கசக்கும் கூட்டணி கணக்கு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோலோச்சும் ஜாதி, மத அரசியல் அடிப்படையிலான வாக்கு வங்கிதான் தேர்தல் முடிவுகளை
கசக்கும் கூட்டணி கணக்கு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோலோச்சும் ஜாதி, மத அரசியல் அடிப்படையிலான வாக்கு வங்கிதான் தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதாக இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது.

 தேர்தலையொட்டி பொதுமக்களின் கருத்துக்களுடன் பல்வேறு ஊடக தளங்களில் வெளியாகி வரும் செய்திகளை அலசி, ஆராய்ந்து பார்ப்பதன் மூலமாக அங்குள்ள வாக்காளர்களின் நாடி எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்கலாம். தேசியப் பிரச்னைகள், ஜாதிய அடிப்படையிலான கூட்டணி மற்றும் இதர விஷயங்களை மக்கள் எவ்விதம் எதிர்கொள்கின்றனர் என்பதை அறிய அது உதவுகிறது.

 யாதவர்களையும், முஸ்லிம்களையும் வாக்கு வங்கியாகக் கொண்ட சமாஜவாதி, தாழ்த்தப்பட்ட பிரிவினரை வாக்கு வங்கியாகக் கொண்ட பகுஜன் சமாஜ், ஜாட் ஜாதியினரை அடித்தளமாகக் கொண்ட ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகள் இணைந்த மகா கூட்டணிதான் பாஜகவுக்கு மாபெரும் சவாலாக விளங்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கணக்கு. இம்மக்களைக் கூட்டுத் தொகையாக கணக்கிடுகையில், 47 தொகுதிகளில் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்ற அடிப்படையில்தான் இந்தக் கூட்டணிக்கு அதே அளவிலான தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 ஆனால், மேல்மட்டத் தலைவர்களிடம் உதயமாகியுள்ள நட்பையும், புன்சிரிப்பையும், களத்தில் உள்ள தொண்டர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் காண முடிவதில்லை என்று களநிலவரம் கூறுவதாக ஊடக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரசிடம் உள்ள புள்ளிவிவரங்களை ஆராய்ந்தால், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நடத்திய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் யாதவர்களே முன்னிலையில் இருப்பார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கீழ் மட்டத் தலைவர்கள் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றுவது கேள்விக்குறியே.

 அகிலேஷ் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது, தங்களின் கால்நடைகள் அடிக்கடி களவு போனதாகவும், அதுபோன்ற சம்பவங்களை அவரது அரசு கட்டுப்படுத்த தவறியது என்றும் தலித் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். தற்போதைய யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, இதைக் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதுடன், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அவர்களே சொல்கின்றனர்.

 பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைந்தது குறித்து சமாஜவாதியின் நிறுவனர் முலாயம் சிங் ஒரு சமயம் வெளிப்படையாகவே தனது அதிருப்தியை தெரிவித்துவிட்டார். எனினும், அனைவரையும் சமரசப்படுத்தி, கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்பட வைக்க வேண்டிய பொறுப்பு கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவுக்கு இருக்கிறது.

 அதே சமயம், தொண்டர்கள் தவிர்த்த, சமாஜவாதி கட்சிக்கு வாக்களிக்கும் ஆதரவாளர்கள் மாற்று யோசனைகளுக்கு இடம் கொடுப்பார்கள் என்ற நிலை காணப்படுகிறது. முலாயம் சிங்கின் சொந்த சகோதரர் சிவபால் யாதவ், அகிலேஷ் மீதான அதிருப்தியில் தனிக் கட்சி தொடங்கியவர். இந்நிலையில், யாதவர்கள் அவரது கட்சிக்கு அல்லது பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

 உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் முஸ்லிம்கள் இயல்பாக சமாஜவாதி கட்சியை ஆதரிப்பவர்கள். காங்கிரஸ் கட்சிக்கும் அவர்களது கணிசமான ஆதரவு உண்டு. முத்தலாக் தடை அவசரச் சட்டம், ராமர் கோயில் விவகாரம் போன்றவை கடைநிலையில் உள்ள முஸ்லிம் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், பிரதமர் மோடி அரசு மீதான நேரடி அதிருப்தியைக் காட்டிலும், முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளூர் பாஜக தலைவர்கள் முன்வைக்கும் அடாவடியான கருத்துகளே அவர்களை வெறுப்படைய வைத்துள்ளன.

 நலத்திட்டங்களால் பலன்
 பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்ற விஷயங்களில் எதிர்க்கட்சிகளின் ஆக்ரோஷமான தாக்குதல்களுக்கு பாஜக ஆளாகியிருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்த மனநிலைதான் காணப்படுகிறது.

 அதே சமயம், விவசாயிகளுக்கு பாஜக அறிவித்துள்ள உதவித்தொகை திட்டத்தின்படி, முதல்கட்ட தொகை வந்து சேர்ந்திருப்பதை பலர் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர். அதேபோன்று, விவசாயிகளுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள் தடையின்றி கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்திருப்பதையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம், தூய்மை இந்தியா திட்டம் ஆகியவற்றின் மூலமாக சிலருக்கு வீடுகளும், பலருக்கு கழிவறைகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. குறிப்பாக, தலித் மக்களை உள்ளடக்கிய பெருவாரியான ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு கிடைத்திருக்கிறது.

 பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதேபோன்ற சமூக நலத்திட்டப் பலன்கள் இன்னும் கூடுதலாகக் கிடைக்கும் என்பது அடித்தட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 வாராணசியுடன் ஒப்பீடு
 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி, அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாராணசி உள்ளிட்டவை நட்சத்திரத் தொகுதிகளாக உள்ளன. சோனியாவும், ராகுல் காந்தியும் பல ஆண்டுகளாக எம்.பி.க்களாக இருந்தாலும் கூட, அவர்களது தொகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் வாராணசி தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அளவுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்ற ஒப்பீட்டை வாக்காளர்கள் முன்வைக்கின்றனர்.

 முக்கியத்துவம் பெறும் தேசப் பாதுகாப்பு
 பொதுவாக தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் இல்லாத மாநிலங்களில் செல்வாக்குள்ள பிராந்திய கட்சிகள் அல்லது அக்கட்சிகளை எதிர்த்து நிற்கும் பிராந்தியக் கட்சிகளுக்கு வாக்காளர்களின் கணிசமான ஆதரவு எப்போதும் உண்டு. அதே சமயம், தேசியப் பாதுகாப்பை எந்தக் கட்சி முன்னெடுத்துச் செல்ல இயலும் என்ற கோணத்திலும் வாக்காளர்கள் சிந்திக்கின்றனர்.


 இத்தகைய சூழலில், தேசப் பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகின்றனர் உத்தரப் பிரதேச வாக்களார்கள். உள்ளூர் பிரச்னைகள் மற்றும் பிற விவகாரங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் தீர்வு காணலாம். ஆனால், பலவீனமான பிரதமரை தேர்வு செய்தால் தேசப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பது அங்குள்ள மக்களின் வாதமாக இருக்கிறது.

 பாலாகோட்டில் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலை பொருத்தவரையிலும் அரசியல் கட்சிகளின் எதிர்மறையான விமர்சனங்கள் யாவும் உத்தரப் பிரதேசத்தில் புறம்தள்ளப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக துணிச்சலுடன் பதிலடி கொடுக்கும் வேறொரு தலைவர் உண்டா? என்பதே சாதாரண வாக்காளரின் கேள்வியாக இருக்கிறது.

 இந்த நிலையில், தேசவிரோதச் சட்டம் திரும்பப் பெறப்படும், ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருக்கிறது. அவை தேசப் பாதுகாப்புக்கு எதிரானவை என்றும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை காங்கிரஸ் விரும்பவில்லை என்றும் பாஜக பதிலடி அளித்திருக்கிறது. மோடியின் பிரசாரமும்கூட இதை முன்னிறுத்தியே உள்ளது.

 ஆக, மொத்தத்தில் தேசப் பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்துடன் தேர்தலை அணுகும் வாக்காளர்களைக் கவருவதில் பாஜக முந்திக் கொள்கிறது என்பதே கள யதார்த்தமாக இருக்கிறது.

 - இராம. பாரதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com