சுடச்சுட

  
  udhay

  கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தை புரட்டிப் போட்ட அரசியல் சூறாவளி செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலையுடன் ஓய்வுபெற்றது. தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் மட்டுமன்றி அவர்களது வாரிசுகளும் பிரசாரத்தில் ஈடுபட்டது கோடை வெயிலையும் தாண்டி அனல் கிளப்பியது.

   கருணாநிதியும், ஜெயலலிதாவும் உயிருடன் இருந்த வரை தங்களது கட்சி வேட்பாளர்களை அவர்களே அறிமுகம் செய்து வைத்து, பிரசாரத்தைத் தொடங்குவார்கள். அவர்களே பிரசாரக் களத்தின் பிரதான முகங்களாக இருந்து வந்தனர்.

   ஆனால், இன்றைக்கு இந்த இரண்டு தலைவர்களும் இல்லாத நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் தங்களுடைய வாரிசுகளையும், குடும்ப உறுப்பினர்களையும் நம்பியே பிரசாரத்தை மேற்கொண்டனர்.

   சினிமா மூலம் தனது முகத்தை பட்டி, தொட்டியெல்லாம் அறிமுகப்படுத்திக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின், இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன் மூலம் அரசியலில் அடுத்தகட்ட நகர்வை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறார்.

   நேரடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், தருமபுரி பாமக வேட்பாளரான அன்புமணிக்கும் பிரசாரத்தின்போது சவால் விடுத்தார்.

   "முதல்வர் பழனிசாமி என்னுடன் கிராமத்துக்கு வரட்டும். மக்கள் யாரிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் முன்வைக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்' என்றார்.

   அதுபோல, சேலம் 8 வழிச்சாலை திட்டம் பற்றி விவாதம் செய்ய நான் தயார் என்று, அன்புமணியை வம்புக்கு இழுத்தார். இவருடைய இந்த அதிரடி பிரசாரம் ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும், மறுபுறம் விமர்சனங்களுக்கும் வித்திட்டது.

   இவரைப் போலவே, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். விஜயகாந்தை சந்திக்க வந்த தலைவர்களையே சாடும் வகையில், "ஏன் எங்கள் வீட்டு வாசலில் கூட்டணிக்காக வந்து நிற்கிறீர்கள்? என்பதில் தொடங்கி, பிரசாரத்திலும் சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியது விவாதப் பொருளானது.

   திமுக தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், தனது இரண்டு மகள்களையும் பிரசாரத்துக்கு அழைத்துச் சென்றது, தொகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

   அதுபோல, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனின் மகன், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணியின் மகள் என எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு தலைவர்களின் வாரிசுகள் இம்முறை தேர்தல் பிரசாரத்தில் இறக்கிவிடப்பட்டனர்.

   இது வாரிசுகளின் அரசியல் பிரவேசத்துக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.

   - எம்.மார்க் நெல்சன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai