வாக்கு வங்கி கணக்கு எடுபடுமா?

கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்.18, 23-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவிருக்கிறது.
வாக்கு வங்கி கணக்கு எடுபடுமா?

கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்.18, 23-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவிருக்கிறது.
 கர்நாடகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில், காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய 3 கட்சிகளும் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் தேர்தலாக மக்களவைத் தேர்தல் அமையவிருக்கிறது. எனவே, 3 கட்சிகளும் தங்கள் பலங்களை முழு வீச்சில் பயன்படுத்தி வெற்றியைக் குவிக்க இலக்கு நிர்ணயித்துக் கொண்டுள்ளன. கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 22 இடங்களைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியோ 20 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகள் வெல்லும் நம்பிக்கையில் உள்ளது. நல்ல வேட்பாளர், ஜாதி கணக்கு, அரசியல் செல்வாக்கு, மத்திய பாஜக அரசின் வெற்றி-தோல்விகள், முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகள், பிரதமர் மோடியின் செல்வாக்கு, பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயிகள் பிரச்னை, வேலையில்லாமை போன்ற பிரச்னைகளை முன்வைத்து தேர்தல் வெற்றி-தோல்விகளை தீர்மானிக்க அரசியல் கட்சிகள் வியூகம் அமைத்துள்ளன. இந்த தேர்தலில் வெற்றிபெற்றே தீர வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் உள்ளன.
 மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றுவரும் பாஜக அரசை வீழ்த்தியே தீருவது என்ற சூளுரையுடன் களமிறங்கியிருக்கும் காங்கிரஸ், மதச்சார்பற்ற வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் வாக்குப்பெட்டியில் சேர்க்க மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் (மஜத) கூட்டணி அமைத்துள்ளது.
 கடந்த தேர்தல்களில் இரு கட்சிகளும் பெற்ற வாக்குகள் அல்லது வாக்கு வங்கியின் அடிப்படையில் தேர்தல் கணக்கு சரியாக இருந்தாலும், கள நிலவரம் காங்கிரஸுக்கு சாதகமாக இல்லை. தென் கர்நாடகத்தில் காங்கிரசுக்கு அரசியல் எதிரியே மஜத தான். ஹாசன், சித்ரதுர்கா, தும்கூரு, கோலார், மண்டியா, மைசூரு, சாமராஜ்நகர், பெங்களுரூ ஊரகம், சிக்பளாப்பூர் தொகுதிகளில் காங்கிரஸுக்கும் மஜதவுக்கும்தான் நேரடிப் போட்டி நடைபெற்றுவந்தது. இந்த தொகுதிகளில் மஜதவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹாசன், தும்கூரு, மண்டியா தொகுதிகளில் மஜத வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு மக்களைச் சந்திக்கும் தைரியம் காங்கிரஸ் தொண்டர்களிடம் இல்லாமல் இருப்பது காங்கிரஸ் தலைவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
 மஜதவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வடகன்னடம், விஜயபுரா, சிவமொக்கா, பெங்களூரு வடக்கு, உடுப்பி-சிக்மகளூரு தொகுதிகளில் மஜதவினருடன் இணைந்துசெயல்பட காங்கிரஸ் தொண்டர்கள் பாராமுகமாகவே உள்ளது, காங்கிரசுக்கு பலவீனமாகக் கருதப்படுகிறது.
 அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள எம்எல்ஏக்களால் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்க்க முடியாமல் தவித்துவரும் காங்கிரஸ், அதன் எதிர்விளைவுகள் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா? என்ற அச்சம் அக் கட்சியினரிடையே காணப்படுகிறது. இதனால் கலபுர்கி, பெல்லாரி, விஜயபுரா, பீதர் தொகுதிகளில் வெற்றிக்குப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. வட கர்நாடகத்தில் லிங்காயத்து சமுதாயத்தினரின் ஆதரவை முழுமையாக இழந்துள்ள காங்கிரஸ், பிளவுபட்டு நிற்கும் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளை மட்டுமே நம்பி களமிறங்க முடியாது. எனவே, தென் கர்நாடகத்தில் ஆதரவை இழந்துள்ள ஒக்கலிகர்சமுதாயத்தின் வாக்குகளை ஒன்றுதிரட்ட மஜதவின் கூட்டணி தவிர்க்கமுடியாதென கருதுகிறது. தேசிய அளவில் காங்கிரஸ் தனது இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள கூட்டணி போன்ற சமரங்களுக்கு உடன்பட வேண்டியது காலத்தின் கட்டாயத்தில் உள்ளது. மஜதவுடன் கூட்டணி அமைத்துள்ளதால், வாக்கு சதவீதம் பெருகி பாஜகவை 10 இடங்களில் அடக்கி விடலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற 3 மக்களவை, 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் 2 மக்களவை, 2 சட்டப்பேரவை இடங்களை காங்கிரஸ்-மஜத கூட்டணி கைப்பற்றியிருந்தது, காங்கிரசின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதனால் போட்டியிடும் 20 தொகுதிகளில் 14 இடங்களை வெல்லும் எதிர்பார்ப்பில் காங்கிரஸ் காத்திருக்கிறது.
 2004-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ், மஜதவை திணறடித்து வந்துள்ளது. 1999-இல் நடைபெற்ற தேர்தலில் 7 இடங்களில் மட்டுமே வென்றிருந்த பாஜக, 2004-இல் 18 இடங்களில் வென்றது, கர்நாடக அரசியலில் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும், 2009-இல் நடந்த தேர்தலில் 19 இடங்களில் பாஜக வெற்றிபெற்று அசத்தியது. இதைத் தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டில் நடந்த தேர்தலின்போது நரேந்திர மோடி அலை நாடெங்கும் வீசியபோது கர்நாடகத்தில் பாஜக 17 தொகுதிகளை வென்றிருந்தது. மும்முனைப் போட்டி நடந்தபோது வெற்றியை குவித்த பாஜக, தற்போது காங்கிரஸ்-மஜத கூட்டணியை எதிர்கொண்டு வெற்றியை சாதிக்க தயாராகி வருகிறது. எனினும், காங்கிரஸ்-மஜத கூட்டணி பாஜகவுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இடைத்தேர்தலில் கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருந்ததை உணர்ந்திருந்தாலும், மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் செல்வாக்கு, பிரசாரம் வெற்றி வாக்குகளை பெற்றுத்தரும் நம்பிக்கையை பாஜக தெரிவிக்கிறது.
 பாலாகோட்டியில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் இருப்பிடங்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது, எடியூரப்பாவின் லிங்காயத்துசமுதாய ஆதரவு ஆகியவை பாஜகவின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்கலாம். கடந்த சில மாதங்களாக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ்-மஜத தலைவர்களிடையே நடைபெற்றுவரும் கருத்து மோதல்களால் கட்சித் தொண்டர்களிடையே காணப்படும் இணக்கமின்மையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டின் சட்டப்பேரவை தேர்தலில் 104 இடங்களில் வென்றிருந்தும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதை மக்களிடம் எடுத்துச் சொல்லி அனுதாபத்தை ஏற்படுத்தி வாக்குகளைப் பெறவும் எடியூரப்பா வியூகம் அமைத்துள்ளார்.
 "இது எனது கடைசி தேர்தலாக இருக்கலாம்" என்று கூறிவரும் முன்னாள் முதல்வர் எச்.டி.தேவெ கெüடா, இத் தேர்தலை மிகவும் எதிர்பார்க்கிறார். தனது இரண்டுபெயரன்கள் பிரஜ்வல், நிகில் ஆகியோரை களமிறக்கியிருக்கும் தேவெ கெüடா, அவர்களின் வெற்றியை உறுதிசெய்வது மஜதவின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது போல கருதுகிறார். காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது மஜதவின் வெற்றி வாய்ப்பைப் பெருக்கும் என்று கணக்கு போட்டிருக்கும் தேவெ கெüடா, கடினமாகப் போராடி 8 தொகுதிகளை காங்கிரஸிடம் கேட்டுப் பெற்றிருக்கிறார்.
 2004-ஆம் ஆண்டு முதல் அதிகபட்சமாக 3 இடங்களில் மட்டுமே வென்று வந்துள்ள மஜத, இம்முறை 8 தொகுதிகளிலும் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல என்பது மஜதவுக்கும் தெரியும். ஒக்கலிகர்களின் வாக்குகளை ஒன்று திரட்டி முழு பலத்தையும் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய தேவெ கெüடா திட்டம் வகுத்துள்ளார். அப்படி வெற்றி பெற்றால், ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல, கர்நாடகத்தில் எச்.டி.குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியையும் தக்கவைத்துக்கொண்டு, மத்தியில் ஆட்சி அதிகாரமும் கிடைக்கும் என்ற ஆவலோடு மஜத காத்திருக்கிறது.
 - ந.முத்துமணி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com