Enable Javscript for better performance
விவசாயிகளின் வாக்குகளை  அறுவடை செய்யப்போவது யார்?- Dinamani

சுடச்சுட

  

  விவசாயிகளின் வாக்குகளை  அறுவடை செய்யப்போவது யார்?

  By - க.தங்கராஜா  |   Published on : 27th March 2019 02:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  farmar


  அண்மைக் காலமாக விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்படும் திட்டங்களை நிறுத்துவதற்காக அரசியல்வாதிகளை தேடிச் சென்ற விவசாயிகள், வாக்குக்காகத்  தற்போது தங்களைத் தேடி வரும் அரசியல்வாதிகளை எதிர்கொள்ளத் தயாராக நிற்கின்றனர்.

  கேரள மாநிலம், கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு எரிவாயுவை எடுத்துச் செல்லும் கெயில் நிறுவனத்தின் திட்டம், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என 7 மாவட்டங்களில் விளைநிலங்களின் வழியாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் ஆதரவு விவசாயிகளுக்கே இருந்தது. இதனால் கெயில் திட்டத்துக்கு அவர் தடை உத்தரவு பிறப்பித்தார். ஆனால், தற்போது ஜெயலலிதாவின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் அரசின் சீராய்வு மனுவுடன் கெயில் வழக்கு நிலுவையிலேயே உள்ளது. அதேநேரம், விவசாயிகளின் ஆதரவைப் பெற்று கெயில் திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்று மத்திய அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது.

  கெயில் பிரச்னை சில ஆண்டுகளாக அமைதியாக இருக்கும் நிலையில், விளை நிலங்களின் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பிரச்னை, மேற்கு மண்டலத்தில் ஓராண்டாக விவசாயிகளிடையே அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளது. மிகை மின்சாரத்தை விற்பனை செய்யவும், தேவை ஏற்படும்போது பெற்றுக் கொள்ளவும் ஏதுவாக தமிழகத்தில் 30 உயர் அழுத்த மின்தடங்களை ஏற்படுத்த மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷனும், தமிழக அரசும் முடிவு செய்திருக்கின்றன.

   இதற்காக, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகில் உள்ள புகளூரில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மின் பகிர்மான மையம் அமைக்கப்படுகிறது. இந்த மின் நிலையத்தை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், துணை மின் நிலையங்களுடன் இணைக்கும் வகையில்தான் 30 வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், புகளூரில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்கள், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் வழியாக ஒரு மின்பாதை அமைக்கப்படுகிறது.

   இந்தத் திட்டத்தால் நிலத்தைப் பறிகொடுத்து வேளாண்மை செய்ய முடியாமல் போவதுடன், கால்நடைகள் வளர்க்க முடியாதது, மரங்கள் நடமுடியாத நிலை, வீடு கட்டுவது, ஆழ்துளை கிணறு பழுதடைந்தால் அதை சீரமைக்க முடியாதது, நிலத்தின் மதிப்பு வெறும் 10 சதவீதமாக குறைந்துவிடுவது என எண்ணற்ற இழப்புகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாவோம் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

  கொச்சி, குஜராத்தில் இருந்து கடலுக்கடியில் கேபிள் அமைத்து ஆப்பிரிக்காவுக்கு மின்சாரம் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டு வரும் நிலையில், அந்தத் திட்டத்தைப் பின்பற்றி நெடுஞ்சாலையோரத்தில் நிலத்தின் அடியில் மின்சாரத்தை கொண்டு செல்லலாம் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. ஆனால், நிலத்தின் அடியில் கேபிள்களை பதிக்க வழியே இல்லை என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் கைவிரித்துவிடவே, பல்வேறு மாவட்டங்களில் விளைநிலங்களில் திடீரென மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டன.

   இதை விவசாயிகள் குழுவாகச் சேர்ந்து எதிர்த்து, அதனால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏராளமானோர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சிக்கல் தொடர்கதையாகியுள்ள நிலையில்தான் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான விவசாயிகளின் ஆதரவைப் பெறுவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.
   அதன் ஒரு பகுதியாகவே திமுக, மதிமுக, அமமுக போன்ற அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. விவசாயிகளுக்கு எதிரான இந்தத் திட்டத்தை நெடுஞ்சாலைகள் வழியாக செயல்படுத்த வலியுறுத்துவோம் என்று திமுக கூறியுள்ள நிலையில், 3 லட்சம் ஏக்கர் விளைநிலங்களைப் பாதுகாக்க புதைவடக் கம்பிகள் மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த போராடுவோம் என்று மதிமுக கூறியுள்ளது. அதேநேரம் அமமுகவோ, விவசாயத்துக்கு எதிரான ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, கெயில் திட்டம், உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் திட்டம், 8 வழிச் சாலை திட்டம் போன்றவற்றை அனுமதிக்கவே மாட்டோம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

   இந்நிலையில்தான் நிலம், கடன் என்ற இரண்டு முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து இந்தத் தேர்தலை அணுகுவதற்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் மின் கோபுர எதிர்ப்பு போராட்டக் குழுவினர். இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சட்ட ஆலோசகர் மு.ஈசன் கூறும்போது, மின் கோபுரத் திட்டத்தால் நேரடியாகவே 1.25 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களைத் தவிர மின்சார வயர்கள் செல்லும் வழித்தடங்களில் சுமார் 4 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் வருகின்றனர்.

   ஒரு தொகுதிக்கு சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் வரை மின் கோபுரத் திட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர். இத்திட்டத்தை எதிர்த்து நாங்கள் 3 ஆண்டுகளாகப் போராடினாலும், கடந்த ஓராண்டாகவே எங்கள் மீது அடக்குமுறை கையாளப்படுகிறது. போராடிய விவசாயிகள் 60-க்கும் மேற்பட்டவர்கள் மீது 18 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 பெண்கள் உள்ளிட்ட 32 பேரை சிறையில் அடைத்திருக்கின்றனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

   இருப்பினும், நாங்கள் எந்தக் கட்சிக்கும் எதிரானவர்கள் இல்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்திக் கூறி வருகிறோம். இப்போதும் எங்களது கோரிக்கைகளை ஜனநாயக முறையில் வலியுறுத்தி, கோரிக்கை மேடை என்ற பெயரில் விவசாயிகளை ஓரிடத்தில் திரட்ட உள்ளோம். அங்கு அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களையும் வரவழைத்து விளைநிலங்களை பாதிக்கும் திட்டம், கடன் தள்ளுபடி போன்றவற்றுக்கு என்ன உறுதிமொழி அளிக்கிறீர்கள், என்ன வரைவுத் திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்ப இருக்கிறோம். அத்துடன் அவர்கள் விவசாயிகளின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அதன் பிறகே எங்கள் வாக்கு யாருக்கு என்பதை நாங்கள் முடிவு செய்வோம் என்றார்.

   மின் கோபுரத் திட்டத்தை எதிர்த்ததற்காக சிறைக்குச் சென்றவரும், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவருமான கி.வே.பொன்னையன் கூறும்போது, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மட்டுமே விவசாயத்துக்கு எதிரான 12 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த விவசாயிகளுக்கு நீராதாரத் திட்டங்களை விட, தற்போது நிலத்தைக் காத்துக்கொள்வதே பெரும் சிக்கலாக மாறியுள்ளது. எனவேதான் நாங்கள் எங்களது கோரிக்கைகளை அரசியலாக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.


   கெயில், மின் கோபுரத் திட்டம், பாரத் பெட்ரோலிய குழாய் பதிப்புத் திட்டம் மட்டுமின்றி 8 வழிச் சாலை, விமான நிலைய விரிவாக்கம் என்று மேலும் பல திட்டங்களால் பாதிக்கப்படுபவர்களையும் அணி திரட்டி, கோரிக்கைகளை விவாதப் பொருளாக்க இருக்கிறோம். விவசாயிகள் அரசியல் முக்கியத்துவம் பெறும் நேரம் தேர்தல் காலம் என்பதை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். அதேநேரம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் விவசாயிகளால்தான் ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ளது என்பதை அரசியல்வாதிகளும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai