Enable Javscript for better performance
வெற்றி வாகை சூடிய வி.ஐ.பி. சுயேச்சை எம்.பி.க்கள்!- Dinamani

சுடச்சுட

  

  வெற்றி வாகை சூடிய வி.ஐ.பி. சுயேச்சை எம்.பி.க்கள்!

  By - எம். நாராயணஸ்வாமி  |   Published on : 25th April 2019 06:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  election2019


  நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மக்களவைத் தேர்தலில்தான் அதிகபட்சமாக 36 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.  அதன்பிறகு, சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெறுவது என்பது அரிதான விஷயமாக மாறி விட்டது.

  மக்களவைத் தேர்தல் களத்தில் தேசியக்கட்சிகளான பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவ்விரு தேசியக்கட்சிகளையும் தவிர்த்து விட்டு பார்த்தால், பிராந்தியக் கட்சிகளின் ஆதிக்கம், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. கூட்டணி அமைத்தும், தனித்து போட்டியிட்டும் தங்கள் பலத்தை நிரூபிக்க பல்வேறு வழிகளில் கட்சிகள் போராடி வரும் நிலையில், சுயேச்சை வேட்பாளர்களால் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடிவதில்லை என்பதே நிதர்சன உண்மை. பொதுவாக, கட்சியினருக்கு இணையாக செலவு செய்யவோ, அதற்கான கட்டமைப்புகளோ பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்களுக்கு இருப்பதில்லை. இதன் காரணமாகவே மக்களவைத் தேர்தல்களில் இவர்களின் ஆதிக்கம் தலை தூக்குவதில்லை. அதேசமயம், சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களும் சில சமயத்தில் கட்சியினருக்கு "கிலி'யை ஏற்படுத்துவதுண்டு. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மக்களவைத் தேர்தலில்தான் அதிகபட்சமாக 36 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பி.க்களாக வாகை சூடியுள்ளனர்.

  அதன்பிறகு, சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெறுவது என்பது அரிதான விஷயமாக மாறி விட்டது. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றிக்கனியை பறிக்க வேண்டுமானால், தனிப்பட்ட மக்கள் செல்வாக்கும், அவரது சேவை மனப்பான்மையும் ஓங்கி நிற்க வேண்டும். அதுபோல, பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களையும் தாண்டி தனிப்பட்ட செல்வாக்கால் வெற்றி பெற்று சரித்திரத்தில் இடம் பிடித்தவர்கள் பலர் உண்டு. 

  கடந்த 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மக்களவைத் தேர்தலில் இருந்து, 2016-ஆண்டு நடைபெற்ற 16-ஆவது மக்களவைத் தேர்தல் வரையிலும் மொத்தம் 44,578 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டதில், 255 பேர் மட்டுமே சுயேச்சையாக வெற்றிப்பெற்று மக்களவை எம்.பி. நாற்காலியை அலங்கரிக்க முடிந்தது. 

  அவர்களில் வெற்றி வாகை சூடிய சுயேச்சை எம்.பி.க்களில் வி.ஐ.பி.க்கள் சிலரைப்பற்றி கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

  ஆச்சார்ய ஜே.பி.கிருபளானி இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக திகழ்ந்த கிருபளானி, காந்தியின் பிரதான சீடர்களில் ஒருவர். நாடு சுதந்திரம் பெற்றபிறகு பிரதமர் பதவிக்கான நபரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் வல்லபபாய் படேலுக்கு, அடுத்த இடத்தில் இருந்தவர்தான் கிருபளானி. இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் பொறுப்பு வகித்த இவர், 1951-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜிநாமா செய்தார். நேருவின் கொள்கைகளை விமர்சித்த அவர் காங்கிரஸில் இருந்து வெளியேறி, சுயேச்சையாக 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கினார்.  தொடர்ந்து 1957, 1963 மற்றும் 1967 ஆகிய தேர்தல்களிலும் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிவாகை சூடி 4 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  ஹரீந்திரநாத் சட்டோபாத்யாய 

  கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் இளைய சகோதரரான இவர் 1898-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி தற்போதைய தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார். சிறந்த ஆங்கில கவிஞராக திகழ்ந்த இவர் பின்னாளில், மதராஸ் மாகாணத்துக்குள்பட்ட விஜயவாடா மக்களவைத் தொகுதியில் 1952-ஆம் ஆண்டில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் ஆதரவுடன் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். 

  எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை கொண்டவர். சிறந்த அறிவியலாளராகவும், கவிஞராகவும், கல்வியியலாளராகவும் மிளிர்ந்த பன்முகத் திறனாளர். குழந்தைகளுக்காக கவிதைகளையும், ஹிந்தி திரையுலகிலும் பல பாடல்களையும் எழுதி அவை மிகுந்த புகழ்பெற்றது.

  மாதவ் ஸ்ரீஹரி அணே 

  லோகமான்ய பாலகங்காதர திலகரின் சீடரான இவர் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரி தொகுதியில் இருந்து 1962-ஆம் ஆண்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கவிஞரான இவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். 1948 முதல் 1952-ஆம் ஆண்டு வரை பிகார் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தார். பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஆட்சி புரிந்தபோதே இவரைத் தேடி பல்வேறு பதவிகள் வந்தன. 1943-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை இலங்கைக்கான இந்தியத் தூதராக பதவி வகித்தார்.

  என்.சிவராஜ் 

  சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த இவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பல்வேறு சமூக போராட்டங்களுக்கு பிறகு வழக்குரைஞராகவும், நீதிக்கட்சியின்  தலைவராகவும் இருந்தார். பின்னர், சட்டமேதை அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். அம்பேத்கரின் மறைவுக்கு பிறகு இந்திய குடியரசுக் கட்சி உருவானபோது, அகில இந்திய தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1945ல் சென்னைமாநகர மேயராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

  1957ஆம் ஆண்டு இந்திய குடியரசுக் கட்சியை தோற்றுவித்த நிறுவனரான சிவராஜ் அதே ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

  மகாராஜா கர்னிசிங் 

  1950ஆம் ஆண்டு வரை அப்போதைய பிகானீர் மாநிலத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தவர் மகாராஜா கர்னிசிங். (தற்போதைய ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானீர் அமைந்துள்ளது)  இவர்தான் அந்த மாநிலத்தின் 24ஆவது அரசராகவும், கடைசி அரசராகவும் இருந்தார். இவரது ராஜ்ஜியத்தை இந்திய தேசத்துடன் இணைத்தப்பிறகு, முதன்முறையாக 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக கர்னிசிங் போட்டியிட்டார். அந்த தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்ற அவர், 1957, 62, 67, 71 மற்றும் 1977ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 6 முறை சுயேச்சை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். துப்பாக்கி சுடும் வீரரான கர்னிசிங், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்காக பல பதக்கங்களை அள்ளிக் குவித்துள்ளார். 5 முறை ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவின் வீரராக பங்கேற்றவர். அரசியல், விளையாட்டு என இருதுறைகளிலும் ஜாம்பவானாக மிளிர்ந்தார். டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் சாதனை புரிந்தார்.

  எல்.எம். சிங்வி 

  முனைவர் லட்சுமி மால் சிங்வி என்று அழைக்கப்படும் எல்.எம்.சிங்வி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் தொகுதியில் இருந்து 1962ஆம் ஆண்டு சுயேச்சையாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்குரைஞரான இவர் பிற்காலத்தில் 1972 முதல் 1977ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் அட்வகேட் ஜெனரலாக பணிபுரிந்து வந்தார். பிற்காலத்தில் பாஜகவில் இணைந்த சிங்வி 1998ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் நரசிம்மராவ் உள்ளிட்ட 4 பிரதமர்களின் கீழ் இந்திய தூதராகவும் பணிபுரிந்துள்ளார் சிங்வி.

  ஜி.ஜி.ஸ்வெல் 

  ஜார்ஜ் கில்பெர்ட் ஸ்வெல் எனப்படும் ஜி.ஜி.ஸ்வெல் மேகாலயா மாநிலம் ஷில்லாங் தொகுதியிலிருந்து 1962, 67, 71, 84 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் 5 முறை சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1968 முதல் 1977ஆம் ஆண்டு வரை மக்களவை துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார். நார்வே, ஐஸ்லாந்து, பர்மா போன்ற நாடுகளின் இந்திய தூதராகவும் பணிபுரிந்துள்ளார் ஜி.ஜி.ஸ்வெல்.

  வி.கே.கிருஷ்ண மேனன் 

  கேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் 1953ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957ஆம் ஆண்டு வடக்கு மும்பை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 1967ஆம் ஆண்டு வடகிழக்கு மும்பை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி இவருக்கு வாய்ப்பளிக்க மறுத்தது. இதனால், காங்கிரஸில் இருந்து ராஜிநாமா செய்து விட்டு இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இருப்பினும்,, 1969ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் மிதுனபுரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு, 1 லட்சத்து 6ஆயிரத்து 767 வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாதமான வெற்றியை அறுவடை செய்தார். பின்னர், 1971ஆம் ஆண்டு சொந்த மாநிலமான திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிட்டு கிருஷ்ண மேனன் வெற்றி பெற்றார். மொத்தத்தில், இரண்டு முறை காங்கிரஸ் கட்சி சார்பிலும், இரண்டு முறை சுயேச்சையாகவும் வெற்றி பெற்று எம்.பி. பதவி வகித்தார்.

  எம்ஆர்.மசானி 

  சுதந்திரா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர் நேருவுக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்தார். சோஷலிஸவாதியான இவர் குஜராத் மாநிலம் ராஜ்காட் தொகுதியில் 1957, 1962, 1967 ஆகிய 3 முறையும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

  ஆன்னி மஸ்கரீன்

  கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராகவும், சுதந்திர போராட்ட வீராங்கனையாகவும் திகழ்ந்தார். லத்தீன் கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1952ல் நடைபெற்ற முதலாவது மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே கேரளத்தின் முதல் பெண் எம்.பி.யாகவும் இருந்தார்.

  சுகந்தி முருகப்பா சித்தப்பா

  1957ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் வடக்கு பிஜாப்பூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் என்.ஜி.வாமனை விட 10,936 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

  டிடி.தத்தாத்ரேயா 

  மைசூர் பகுதியின் கனரா மக்களவைத் தொகுதியில் இருந்து 1967-ஆம் ஆண்டு சுயேச்சை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் என்.ஜி.வாமனை விட 27,797 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கர்நாடக மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி சுயேச்சை எம்.பி. இவர்தான். இவருக்கு பிறகு கடந்த 52 ஆண்டுகளாக கர்நாடகத்தில் வேறு எந்த சுயேச்சை வேட்பாளர்களாலும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai