சுடச்சுட

  

  இன்று நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 69.23 சதவீதம் பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றனர். இந்தத் தேர்தலில் புதிதாக 8.55 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
   கடந்த 1951-1952 இல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 21 வயது அல்லது அதற்கு அதிகமான வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்று விதிமுறை இருந்தது.
   அதன் பிறகு, "1988ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் (61-ஆவது திருத்தம்)' கொண்டு வரப்பட்டு வாக்களிக்க 18 வயது பூர்த்தியாகி இருந்தால் போதும் என்று விதிமுறை திருத்தப்பட்டது.
   அந்தக் காலகட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எல்லாம் கிடையாது என்பது அனைவரும் அறிந்த செய்தி. இதன்காரணமாக, தேர்தல் பணிகள் என்பது பல மாதங்கள் வரை நீளும். முதல் பொதுத் தேர்தலில் வாக்குப் பதிவு கூட பல கட்டங்களாக பல மாதங்களாக நடைபெற்றது.
   கடந்த 1951ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி முதல், 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி வரை 68 கட்டங்களாக 5 மாதங்கள் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுடன் தற்போதைய மக்களவைத் தேர்தலை ஒப்பிட்டால், 39 தினங்களில் 7 கட்டங்களாக 2019 பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
   முதலாவது பொதுத் தேர்தலில் 489 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. தற்போது, 543 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
   முதல் தேர்தலுக்கும், 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கும் இடையேவுள்ள மற்றொரு சுவாரசியமான வேற்றுமையைப் பார்ப்போம்.
   தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,345. முதலாவது மக்களவைத் தேர்தல் காலத்தில் இருந்தது வெறும் 53 கட்சிகள் மட்டுமே.
   முதல் தேர்தலில் 2,23,611 வாக்குச் சாவடிகள் மட்டுமே இருந்தன. அவற்றில் 27,527 வாக்குச்சாவடிகள் பெண்கள் வாக்களிப்பதற்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்தன.
   - மணிகண்டன் தியாகராஜன்
   அதிகபட்ச வாக்குப் பதிவு
   முதல் பொதுத் தேர்தலில் 45.7 சதவீத வாக்குகள் பதிவாகின.
   அதிகபட்சமாக இந்தியத் தேர்தல் வரலாற்றில் பதிவான வாக்குகள் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில்தான். அத்தேர்தலில் 66.4% வாக்குகள் பதிவாகியிருந்தன.
   1951-52 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 364 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சி மட்டும் 44.99 சதவீத வாக்குகளை அள்ளியது. அதற்கு அடுத்தபடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களை கைப்பற்றி 3.29 சதவீத வாக்குகளையும், சோஷலிஸ்ட் கட்சி 12 இடங்களில் வென்று 10.59 சதவீத வாக்குகளையும் பெற்றன. பாரதிய ஜன சங்கம் (பாஜகவின் முந்தைய வடிவம்) 3 இடங்களில் வென்று 3 சதவீத வாக்குகளை வசமாக்கியது.
   இதர கட்சிகள் ஒரு சில இடங்களில் வென்று குறைந்த வாக்குவங்கியைப் பெற்றிருந்தன. சுயேச்சைகள் 37 இடங்களில் வெற்றி வாகை சூடினர்.
   2014 பொதுத் தேர்தலில் பாஜக 282 இடங்களில் வென்று 31.3 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் வென்று 19.5 சதவீத வாக்குகளையும் கைப்பற்றின.
   அதிமுக (37 இடங்களில் வெற்றி; 3.3% வாக்குகள்), திரிணமூல் காங்கிரஸ் (34, 3.9%), பிஜு ஜனதா தளம் (20, 1.7%) பெற்றிருந்தன.
   இதுவரை அதிகம் செலவான பொதுத் தேர்தல்
   1989 தேர்தல் ரூ.100 கோடி
   2004 தேர்தல் ரூ.1000 கோடி
   2014 தேர்தல் ரூ.3870 கோடி
   தேர்தல் செலவு
   முதலாவது தேர்தலை நடத்தி முடிக்க அரசு கருவூலத்துக்கு ரூ.10 கோடி செலவானது. கடந்த முறை நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு ஆன செலவு விண்ணை முட்டும் அளவுக்கு அதிகமானது. 2014இல் தேர்தலை நடத்த சுமார் ரூ.3,870 கோடி!
   இன்று ஒரு கட்சியின் வேட்பாளர் பிரசாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக தேர்தல் காலங்களில் செய்யும் செலவில், அந்தக் காலத்தில் பொதுத் தேர்தலே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது என்பது பலருக்கும் வியப்புடன் வேதனையும் அளிக்கும்.
   அன்றும்...                                                                         இன்றும்...
   1952                                                    -                                          2019
   489 தொகுதிகள்                                                          543 தொகுதிகள்
   வாக்குச்சீட்டு பதிவு முறை     -                     மின்னணு வாக்குப் பதிவு
   வாக்களிக்கும் வயது 21             -                வாக்களிக்க தகுதி 18 வயது

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai