தகிப்பில் தலைநகரம்!

தில்லியில் மொத்தம் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகள் அனைத்தும் தற்போது பாஜக வசம் உள்ளன. மேலும், தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளையும் பாஜக தான் ஆட்சி செய்கிறது.
தகிப்பில் தலைநகரம்!

தில்லியில் மொத்தம் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகள் அனைத்தும் தற்போது பாஜக வசம் உள்ளன. மேலும், தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளையும் பாஜக தான் ஆட்சி செய்கிறது.
 தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
 தேசிய கட்சியான பாஜக, கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தில்லியில் வெற்றி பெற்ற 7 தொகுதிகளையும் மீண்டும் தக்கவைத்து சரித்திரம் படைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் களம் காண்கிறது.
 தற்போதைய நிலையில், தில்லியைப் பொருத்த வரையிலும், கட்சிகளிடையே தேர்தலுக்கு முந்தைய கூட்டணி ஏதும் உருவாகவில்லை. எனவே, தில்லியில் பாஜக -ஆம் ஆத்மி - காங்கிரஸ் ஆகிய மூன்று பிரதான கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
 தில்லியை ஆளும் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பொதுத் தேர்தலை இரண்டாவது முறையாகச் சந்திக்கிறது.
 கடந்த மாநகராட்சி, சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் பலத்த அடி வாங்கியுள்ள காங்கிரஸ், மீண்டும் எழுந்து வெற்றி வாகை சூட வேண்டும் என்ற எண்ணத்தில் முழு முயற்சி மேற்கொண்டுள்ளது.
 இந்நிலையில், தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி மட்டும்தான் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
 மொத்தம் 1.36 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். கடந்த 2014 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட இறுதிப் பட்டியல் வெளியாகும் போது, வாக்காளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.
 அடுத்த 9 மாதங்களில் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த மக்களவைத் தேர்தல் தில்லிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த 2014 தேர்தலில் அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றிய பாஜகவுக்கு மொத்தம் 46.4 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எனவே, பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று முழங்கி வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் கேஜரிவால், காங்கிரஸýடன் கூட்டணி அமைத்தால் வெற்றி பெறலாம் என்று கணக்குப் போட்டார். அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான சந்திப்புக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை என்று தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் அறிவித்தார்.
 இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் அண்மையில் ஷீலா தீட்சித் சந்தித்த பிறகு, ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமோ என்று தலைநகரில் ஊகங்கள் எழுந்துள்ளன. தற்போதைய நிலையில், பாஜகவைத் தோற்கடிக்கும் நோக்கத்திலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டும் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ஓரு சாராரும், தொண்டர்களும் விரும்புவதாக அக்கட்சித் தலைவர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
 வாக்கு வங்கி, கூட்டணியினரின் ஆதரவு போன்ற எண்ணிக்கை "கணக்கு' தேர்தலில் முக்கியம் என்றாலும், அதைவிட முக்கியமானது, பொதுமக்களின் மனநிலை என்னும் "ரசாயனம்' ஆகும்.
 இந்தத் தேர்தல் "கணக்குக்கும்' "ரசாயனத்துக்கும்' இடையே நடைபெறும் தேர்தலாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர். பிரதமர் மோடியின் செயல்பாடு, செல்வாக்கு, கணித ரீதியான வாக்கு வங்கிக் கணக்கீடு ஆகியவற்றை மையமாக வைத்து பாஜக தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் முழுக்க முழுக்க கணித ரீதியிலான கணக்கீட்டை மையமாக வைத்து செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
 இதுவரை கூட்டணி ஏதும் உருவாகாத நிலையில், புல்வாமா சம்பவத்துக்குப் பிறகு நிகழ்ந்த பாலாகோட் முகாம்களை இந்திய விமானப் படை தாக்கி அழித்தது, பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் ஆம் ஆத்மிக்கும் காங்கிரஸýக்கும் பிரிந்தாலும்கூட அது பாஜவுக்கு சாதகமாக அமையும் என்றும் கருதுகின்றனர்.
 அதே சமயம், ஆம் ஆத்மி கட்சி - காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் பட்சத்தில், அது ஆட்டத்தின் போக்கையே மாற்றும் "கேம் சேஞ்சர்' ஆக இருக்கும் என்றும் கணிக்கின்றனர். பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டால், ஆம் ஆத்மி-காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்கு வங்கி, 6 தொகுதிகளில் பாஜகவை தோற்கடிக்கப் போதுமானதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
 அண்மையில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் (21%), ஆம் ஆத்மி (26%) ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் பதிவான வாக்குகளை கூட்டினால், பாஜக பெற்ற 36 சதவீத வாக்குகளை விட அதிகமாக வருகிறது. இந்தக் கணக்குப்படி பார்த்தாலும், பாஜகவைவிட ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி ஒரு படி மேலேதான் உள்ளது என்கின்றனர்.
 மொத்தத்தில் மூன்று கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ள நிலையில், தலைநகர் தில்லி தகி தகிப்பில் இருந்து வருகிறது என்பது மட்டும் உண்மை.
 மோடி அரசின் சாதனைகளை விளக்கும் பாஜக!
 பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை விளக்கி தேர்தல் பிரசாரத்தை பாஜக முன்னெடுத்துள்ளது. மேலும், தில்லியில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பாஜக முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகிறது. இது தவிர தில்லியில் மொத்தம் உள்ள 1,797 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்போரின் வாக்குகளை குறிவைத்துள்ளது. இந்தக் காலனிகளை அங்கீரிக்கும் வகையில், ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதை கூடுதல் பலமாக பாஜக கருதுகிறது. மேலும், ஆம் ஆத்மி அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துச் செல்ல பாஜக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
 முழு மாநில அந்தஸ்து விவகாரத்தை கையில் எடுத்துள்ள ஆம் ஆத்மி!
 இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக முனைப்புடன் பிரசாரம் செய்ய ஆம் ஆத்மி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கையில் எடுத்து ஆம் ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது. மேலும், அங்கீகரிக்கப்படாத காலனி மக்களுக்கு வீட்டு வசதித் திட்டம், வணிக வளாகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள், மத்திய அரசுடன் நிலவி வரும் மோதல் போக்கு ஆகியவற்றை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.
 ஷீலாவின் சாதனைகளை விளக்கும் காங்கிரஸ்!
 தில்லியில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த காங்கிரஸ், ஷீலா தீட்சித் தலைமையிலான ஆட்சியின் சாதனைகளை விளக்கி மக்களிடம் ஆதரவைப் பெறத் திட்டமிட்டு பிரசாரத்தை தொடங்கியுள்ளது. மேலும், ஆம் ஆத்மி அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துச் செல்வதே தங்களது பிரசாரத்தின் முக்கிய நோக்கமாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தங்களது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களைத்தான், ஆம் ஆத்மி அரசு தொடங்கியுள்ளதாக கேஜரிவால் கூறி வருகிறார் என்கின்றனர். இதை மக்களிடம் எடுத்துச் செல்வோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 2014 தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 1,27,11, 164
 70, 51,073 ஆண்கள்
 56,59, 252 பெண்கள்
 839 மற்றவர்கள்
 2019 தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 1,36,95,291
 75, 56,146 ஆண்கள்
 61,38,335 பெண்கள்
 810 மற்றவர்கள்


 
 - எம். சடகோபன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com