அதிமுகவுக்கு மீண்டும் கைகொடுக்குமா மேற்கு மண்டலம்?

அதிமுகவுக்கு எப்போதும் துணையாக இருக்கும் மேற்கு மண்டலம், 2019 மக்களவைத் தேர்தலிலும் கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுகவுக்கு மீண்டும் கைகொடுக்குமா மேற்கு மண்டலம்?


அதிமுகவுக்கு எப்போதும் துணையாக இருக்கும் மேற்கு மண்டலம், 2019 மக்களவைத் தேர்தலிலும் கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது தமிழகத்தின் மேற்குப்புற மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர் ஆகியவற்றை உள்ளடக்கிய கொங்கு மண்டலமேயாகும். இந்தப் பகுதியில் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 8 மக்களவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
சர்வதேச ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 3.8 சதவீதம் என்றால், இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்கு 48 சதவீதமாகும். ஆண்டுக்கு சராசரியாக ரூ.20 ஆயிரம் கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்வதில் இருந்து திருப்பூரின் பொருளாதார முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

அதே போலவே, ஜவுளித் தொழில், விசைத்தறி, கைத்தறி, நூற்பாலைகள், மின்சார மோட்டார்கள், பம்ப்செட், இயந்திர உதிரி பாகங்கள், கனரக வாகன உதிரி பாகங்கள், கிரைண்டர், காஸ்டிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெறும் இடமாகவும், தென் இந்தியாவின் மான்செஸ்டராகவும் திகழுகிறது கோவை.
நாட்டில் உள்ள மொத்த லாரிகளின் எண்ணிக்கையில் சுமார் 25 சதவீதம் இந்தப் பகுதியில்தான் உள்ளன. இதைத் தவிர, கோவை மண்டலத்தில் கோழிப் பண்ணைகள், தென்னை, மா, மஞ்சள், மரவள்ளி உற்பத்தி, லாரி பாடி கட்டும் தொழில், எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் என தொழில் வளத்திலும், கல்வி வழங்குவதிலும் மாநிலத்திலேயே முன்னணியில் இருப்பதுடன் மாநில அரசுக்கு 40 சதவீதத்துக்கும் மேல் வருவாயை ஈட்டிக் கொடுப்பதுமாக இருப்பதுவும் மேற்கு மண்டலம் என்றால், மிகையாகாது.

தமிழக அரசியலின் அசைக்க முடியாத சக்திகளாக இருக்கும் திராவிட இயக்கங்களின் தோற்றுவாயாக இருந்ததுடன், பல்வேறு திருப்புமுனைகளை உருவாக்கியதும் இந்த மண்டலம்தான். 1972-இல்
அதிமுக தொடங்கப்பட்ட பிறகு அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆருக்கு பக்க பலமாக இருந்தவர்களும், அக்கட்சி சந்தித்த 1977 பொதுத் தேர்தலில் இருந்து அதிமுக இதுவரையிலும் சந்தித்துள்ள அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுகவுக்கு கைகொடுக்கக் கூடியவர்கள் இருக்கும் இடமாகவும் மேற்கு மண்டலம் இருந்து வருகிறது. 2006-இல் அதிமுக தோல்வி அடைந்த நிலையிலும் அக்கட்சி சார்பில் தேர்வானவர்களில் அதிகமானவர்கள் (16) இந்த மண்டலத்தவர்களே.

கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. அதேபோல் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளையும், கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. திருப்பூரில் உள்ள 8 தொகுதிகளில் 6 தொகுதிகளையும், நாமக்கல்லில் உள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளையும், கரூரில் தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளில் இரண்டையும், நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளில் ஒன்றையும் அதிமுக கைப்பற்றியது.

திமுக, காங்கிரஸ் கூட்டணியானது இந்த மாவட்டங்களில் உள்ள தாராபுரம் (தனி), மடத்துக்குளம், உதகை, கூடலூர், சிங்காநல்லூர், சேலம் வடக்கு, பரமத்தி வேலூர் ஆகிய தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவுக்கு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கிய கொங்கு மண்டலத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா அதிக அளவிலான அமைச்சர்களையும் கொடுத்திருந்தார். இந்த மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமிதான் தற்போது தமிழக முதல்வராகவும் உள்ளார்.

மேலும், இப்பகுதியைச் சேர்ந்தவர்களே கட்சியில் அதிகாரம் மிக்க அமைச்சர்களாகவும், சட்டப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர்களாகவும் உள்ளனர்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை வென்றது. சில தொகுதிகளில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், பல தொகுதிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்திலும் அதிமுக வென்றிருந்தாலும், மேற்கு மண்டலத்தின் தலைநகராக கருதப்படும் கோவையில் மட்டும் அதிமுக வேட்பாளர் பி.நாகராஜன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை வெறும் 42,016 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்கடித்திருந்தார்.
அதிமுக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதி இதுமட்டும்தான்.  அதேநேரம், கடந்த முறை பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக, தேமுதிக, பாமக கட்சிகள் இந்த முறை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அதேபோல், கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 4 தொகுதிகளிலும் பிரதான எதிர்க்கட்சியான திமுக 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அந்த வகையில் இந்த மண்டலத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த கட்சிகள் அனைத்தும் தற்போது ஒரே கூட்டணியில் இருப்பதாலும் (மதிமுக, கொ.ம.தே.க. தவிர), இந்தக் கட்சிகள் மட்டுமே சராசரியாக 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருப்பதாலுமே அதிமுககூட்டணியை மெகா கூட்டணி என்றே திமுக,பாஜகவினர் அழைத்து வருகின்றனர்.
இந்தத் தொகுதி களில் அதிமுக பலம் வாய்ந்ததாக கருதப்படுவதாலேயே, திமுக இந்தத் தொகுதி களில் நேரடிப் போட்டியைத் தவிர்த்து கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுத்துள்ளது.
 கடந்த கால தேர்தல் முடிவுகள், இப்போது அமைக்கப்பட்டுள்ள பலமான கூட்டணி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பாஜகவுக்கு உள்ள கணிசமான வாக்கு வங்கி போன்றவை அதிமுக அணிக்கு சாதகமாகன அம்சங்கள்.
சேலத்தைத் தவிர பிற மேற்கு மண்டல மாவட்டங்களில் பாமகவுக்கு வாக்கு வங்கி இல்லாதது, தேமுதிகவில் பழைய வலிமை இல்லாமல் இருப்பதும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் போன்றவை அதிமுக கூட்டணிக்கு பாதகமாகனன அம்சங்கள்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com