நட்சத்திரத் தொகுதி!

தமிழகத்தைப் போல் 2 மடங்கு மக்களவைத் தொகுதிகளையும், கேரளத்தைப் போல் 4 மடங்கு மக்களவைத் தொகுதிகளையும் கொண்டது உத்தரப் பிரதேசம்.
நட்சத்திரத் தொகுதி!

தமிழகத்தைப் போல் 2 மடங்கு மக்களவைத் தொகுதிகளையும், கேரளத்தைப் போல் 4 மடங்கு மக்களவைத் தொகுதிகளையும் கொண்டது உத்தரப் பிரதேசம். நாட்டிலேயே அதிக தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலம், ஒவ்வொரு மக்களவைத் தேர்தலின்போதும், புதிய அரசு ஆட்சியமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னெள மக்களவைத் தொகுதியானது, லக்னெள வடக்கு, லக்னெள மேற்கு, லக்னெள கிழக்கு, லக்னெள சென்ட்ரல், லக்னெள கன்டோன்மென்ட் ஆகிய 5 பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதி தொடக்க காலம் முதலே நட்சத்திரத் தொகுதியாக உள்ளது.

1951-இல் நடைபெற்ற முதலாவது மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் தங்கை விஜயலெட்சுமி பண்டிட் வெற்றி பெற்றார். 

அப்போதிருந்து 1989-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 10 மக்களவைத் தேர்தலில் 7 முறை காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. ஒருமுறை ஜனதா தளமும், ஒரு முறை பாரதிய லோக் தளம் கட்சியும், ஒரு முறை சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர். அதன் பிறகு லக்னெள தொகுதியின் வரலாற்றில் கடந்த 1991-ஆம் ஆண்டில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.

அதுவரை பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியே தக்கவைத்துக் கொண்டிருந்த அந்தத் தொகுதி, 1991-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வசம் சென்றது.

அந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 1 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு 2004-ஆம் ஆண்டு வரை அந்தத் தொகுதி வாஜ்பாய் வசம் இருந்தது.

1996-இல் நடைபெற்ற தேர்தலில் 1 லட்சத்து 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், 1998-இல் நடைபெற்ற தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், 1999-இல் நடைபெற்ற தேர்தலில் 1 லட்சத்து 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், 2004-இல் நடைபெற்ற தேர்தலில் 2 லட்சத்து 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வாஜ்பாய் வெற்றி பெற்றார்.
இவ்வாறு தொடர்ச்சியாக 4 முறை லக்னெள தொகுதியில் தனது வெற்றியை மீண்டும் மீண்டும் பதிவு செய்து வந்த நிலையில், 2005-ஆம் ஆண்டில் அதிரடி அறிவிப்பை ஒன்றை வாஜ்பாய் வெளியிட்டார். அதாவது, தீவிர அரசியலில் இருந்து தாம் ஓய்வுபெறப் போவதாகவும், அடுத்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் கூறினார். அதற்கேற்ப, 2009-ஆம் ஆண்டில் அவருக்கு உடல்நிலை ஒத்துழைக்காததால், அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்கு அவரால் செல்ல முடியவில்லை.


அந்த முறை, லக்னெள தொகுதியில் வாஜ்பாயின் ஆதரவு பெற்றவரும், அந்தத் தொகுதியின் பொறுப்பாளருமான லால்ஜி டாண்டன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். டாண்டன், வாஜ்பாயைப் போல் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறவில்லை என்றாலும், 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ரீட்டா பகுகுணா ஜோஷியை தோற்கடித்தார்.

அதைத் தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் லக்னெள தொகுதியில் பாஜக மூத்த தலைவரும், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் போட்டியிட்டார். இந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரீட்டா பகுகுணா ஜோஷி மீண்டும் தோல்வியைத் தழுவினார். இந்த தேர்தலில் 5 லட்சத்து 61 ஆயிரம் வாக்குகள் பெற்ற ராஜ்நாத் சிங், ரீட்டா பகுகுணா ஜோஷியை 2 லட்சத்து 72 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

இந்நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில், லக்னெள தொகுதியில் ராஜ்நாத் சிங் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் களமிறங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன் காங்கிரஸ் வேட்பாளராக ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் அறிவிக்கப்பட்டார். இவர், கடந்த 2014-ஆம் ஆண்டில் சம்பல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 5-ஆவது இடத்தைப் பிடித்தார்.

மற்றொரு புறம், சமாஜவாதி-பகுஜன் சமாஜ்-ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணி சார்பில் சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா போட்டியிடுகிறார்.

கடந்த 16-ஆம் தேதிதான், இவர் சமாஜவாதி கட்சியில் இணைந்தார். அன்றைய தினமே லக்னெள தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதற்கு 10 நாள்களுக்கு முன்புதான், பாஜக மீது அதிருப்தியில் இருந்த எம்.பி.யும், நடிகருமான சத்ருகன் சின்ஹா, அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பிகாரின் பாட்னாசாகிப் தொகுதியில் அவர் பாஜகவின் ரவிசங்கர் பிரசாதை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அவரது மனைவி பூனம் சின்ஹா கடந்த 18-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். சமாஜவாதி கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த ஊர்வலத்தில் பூனம் சின்ஹாவுடன் சத்ருகன் சின்ஹா சென்றது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. போதாக்குறைக்கு, காங்கிரûஸ எதிர்த்து தங்கள் மனைவி போட்டியிடுகிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கட்சியைவிட எனக்கு குடும்பம்தான் பெரிது என்று சத்ருகன் முழங்கியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு அடுத்ததாக, சத்ருகன் மேலும் ஒரு புதிய சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. நடிகர் சத்ருகன் சின்ஹா தனது மனைவிக்கு எதிராக லக்னெள தொகுதியில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் கிருஷ்ணம். 

அரசியல் ஆர்வத்தில் சத்ருகன்-பூனம் தம்பதி வேறுவேறு கட்சியில் இணைந்ததால், இந்த தர்மசங்கடமான நிலைக்கு சத்ருகன் சின்ஹா தள்ளப்பட்டுள்ளார். 

பாஜகவின் கோட்டையாக விளங்கும் லக்னெள தொகுதியில், வரும் மே 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டின் நிலவரப்படி, 19,49,226 வாக்காளர்கள் வாக்களிக்கத் தயாராக உள்ளனர்.

இந்தத் தொகுதியை பாஜக மீண்டும் கைப்பற்றுமா? அல்லது வேறு யாரேனும் கைப்பற்றுவார்களா? என்பது வரும் மே 23-ஆம் தேதி தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com