இந்திய தேர்தல் ஆணையம் ஒரு பார்வை

இந்திய தேர்தல் ஆணையம் 1950-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்ட ஜன.25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு பார்வை


இந்திய தேர்தல் ஆணையம் 1950-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்ட ஜன.25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் சிலவற்றைப் பார்க்கலாம்...

இந்தியத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தலை மட்டுமே நடத்துகிறது என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது மட்டுமன்று. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 324(1)-ஆவது பிரிவின்படி, குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல், மக்களவைத் தேர்தல், மாநிலங்களவைத் தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தல், மாநில சட்டமேலவைத் தேர்தல் ஆகியவற்றையும் இந்தியத் தேர்தல் ஆணையமே நடத்தி வருகிறது.

பஞ்சாயத்துத் தேர்தல், மாநகராட்சித் தேர்தல் உள்ளிட்ட உள்ளாட்சித் தேர்தல்களை அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில தேர்தல் ஆணையங்கள் நடத்தி வருகின்றன. 1992-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 73-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் இதற்கு வழிவகுக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பாகும். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கீழ், மாநில தேர்தல் ஆணையம் வராது.

எத்தனை ஆணையர்கள்

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தற்போது 1 தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் உள்ளனர். 1989-ஆம் ஆண்டு வரை ஒரேயொரு தேர்தல் ஆணையர் மட்டுமே இருந்து வந்தார். 1989-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 1990-ஆம் ஆண்டு ஜனவரி வரை 3 தேர்தல் ஆணையர்கள் இருந்தனர். பின்னர், 1990-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1993-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை ஒரு தேர்தல் ஆணையர் மட்டுமே இருந்தார். அதன் பிறகு, தற்போது வரை 3 தேர்தல் ஆணையர்கள் இருந்து வருகின்றனர். இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையரைத் தவிர, எத்தனை ஆணையர்கள் இருக்கலாம் என்பதை குடியரசுத் தலைவரே முடிவு செய்வார்.

பதவிக் காலம் & ஊதியம்

தேர்தல் ஆணையர்கள் மூவரும் பதவியேற்ற தினத்தில் இருந்து 6 ஆண்டுகளோ அல்லது 65 வயது பூர்த்தியாகும் வரையோ அப்பதவியில் நீடிப்பர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 324(2)-ஆவது பிரிவின்படி, தேர்தல் ஆணையர்கள் மூவரையும் குடியரசுத் தலைவரே நியமிப்பார். தேர்தல் ஆணையர்கள் மூவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையாக சம்பளம் பெறுவர்.

பணி ஒதுக்கீடு

தேர்தல் ஆணையர்கள் மூவரும் சம அதிகாரங்கள் கொண்டவர்களே. அவர்களுக்குள் எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் கிடையாது. குறிப்பிட்ட பணிகளை அவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து, பங்கிட்டுக் கொள்வர். இந்த முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவே எடுக்கப்படும். ஒருவேளை, குறிப்பிட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தால், பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

தலைமை தேர்தல் அதிகாரி என்பவர் யார்?

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பதற்காகவும், அதிகாரிகளை வழிநடத்துவதற்காகவும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில், தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்படுவார். இந்தியத் தேர்தல் ஆணையம், குறிப்பிட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, அதற்கான தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்கும். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அவர் செயல்படுவார்.

மாவட்ட தேர்தல் அதிகாரி என்பவர் யார்?

மாவட்டங்களில் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பதற்காக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில், மாநில அரசுடன் ஆலோசனை நடத்தி, மாவட்ட தேர்தல் அதிகாரியை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமிக்கும். மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் மேற்பார்வையில் அவர் செயல்படுவார்.

தேர்தல் நடத்தும் அதிகாரி

மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தலை முன்னின்று நடத்துபவரே தேர்தல் நடத்தும் அதிகாரி ஆவார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் அடிப்படையில், தேர்தல் நடத்தும் அதிகாரி நியமிக்கப்படுவார். இந்தியத் தேர்தல் ஆணையம், குறிப்பிட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, மக்களவை மற்றும் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமிக்கும். தேர்தல் பணிகளில், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உதவி புரிய, துணை அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யும். 

வாக்குச் சாவடி அதிகாரி

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்காக அமைக்கப்படும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், தேர்தல் பணிகளை தலைமையேற்று நடத்துபவரே வாக்குச் சாவடி அதிகாரி. அவருக்கு உதவி புரிவதற்கு அலுவலர்கள் பலர் பணியில் ஈடுபடுத்தப்படுவர். அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் எந்தவிதப் பிரச்னைகளும் இன்றி வாக்களிப்பதை, வாக்குச் சாவடி அதிகாரி உறுதிபடுத்துவார். மாநிலங்களில், மாவட்ட தேர்தல் அதிகாரியே அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கான அதிகாரியை நியமிப்பார். யூனியன் பிரதேசங்களில், தேர்தல் நடத்தும் அதிகாரி, வாக்குச் சாவடி அதிகாரியை நியமனம் செய்வார்.

வாக்காளர் பட்டியல்

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறும் முன்பு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பணியாகும். தேர்தல் பதிவு அதிகாரியே வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கு முழுப் பொறுப்பு உடையவர் ஆவார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில், மாநில அரசுடன் ஆலோசனை நடத்தி, தேர்தல் பதிவு அதிகாரியை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமிக்கும். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பது, பெயரை நீக்குவது, திருத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தேர்தல் பதிவு அதிகாரி மேற்கொள்வார். அவருக்கு உதவி புரிய, துணை அதிகாரிகளையும் இந்தியத் தேர்தல் ஆணையம் நியமிக்கும்.

கண்காணிப்பாளர்கள் 

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நேர்மையாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்வையிடுவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் நியமிக்கும் அதிகாரிகளே கண்காணிப்பாளர்கள். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 20பி பிரிவின் அடிப்படையில், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் செலவு கண்காணிப்பாளர்கள் ஆகியோர்  நியமிக்கப்படுவர். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் அவர்கள் செயல்படுவர்.

பதிவு செய்தால் கட்சிகளுக்குக் கிடைக்கும் பயன்கள் என்ன? 

கட்சிச் சின்னங்கள் ஒதுக்கீட்டில், சுயேச்சை வேட்பாளர்களைக் காட்டிலும் முன்னுரிமை.
"மாநில கட்சி' மற்றும் "தேசிய கட்சி' அந்தஸ்து.
மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு, நிரந்தரமாகச் சின்னம் ஒதுக்கீடு.
மாநில மற்றும் தேசிய அந்தஸ்து பெற்ற கட்சிகள் சார்பாக, மக்களவைத் தேர்தலிலோ அல்லது மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலோ போட்டியிடும் வேட்பாளரை முன்மொழிந்து, ஒரே ஒரு நபர் கையெழுத்திட்டால் போதுமானது. அதே வேளையில், சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளரை 10 நபர்கள் முன்மொழிவது அவசியமாகும்.
தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துள்ள கட்சியின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, அவர்கள் போட்டியிடும் தொகுதியின் வாக்காளர் பட்டியல் (2 பிரதிகள்) இலவசமாக வழங்கப்படும்.
தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துள்ள கட்சிகள், மக்களவைத் தேர்தலின்போது, அரசு வானொலி (ஆகாஷ்வாணி) மற்றும் அரசு தொலைக்காட்சியில் (தூர்தர்ஷன்) விளம்பரங்கள் செய்ய இயலும்.

கட்சியைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகள்

கட்சியைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை, இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். இந்தப் படிவம், தேர்தல் ஆணைய வலைதளத்திலும் இடம்பெற்றுள்ளது. அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, கட்சியின் அதிகாரப்பூர்வ கடிதத்தாள் கற்றையில் (லெட்டர் பேட்) அதைத் தெளிவாகத் தட்டச்சு செய்து, அதை இந்தியத் தேர்தல் ஆணைய செயலரிடம் நேரிலோ அல்லது பதிவுத் தபால் மூலமோ வழங்க வேண்டும். கட்சி தொடங்கப்பட்ட 30 நாள்களுக்குள் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும். 

கட்சிப் பதிவு விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்

ரூ.10,000க்கான வங்கி வரைவோலை (டி.டி).
கட்சியின் பெயர் அடங்கிய உறுதிமொழிப் பத்திரம்.
கட்சி விதிமுறைகள் அறிக்கையின் நகலின் பக்கங்கள் அனைத்திலும் கட்சித் தலைவரின் கையொப்பம் மற்றும் சீல்.
கட்சியில் பல்வேறு நிலைகளுக்கான பதவிகள், அவர்களின் பதவிக்காலம், அந்தப் பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்படும் முறை, தேர்தல் நடத்தப்படும் கால இடைவெளி உள்ளிட்ட விவரங்கள்.
கட்சியானது, மற்றொரு கட்சியுடன் இணைக்கப்பட்டாலோ அல்லது பிளவுபட்டாலோ பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்.
வாக்காளர் பட்டியலில் உள்ள குறைந்தபட்சம் 100 பேரைக் கட்சியின் உறுப்பினர்களாகக் குறிப்பிடும் சான்று.
கட்சியின் உறுப்பினர் எவரும், மற்ற பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் உறுப்பினர் இல்லை என்பதை உறுதிப்படுத்தி, கட்சியின் தலைவர் அல்லது பொதுச் செயலர் அளிக்கும் உறுதிச் சான்று.
கட்சி உறுப்பினர்கள் 100 பேரின் சுயசான்றுக் கடிதம். அதில், தாங்கள் வேறு எந்தக் கட்சியையும் சேராதவர்கள் என்று அவர்கள் உறுதியளிக்க வேண்டும்.
கட்சியின் வங்கிக் கணக்கு, நிரந்தரக் கணக்கு எண் (பான்) உள்ளிட்ட விவரங்கள் அளிக்க வேண்டும்.

"மாநில கட்சி' அந்தஸ்து

ஒரு கட்சியானது கீழ்கண்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், அது "மாநில கட்சி' அந்தஸ்து பெறும்.

1. கடைசியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலோ அல்லது மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலோ பதிவாகும் வாக்குளில், 6 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.
(அல்லது)

2. கடைசியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 25 மக்களவை உறுப்பினர்களுக்கு 1 உறுப்பினர் என்ற விகிதத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 
(அல்லது)

3. கடைசியாக நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 35 பேரவை உறுப்பினர்களுக்கு 1 உறுப்பினர் என்ற விகிதத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

"தேசிய கட்சி' அந்தஸ்து

ஒரு குறிப்பிட்ட கட்சியானது, 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில், "மாநில கட்சி' அந்தஸ்து பெற்றால், அதற்கு "தேசிய கட்சி' அந்தஸ்து வழங்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com