம் பெரிதாக இருக்கும். இது திமுக- காங்கிரஸ் கூட்டணிக்குப் பெருமளவில் உதவும் என்று சிறில் ஜோசப் தெரிவித்தார்.
 வயநாடு தொகுதியை பாஜக தனது கூட்டணிக் கட்சியான பாரதிய தர்ம சேனாவுக்கு அளித்துள்ளது. அக்கட்சியின் சார்பில் துஷார் வெள்ளாப்பள்ளி போட்டியிடுகிறார்.
 - ஏ. பேட்ரிக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com