சுடச்சுட

  
  TVLCONG

  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸýக்கு தமிழகத்தில் சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திருச்சி, கரூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ஆரணி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
   கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு, கன்னியாகுமரியில் 2 லட்சத்து 44,244 வாக்குகளையும், சிவகங்கையில் 1 லட்சத்து 4,678 வாக்குகளையும், தேனியில் 71,432 வாக்குகளையும், திருநெல்வேலியில் 62,863 வாக்குகளையும், தென்காசியில் 58,963 வாக்குகளையும், தூத்துக்குடியில் 63,080 வாக்குகளையும், ராமநாதபுரத்தில் 62,160 வாக்குகளையும், அரக்கோணத்தில் 56,377 வாக்குகளையும், மயிலாடுதுறையில் 58,465 வாக்குகளையும், கோவையில் 56,962 வாக்குகளையும், திருச்சியில் 51,537 வாக்குகளையும் பெற்றது.
   காங்கிரஸ் தனித்து நின்று கணிசமான வாக்குகளைப் பெற்ற தொகுதிகளில் கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி, திருச்சி மட்டுமே இப்போது அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட சில தொகுதிகள் ஒதுக்கப்படாதது அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
   திருநெல்வேலி தொகுதியில் 1996-இல் திமுக சார்பில் போட்டியிட்ட டி.எஸ்.ஏ.சிவப்பிரகாசம் வெற்றி பெற்றார். அதன்பிறகு, திருநெல்வேலி தொகுதியில் திமுக 3 முறை போட்டியிட்டபோதும் தோல்வியையே சந்தித்தது. அதேநேரத்தில் 2004, 2009 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தனுஷ்கோடி ஆதித்தன், ராமசுப்பு ஆகியோர் வெற்றி பெற்றனர்.
   காங்கிரஸின் அடுத்தடுத்த வெற்றியைத் தொடர்ந்து, கடந்த தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக போட்டியிட்டது. அப்போதும் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. அதனால் இந்த முறை திருநெல்வேலி தொகுதி காங்கிரஸýக்கே கிடைக்கும்; திருநெல்வேலி, தென்காசி தொகுதிகளில் சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக உள்ளதால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என காங்கிரஸில் உள்ள மூத்த நிர்வாகிகள் நம்பினர். மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ், ஹெச்.வசந்தகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி.ராமசுப்பு, மாநில பொதுச் செயலர் எஸ்.வானுமாமலை, கிழக்கு மாவட்ட செயலர் எஸ்.கே.எம்.சிவக்குமார் உள்ளிட்டோர் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவதற்கு தீவிரம் காட்டி வந்தனர்.
   காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத்தும் அடிக்கடி திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு வந்தார். அதனால் நிச்சயம் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸýக்கே என்று நம்பினார்கள். திருநெல்வேலி இல்லாத பட்சத்தில் தென்காசி தொகுதி நிச்சயம் காங்கிரஸýக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
   ஆனால், கடைசி நேரத்தில் திருநெல்வேலி தொகுதி கிடைக்காதோ என சந்தேகமடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள், கடந்த 13-ஆம் தேதி கன்னியாகுமரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்தின்போது, "திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸýக்கு ஒதுக்க வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் தொண்டர்களை போராட்டத்தில் ஈடுபட வைத்தனர். ஆனால் அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. திருநெல்வேலி தொகுதி காங்கிரஸýக்கு கிடைக்காததால், கடந்த ஓர் ஆண்டாக ஆற்றிய களப்பணி வீணாகிவிட்டதாக காங்கிரஸார் கருதுகின்றனர்.
   இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "கடந்த தேர்தலில் குறைவான வாக்குகளைப் பெற்ற திருவள்ளூர், கரூர், கிருஷ்ணகிரி தொகுதிகள் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் தொகுதிகளில் சுமார் 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளோம். இந்த மூன்று தொகுதிகளும் காங்கிரஸýக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாகும். குறிப்பாக, திருநெல்வேலியில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து அதிக போராட்டங்களை நடத்தியது காங்கிரஸ்தான்' என்றார்.
   தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையின்போது, முன்னணி தலைவர்கள் விரும்பிய தொகுதிகளை பெறுவதில் மட்டுமே தீவிரம் காட்டிய தமிழக காங்கிரஸ் தலைமை, வெற்றி வாய்ப்புள்ள சில தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப்பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை என காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறாதபட்சத்தில் தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது திமுக தலைமையை நிர்பந்திக்க காங்கிரஸ் தலைமை தவறிவிட்டது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
   தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், அக்கட்சியினர் தொகுதி பங்கீட்டில் கறாராக இருந்தார்கள். ஆனால் தேசியக் கட்சியான காங்கிரஸால் ஏன் கூடுதல் தொகுதிகளையும், அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் றெ முடியவில்லை என காங்கிரஸ் நிர்வாகிகள் கேள்வியெழுப்புகின்றனர்.
   - ஏ.வி.பெருமாள்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai