குறுகிய கால பிரதமர்: எச்.டி.தேவெ கௌடா

ஹரதனஹள்ளி தொட்டேகெüடா தேவெ கெüடா எனப்படும் எச்.டி.தேவெ கெüடா, கர்நாடக அரசியல் வரலாற்றில் முக்கியமான தடத்தைப் பதித்துள்ளவர்.
குறுகிய கால பிரதமர்: எச்.டி.தேவெ கௌடா

ஹரதனஹள்ளி தொட்டேகெளடா தேவெ கெளடா எனப்படும் எச்.டி.தேவெ கெளடா, கர்நாடக அரசியல் வரலாற்றில் முக்கியமான தடத்தைப் பதித்துள்ளவர். 1933ஆம் ஆண்டு பிறந்த அவர், ஹாசனில் உள்ள எல்.வி.பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமா படிப்பை முடித்தார்.

 இளம் வயதில் இருந்தே பொது வாழ்க்கையில் நாட்டம் கொண்டிருந்த தேவெ கெளடா, 1953ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 1962-ஆம் ஆண்டுவரை அக்கட்சியில் தீவிரமாகப் பணியாற்றினார். பின்னர், காங்கிரஸில் இருந்து விலகி, 1962-இல் முதல்முறையாக ஹொளேநரசிபுரா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 முதல் 1989வரை இதே தொகுதியில் இருந்து 6 முறை வென்று சாதனை படைத்தார். 1969-இல் காங்கிரஸ் பிளவுப்பட்டபோது காங்கிரஸ் (ஓ) கட்சியில் இணைத்துக் கொண்ட பிறகு, கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார். நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் 1975 முதல் 1977-ஆம் ஆண்டுவரை பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில் காங்கிரஸ் (ஓ) உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஜனதா கட்சியாக உருவெடுத்தபோது, அக்கட்சியின் முக்கியத் தலைவராக உயர்ந்தார். கர்நாடக மாநில ஜனதா கட்சித் தலைவராக இருமுறை பதவி வகித்தார்.

 தென்னிந்தியாவில் முதல்முறையாக 1983-இல் கர்நாடகத்தில் காங்கிரஸ் அல்லாத ஜனதா கட்சி ஆட்சிஅமைவதற்கு மூளையாகச் செயல்பட்டவர்களில் தேவெ கெளடா முக்கியமானவர். ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் அமைந்த ஜனதா கட்சி அரசில் 1983 முதல் 1988 வரை அமைச்சராகப் பதவி வகித்தார்.
 முதல்வர் பதவி: பின்னர், ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வி.பி.சிங் தலைமையில் ஜனதா தளமாக மாறிய போது, 1994-இல் கர்நாடக மாநில ஜனதா தள தலைவரானார். அந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராமநகரம் தொகுதியில் போட்டியிட்டு வென்று கர்நாடகத்தின் 14-ஆவது முதல்வராக உயர்ந்தார்.

 2 ஆண்டுகளே முதல்வராகப் பதவி வகித்திருந்தாலும், கர்நாடக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்தார். அரசுப் பணியில் 30 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கினார். இந்தியாவில் முதல்முறையாக வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு அளித்தார்.
 
 பிரதமர் பதவி: 1996ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மாநிலக் கட்சிகளின் கூட்டணி தேசிய அளவில் அமைந்து, அது ஐக்கிய முன்னணியாகப் பரிணமித்தது.

 ஐக்கிய முன்னணி கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முன்வந்தது.

 பிரதமர் பொறுப்பை வி.பி.சிங், ஜோதிபாசு, ஜி.கே.மூப்பனார் போன்ற தலைவர்கள் ஏற்க மறுத்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில், பிரதமர் பதவி எச்.டி.தேவெ கெளடாவை வந்தடைந்தது. 1996, ஜூன் 1ஆம் தேதி நாட்டின் 11-ஆவது பிரதமராக தேவெ கெளடா பதவியேற்றுக் கொண்டார். முள்பாதையில் பயணம் மேற்கொண்டதைப் போல, 13 கட்சிகளின் கூட்டணியுடன் பிரதமர் பதவியை வகித்தார்.

 ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற்றது. நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, 1997ஆம் ஆண்டு ஏப்.21-ஆம் தேதி தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார்.
 பத்து மாதங்கள் 10 நாள்கள் என குறுகிய காலமே அவர் பிரதமராக பதவி வகித்தார்.
 மதச்சார்பற்ற ஜனதா தளம்: 2006-இல் தனது விருப்பத்துக்கு மாறாக அவரது மகன் எச்.டி.குமாரசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருந்தார். இதை தேவெ கெளடா கடுமையாக எதிர்த்தார். தனது மகன் என்றும் பாராமல் குமாரசாமியை குடும்பத்தில் இருந்து விலக்கி வைத்திருந்தார்.

 பின்னர், பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு எச்.டி.குமாரசாமியை முதல்வராக்குவதே தனது லட்சியம் என்று கர்நாடகத்தில் மட்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2008-ஆம் ஆண்டில் இருந்து கர்நாடக அரசியலில் அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பைக் கைப்பற்ற முடியாமல் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் தேவெ கெளடா, காங்கிரஸ் ஆதரவுடன் தனது மகன் குமாரசாமி தலைமையில் 2-ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.

 2008-ஆம் ஆண்டு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி பாஜகவுக்கு ஆட்சி அதிகாரத்தை தேவெ கெளடா ஒப்படைக்கவில்லை. இது 2008-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மஜதவுக்கு பெரும் பின்னடைவை தந்தது.

 தனது மகன்கள் எச்.டி.குமாரசாமி, எச்.டி.ரேவண்ணாவின் துணையுடன் மஜதவை நடத்திவரும் தேவெ கெளடா, ஒக்கலிகர் சமுதாயத்தின் முக்கியத் தலைவராக கருதப்படுகிறார்.
 - ந. முத்துமணி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com