மாற்றத்தை எதிர்நோக்கி வடசென்னை

சென்னை பெருநகர மாநகரம் "காஸ்மோபாலிட்டன் சிட்டி' என்ற அந்தஸ்து அளவிற்கு வளர்ந்துள்ளபோதிலும் வட சென்னை என்பது இன்னும் அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டிய நிலையில்தான் உள்ளது.
மாற்றத்தை எதிர்நோக்கி வடசென்னை

சென்னை பெருநகர மாநகரம் "காஸ்மோபாலிட்டன் சிட்டி' என்ற அந்தஸ்து அளவிற்கு வளர்ந்துள்ளபோதிலும் வட சென்னை என்பது இன்னும் அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டிய நிலையில்தான் உள்ளது. ஆனால் தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்திப் பிடிக்கும் ஆயிரக்கணக்கான கனரக, நடுத்தர, குறு தொழிற்சாலைகள் வடசென்னையில்தான் அமைந்துள்ளன.

சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மெட்ராஸ் உரத் தொழிற்சாலை, அசோக் லேலண்டு, எண்ணூர் பவுண்டரீஸ், கோத்தாரி உர ஆலை, எண்ணூர் அனல் மின் நிலையம், எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை, என்பீல்டு, சிம்சன் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் இங்குதான் உள்ளன. இது தவிர நூற்றுக்கணக்கான பருப்பு ஆலைகள், பாத்திரம் தயாரிக்கும் தொழிற்கூடங்கள், மிட்டாய், ரொட்டி, தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழில்கள் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதியில் ஆயிரக்கணக்கில் உள்ளன. தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் தொழிலாளர்கள் நிறைந்து வசிக்கும் தொகுதி வடசென்னை ஆகும். 2008-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையும் இத்தொகுதியில் கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்: 1957 தேர்தல் முதல் வடசென்னை தொகுதி இருந்து வருகிறது. முதல் தேர்தலில் தொழிற்சங்கத் தலைவர் எஸ்.சி.சி. அந்தோனி பிள்ளை சுயேட்சையாகப் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.செங்கல்வராயனை தோற்கடித்தார். 1962-இல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.சீனிவாசன் வெற்றி பெற்றார். 1967 மற்றும் 1972-இல் நாஞ்சில் கி.மனோகரன் (தி.மு.க.), 1980-இல் ஜி.லட்சுமணன் (தி.மு.க.) 1984, 1996-இல் என்.வி.என்.சோமு (திமுக) வெற்றி பெற்றனர். இதனையடுத்து 1989 மற்றும் 1991 தேர்தல்களில் தொழிற்சங்கத் தலைவர் தா.பாண்டியன் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்டு வென்றுள்ளார். 1998 முதல் 2004-ஆம் ஆண்டு வரை மூன்று முறை செ.குப்புசாமி (திமுக) வெற்றி பெற்றார். 2009-ல் டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.) வெற்றி பெற்றார். இந்நிலையில் கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலில்தான் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட டி.ஜி.வெங்கடேஷ்பாபு, திமுக வேட்பாளர் கிரிராஜனைவிட சுமார் ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முதன் முறையாக இத்தொகுதியைக் கைப்பற்றியது அ.தி.மு.க. கடந்த பதினைந்து பொதுத் தேர்தல்களில் பத்து முறை தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது.

 வாக்காளர்கள் பின்னணி: இத்தொகுதியின் வாக்காளர்களில் வன்னியர், ஆதிதிராவிடர், மீனவர் உள்ளிட்டோர் பெரும்பான்மையாக உள்ளனர். மேலும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த தெலுங்கு பேசும் மக்கள், நாடார், முதலியார், செட்டியார், கிராமணியார் உள்ளிட்டோர் கணிசமாக வசிக்கின்றனர். இது தவிர வியாசர்பாடியில் சர்மா நகர், பக்தவச்சலம் காலனி, தண்டையார்பேட்டையில் நேதாஜிநகர், வ.உ.சி. நகர், எண்ணூரில் அன்னை சிவகாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தாயகம் திரும்பிய பர்மா தமிழர்கள் குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளில் பெரும்பான்மையான அளவில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இத்தொகுதியில் திருவி.க.நகர், கொளத்தூர் பகுதிகள் இணைக்கப்பட்டதையடுத்து அரசு ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இத்தொகுதியில் உள்ளது.

 சட்டப் பேரவை உறுப்பினர்கள்: வடசென்னை மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மூன்றில் தி.மு.க.வைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின்-கொளத்தூர், தாயகம் கவி - திரு.வி.க.நகர், கே.பி.பி.சாமி-திருவொற்றியூர் ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். ராயபுரம் தொகுதியில்- அமைச்சர் டி.ஜெயக்குமாரும், ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரனும் வெற்றி பெற்று உறுப்பினர்களாக உள்ளனர். இத்தொகுதியில் அடங்கிய பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற பி.வெற்றிவேல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து இங்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 6 மண்டலங்களைச் சேர்ந்த 51 வார்டுகள் இதில் அடங்கியுள்ளன.

 முக்கியப் பிரச்னைகள்: சென்னையின் வடக்கு முனையில் உள்ள எண்ணூர் முகத்துவாரம் முறையாக தூர்வாரப்படாததால் மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பிரச்னை, துர்நாற்றம் வீசும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, சுத்திக்கரிக்கப்படாத சாக்கடை கழிவுகள், சட்டவிரோதமாகத் திறந்து விடப்படும் ரசாயனக் கழிவுகளால் சீரழிவின் விளிம்பில் உள்ள பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கபடாதது, தொடரும் கடலரிப்பு, குறுகலான சாலைகளில் கொட்டிக் கிடக்கும் கட்டடக் கழிவுகள், துறைமுகத்திலிருந்து மணலி வரை பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய்களால் சீர்கெட்டுப் போன நிலத்தடி நீர், இங்குள்ள தொழிற்சாலைகளில் வடமாநிலத் தொழிலாளர்களின் ஆதிக்கம், செயற்கைக்கோள் நகரம் என அறிவிக்கப்பட்ட மணலி புதுநகர் இதுவரை அடிப்படை வசதிகளைக் கூட எட்ட முடியாமல் இருப்பது, நீண்ட நாள் கோரிக்கையான ராயபுரம் பயணிகள் ரயில் முனைய திட்டத்தை கிடப்பில் போட்டது.,

 காசிமேடு மீன்பிடித் துறைமுகம் நவீனப்படுத்தப்படாதது, கடற்கரையில் தொடர்ந்து ரசாயனக் கழிவுகள் கொட்டப்படும் பிரச்னைகள் நீண்ட காலமாக உள்ளன.

 தொகுதி கள நிலவரம்: இத்தொகுதியில் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் முக்கிய வேட்பாளர்களாக திமுக சார்பில் டாக்டர் கலாநிதி வீராசாமி, அதிமுக கூட்டணியின் சார்பில் தேமுதிக கட்சி வேட்பாளர்அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சுயேச்சையாக பி.சந்தானகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் சார்பில் எ.ஜி.மெளரியா ஆகியோர் களத்தில் உள்ளனர். இது தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் பி.காளியம்மாள் போட்டியிடுகிறார்.

 கடந்த தேர்தல்களில் தி.மு.க. வடசென்னை தொகுதியில் 10 முறை வென்றுள்ளதும், தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதும் திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதிக்கு சாதகமான அம்சம். மேலும், இவரது தந்தை ஆற்காடு வீராசாமி இப்பகுதி கட்சியினரிடையே நன்கு அறிமுகம் இருப்பதாலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் வெற்றி பெற்றுள்ளதாலும் கட்சி முன்னோடிகள் எவ்வித சலசலப்பும் இன்றி உற்சாகத்துடன் பணியாற்றுகின்றனர். தொழிலாளர்கள் நிரம்பிய பகுதி என்பதால் திமுக, இடதுசாரி, காங்கிரஸ் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொளத்தூர், திரு.வி.க. நகர் தொகுதிகளில் அரசு ஊழியர்கள் அதிகம் வசிப்பதும் திமுகவுக்குச் சாதகமாகப் பார்க்கப்படுகிறது.

 அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தே.மு.தி.க.வில் மாநில அளவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாலும், ஏற்கனவே சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவராக இருந்ததாலும் அதிமுகவின் அமைச்சர்கள், கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்கு அறிமுகமானவராகவே இருக்கிறார். மேலும் 2014-இல் இத்தொகுதியை அதிமுக வேட்பாளர் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல் முறையாகக் கைப்பற்றி இருப்பதும், அதே தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் எம்.சவுந்திரராஜன் சுமார் 86 ஆயிரம் வாக்குகளைப் பெற்றதும் அழகாபுரம் மோகன்ராஜுக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது. அதோடு தமாகா, பாமக கட்சிகள் கூட்டணியில் இருப்பதும், அமைச்சர் டி.ஜெயக்குமார் முன்னின்று தேர்தல் பணியாற்றுவதும் கூடுதல் பலம்.

 அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடும் பி.சந்தானகிருஷ்ணன் கட்சியின் மாவட்டச் செயலாளராக உள்ளார். வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவி.க. நகரில் வசிக்கிறார். தொகுதி மக்களிடம் ஒரளவுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். வடசென்னைக்கு உட்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் பெற்ற வெற்றி வடசென்னை முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கையில் களத்தில் இறங்கியுள்ளார் சந்தானகிருஷ்ணன். மேலும் அமமுகவிற்கு வடசென்னையில் பகுதியில் ஓரளவு ஆதரவு இருப்பதால் கணிசமான அளவு வாக்குகளை வாங்கும் அளவுக்கு சந்தானகிருஷ்ணன் முன்னேறுகிறார்.

 மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஏ.ஜி.மெளரியா, இப்பகுதியில் பல்வேறு இடங்களில் திறம்பட காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமானவர். பணியிலிருந்த போது சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற ஆற்றிய சாதனைகளை எடுத்தக்கூறி வாக்குகளைச் சேகரித்து வருகிறார். மேலும் கமல்ஹாசன் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டதும், அதனைத் தொடர்ந்து இளைஞர் பட்டாளத்துடன் வீதி வீதியாகச் சென்று பிரசாரத்தில் மௌரியா ஈடுபட்டு மக்களின் கவனத்தை கணிசமான அளவில் ஈர்த்து வருகிறார்.

 இவர்களைத் தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் பி.காளியம்மாள் போட்டியிடுகிறார். மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த இவர் பெண் வேட்பாளர் என்ற தகுதி கூடுதலாக உள்ளதால் பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 எனவே, அமமுக வேட்பாளரும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும் யாருடைய வாக்குகளைப் பிரிக்கிறார்கள், எவ்வளவு வாக்குகள் மொத்தமாக வாங்குகிறார்கள் என்பதைப் பொருத்தே வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என்பதே தற்போதைய உண்மை நிலவரம்.

 வாக்காளர்கள் விவரம்
 ஆண்கள் 7,28,679
 பெண்கள் 7,58,326
 மூன்றாம் பாலினம் 456
 மொத்தம் 14,87,461
 
 - முகவை க.சிவகுமார் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com