கொள்கை சமரசத்தில் ஆம் ஆத்மி கட்சி

ஊழல் எதிர்ப்பு என்ற கொள்கையின் அடிப்படையில் உதயமான ஆம் ஆத்மி கட்சி, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஹரியாணாவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
கொள்கை சமரசத்தில் ஆம் ஆத்மி கட்சி

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னம் "துடைப்பம்'. ஜனநாயக ஜனதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள சின்னம் "காலணி'. இந்த இரண்டையும் வைத்து ஹரியாணாவில் உள்ள அனைத்து முள்களையும் அகற்றுவோம்.

- துஷ்யந்த் செளதாலா

ஊழல் எதிர்ப்பு என்ற கொள்கையின் அடிப்படையில் உதயமான ஆம் ஆத்மி கட்சி, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஹரியாணாவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அரசியல் களத்தில் புதியது என்பதால் அக்கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை. ஆனால், அக்கட்சிக்கு பின்னால் ஓர் வரலாறு இருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் நடைபெற்ற 2014 மக்களவைத் தேர்தலில், நாடெங்கிலுமாக 434 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அந்தத் தேர்தலில், தேசிய அளவில் 2 சதவீத வாக்குகளை மட்டுமே ஆம் ஆத்மி கட்சியால் பெற முடிந்தது. தில்லியில் 32.9 சதவீத வாக்குகளை பெற்றிருந்தாலும் ஓரிடத்தில் கூட ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற முடியவில்லை.

நாடெங்கிலும் பெரிய அளவிலான எழுச்சியைக் காணாத போதிலும் ஒரு சில மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கான அறிமுக வரவேற்பு கிடைத்தது. பஞ்சாபில் 24.40 சதவீத வாக்குகளைப் பெற்ற அக்கட்சி, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. தில்லி, பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்கள் தவிர்த்து கோவா, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது 2014 மக்களவைத் தேர்தல்.

ஆனால், காலங்கள் உருண்டோடியதில் தில்லி தவிர்த்த மற்ற மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வது குதிரைக் கொம்பாக மாறிப்போனது. குறிப்பாக, தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்துவதற்கு வலிமையான கூட்டணியை அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஆம் ஆத்மி கட்சிக்கும் ஏற்பட்டது. இதன் விளைவாக, "ஊழல் எதிர்ப்பு' என்ற கட்சியின் பிரதான கொள்கையை சமரசம் செய்து கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டது ஆம் ஆத்மி கட்சி.

காங்கிரஸூடன் பேச்சு தோல்வி

மக்களவைத் தேர்தலையொட்டி தில்லி, ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியை ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்டது. மத்தியில் ஆண்ட முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இறுதிக் காலத்தில் ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பிரசார இயக்கத்தில் இருந்துதான் ஆம் ஆத்மி கட்சி உதயமானது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதே சமயம், காங்கிரஸ் உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதுகுறித்த விரிவான கட்டுரை, தினமணியின் இதே தேர்தல் உலா பக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.

ஹரியாணாவில் புதிய கூட்டணி

காங்கிரஸ் கட்சி "கை' விட்ட நிலையில், ஹரியாணா மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜனநாயக ஜனதா கட்சியுடன் (ஜேஜேபி) ஆம் ஆத்மி கட்சி கூட்டணியை உறுதி செய்துள்ளது. இங்கு மொத்தமுள்ள 10 தொகுதிகளில் ஜனநாயக ஜனதா கட்சி 7 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஹரியாணா அரசியலில் பாஜக தவிர்த்த அனைத்துக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி இளம் தலைவர்களாக வளர்ந்து கொண்டிருக்கும் சகோதரர்களான துஷ்யந்த் செளதாலா மற்றும் திக்விஜய் செளதாலா ஆகியோரை தலைமையாகக் கொண்ட ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கும், அவர்களுக்கும் பரஸ்பரம் பலன் தருவதாக அமையும் என்றே எதிர்பார்க்கலாம்.

யார் இந்த சகோதரர்கள்?

ஹரியாணாவில் செல்வாக்கு மிகுந்த கட்சியாக இருந்த இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு வெளியேற்றப்பட்ட பிறகு, ஜனநாயக ஜனதா கட்சி என்ற புதிய அமைப்பை துஷ்யந்த் மற்றும் திக்விஜய் சகோதரர்கள் தொடங்கினார்கள். அதே வேகத்தில், ஜிந்த் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார் திக்விஜய் செளதாலா. அத்தொகுதியில்,  எம்.எல்.ஏ.வாக இருந்த, இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் ஹரி சந்த் மிதா காலமானதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெற்றது. அவரது மகன் கிருஷ்ண சந்த் மிதாவை வேட்பாளராகக் களமிறக்கி வெற்றி கண்டது பாஜக. அத்தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் துஷ்யந்த் செளதாலா.

காரணம், சுயேட்சையாகப் போட்டியிட்ட போதிலும் அவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். குறிப்பாக, காங்கிரஸின் பலமான வேட்பாளரான, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரண்தீப்சிங் சுர்ஜேவாலாவை பின்னுக்குத் தள்ளினார். தங்களுக்கு விரோதியாகிப் போன இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் வேட்பாளரை வைப்புத் தொகையை இழக்க வைத்தார்.

அரசியலில் வாரிசுச் சண்டை

துஷ்யந்த் - திக்விஜய் சகோதரர்கள் இருவரும் இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு, அவர்களது குடும்பத்தில் ஏற்பட்ட அரசியல் அதிகாரப் போட்டியே காரணமாக அமைந்தது. இவர்கள் இருவரும் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலாவின் பேரன்கள். அதாவது, இந்திய தேசிய லோக் தளம் கட்சியைத் தொடங்கிய, முன்னாள் துணைப் பிரதமரான செளதரி தேவி லாலின் கொள்ளுப் பேரன்கள். இக்கட்சி, ஜாட் உயர் ஜாதியினரை அடித்தளமாகக் கொண்டது.

ஓம் பிரகாஷ் செளதாலா ஹரியாணாவில் 5 முறை முதல்வராக இருந்தவர். அவருக்கு அஜய் சிங் செளதாலா, அபய் சிங் செளதாலா என இரு மகன்கள் உள்ளனர். இருவருமே அரசியல் தலைவர்கள். அஜய் சிங் செளதாலாவின் மகன்கள்தான் துஷ்யந்த் - திக்விஜய் ஆகிய இருவரும். இதில் துஷ்யந்த் எம்.பி.யாக இருக்கிறார்.

இந்நிலையில், இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதில் துஷ்யந்த் - திக்விஜய் சகோதரர்களுக்கும், அவர்களது சித்தப்பா அபய் சிங் செளதாலாவுக்கும் இடையே நேரடி யுத்தம் நடைபெற்றது. இறுதியில், சகோதரர்கள் இருவரும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மாவட்ட தலைவர்கள் மற்றும் இதர நிர்வாகிகள் சகோதரர்களின் பின்னால் அணிவகுத்ததால், இந்திய தேசிய லோக் தளம் கட்சி வலுவிழந்து போனது.

ஊழல் வரலாறு

எல்லாம் சரிதான். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில், ஓம் பிரகாஷ் செளதாலாவும், அஜய் சிங் செளதாலாவும் எங்கே போனார்கள்? என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்றெல்லாம் கேள்விகள் எழக் கூடும். அவர்கள் இருவரும் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஹரியாணாவில் ஆட்சியில் இருந்தபோது, இளநிலை ஆசிரியர்களை பணியமர்த்தியதில் ஊழல் செய்தது நிரூபணமாகி, தந்தை, மகன் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அதை உச்சநீதிமன்றம் வரை உறுதி செய்தாகிவிட்டது.

துஷ்யந்த் - திக்விஜய் சகோதரர்களை கட்சியை விட்டு நீக்குவது குறித்து, சிறையில் இருந்தபடி அறிவிப்பு வெளியிட்டது அவர்களது தாத்தா ஓம் பிரகாஷ் செளதாலாதான். என்னதான் இருந்தாலும், துஷ்யந்த் - திக்விஜய் சகோதரர்கள் மீதும், அவர்களது புதிய அமைப்பான ஜனநாயக ஜனதா கட்சி மீதும் ஊழல் குற்றச்சாட்டு கிடையாது என்பதுதான் யதார்த்தமான உண்மை. இந்த தெளிவின் அடிப்படையில்தான் ஆம் ஆத்மி கட்சி அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கிறது போலும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com