கவனத்தை ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள்!

2019 மக்களவைத் தேர்தலில் கட்சிகளின் வெற்றி, தோல்வியைக் காட்டிலும் அதிமுக்கிய நபர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நாடே உற்று நோக்கிவருகிறது.
கவனத்தை ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள்!


2019 மக்களவைத் தேர்தலில் கட்சிகளின் வெற்றி, தோல்வியைக் காட்டிலும் அதிமுக்கிய நபர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நாடே உற்று நோக்கிவருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரின் தொகுதிகள் அதிகம் கவனம் பெற்றுள்ளன.
பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, பி.சி.கந்தூரி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோர் போட்டியிடவில்லை என்பது உறுதியாகிவிட்டது. அவர்கள்இப்போது எம்.பி.யாக உள்ள தொகுதிகள், அடுத்த கட்ட தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன.
முக்கியமாக, அத்வானியின் காந்திநகர் தொகுதி (குஜராத்) வேட்பாளராக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் பி.சி.கந்தூரியின் கர்வால் தொகுதிக்கு டி.எஸ்.ராவத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 75 வயதைக் கடந்த மூத்த தலைவர்களுக்கு பதிலாக அடுத்தகட்ட இளம் தலைவர்களுக்குப் பொறுப்புகளை வழங்குவது என்று பாஜக ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது. அத்வானிக்கு இப்போது 91 வயதாகிறது. கந்தூரியின் வயது 84.
கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் காந்திநகர் தொகுதி எம்.பி.யாக அத்வானி உள்ளார். ஒரு காலத்தில் அத்வானியின் தேர்தல் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பில் அமித் ஷா இருந்தார். இப்போது, அவரே அத்வானியின் தொகுதியில் வேட்பாளராகியுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர்களான கல்ராஜ் மிஸ்ரா, பகத் சிங் கோஷியாரிஆகியோர் ஏற்கெனவே மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம்இல்லை என்று அறிவித்துவிட்டனர்.
 மற்றொரு மூத்த தலைவரான முரளிமனோகர் ஜோஷி, கான்பூர் தொகுதிஎம்.பி.யாக உள்ளார். அவரது தொகுதிக்கு முதலாவது வேட்பாளர் பட்டியலில்வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எனினும், ஜோஷியும் வரும் மக்களவைத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூத்த தலைவர்களை ஒருங்கிணைத்து மார்க்கதர்ஷன் மண்டல் என்றவழிகாட்டுதல் குழுவை பாஜக அமைத்தது. அத்வானி, ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்தக் குழுவின் கூட்டம் ஒருமுறை கூட நடைபெற்றதில்லை.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அங்கு பெறும் வெற்றி மத்தியில் ஆட்சி அமைக்க பெரிதும் உதவும்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாராணசி தொகுதியில் மோடியும், அமேதியில் ராகுலும், ரேபரேலியில் சோனியாவும் மீண்டும் போட்டியிடுகின்றனர் என்பதால் மற்ற மாநிலங்களை காட்டிலும் இந்த மாநிலம் அதிக கவனம் ஈர்த்துள்ளது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வாராணசியில் தேர்தல் பிரசாரத்தில் மோடி ஈடுபட்டபோது, நான் இங்கு வரவில்லை. கங்கை நதி என்னை அழைத்து வந்தது என்றார். மக்களும் அவரை அந்தத் தேர்தலில் வெற்றி பெறச் செய்தனர்.

ராகுலுக்கு சவால் அளிக்கும்  ஸ்மிருதி இரானி
கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி 3.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமேதியில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் 1.07 லட்சம் வித்தியாசத்தில் வென்றார்.
அமேதியில் ராகுலை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஸ்மிருதி. அமேதி தொகுதியை வெறும் வாக்கு வங்கிக்காக மட்டுமே ராகுல் பயன்படுத்தி வருகிறார் என்று குற்றம்சாட்டி வருகிறார் ஸ்மிருதி. அமேதி மக்களுடன் ஸ்மிருதி அதிக நேரத்தையும் கடந்த 5 ஆண்டுகளாக செலவழித்து வருகிறார். மத்திய அமைச்சராக பல்வேறு நலத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இதனால், இந்த முறை ராகுலுக்கு கடும் சவாலாக ஸ்மிருதி இரானி விளங்குவார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ரேபரேலியில் 1999ஆம் ஆண்டு முதல் சோனியாவும், 2004ஆம் ஆண்டிலிருந்து அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் எம்.பி.யாக பதவி வகித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் கோட்டைகளாகத் திகழும் இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக முழு வீச்சில் களம் இறங்கியுள்ளது.
இதன் காரணமாகவே, தென்னிந்தியாவில் ராகுல் பாதுகாப்பான இரண்டாவது தொகுதியில் போட்டியிடுவார் என்ற பேச்சு எழுந்தது. கேரளத்தில் காசர்கோடு தொகுதி பெயரை அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியே செய்தியாளர்களிடம் வெளியிட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மகன் தொகுதியில் தாய்.. தாய் தொகுதியில் மகன்!
மகன் வருண் காந்திக்காக தான் கடந்த மக்களவைத் தேர்தலில் ஜெயித்த உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபிட் தொகுதியை விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளார் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி. வருண் காந்தி, கடந்த முறை சுல்தான்பூர் தொகுதியில் ஜெயித்தார்.


உத்தரப் பிரதேசத்தில் பலம் வாய்ந்த கட்சிகளான சமாஜவாதியும், பகுஜன் சமாஜும் இந்த முறை கூட்டணி அமைத்துள்ளதால் பாஜகவுக்கு இத்தேர்தல் கடும் சவால் அளிக்கும்.

தந்தை, மகன், மருமகள்...
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் தனது மகன் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்தது குறித்து கடந்த மாதம் முலாயம் சிங் யாதவ் அதிருப்தி தெரிவித்தார். அப்போது, உத்தரப் பிரதேசத்தில் நமது சமாஜவாதி கட்சி மிகவும் வலுவாக உள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் பகுஜன் சமாஜ் கட்சியுடன் அகிலேஷ் யாதவ் கூட்டணி வைத்தார் என்பது தெரியவில்லை. மேலும், அவர்களுக்கு பாதி இடங்களை ஒதுக்கியுள்ளார். இந்த முடிவுகள் எனக்கு கடும் அதிருப்தியை அளிக்கிறது. நாமே நமது கட்சியை பலவீனப்படுத்துவது போன்ற செயல்கள் நிகழ்கின்றனஎன்று முலாயம் கருத்துத் தெரிவித்தார்.
மேலும், கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் பேசிய முலாயம் சிங், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். ஒவ்வொருவரையும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்லும் மோடியின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன் என்றார்.
அகிலேஷ் யாதவ் மோடிக்கு எதிராக தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில் முலாயம் சிங், மோடியைப் பாராட்டியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கடந்த முறையில் ஆஸம்கரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் முலாயம் சிங். இந்த முறை அந்தத் தொகுதியில் அவரது மகன் அகிலேஷ் யாதவ் போட்டியிட முடிவு செய்துள்ளார். முலாயம் சிங்கின் அரசியல் வாழ்வு அஸ்தமித்து, கட்சியும் அதிகாரமும் முற்றிலுமாக அடுத்த தலைமுறைக்குச் சென்றுவிட்டது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
அதிருப்தியும் முணுமுணுப்பும் தலைமை வரை பாய்ந்துள்ள நிலையில், கணவர் அகிலேஷ் முன்பு போட்டியிட்ட கன்னெளஜ் தொகுதியில் மனைவி டிம்பிள் யாதவ் இப்போது போட்டியிடுகிறார். மைன்புரியில் முலாயம் சிங்கும் போட்டியிடுகின்றனர். 
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் லக்னௌ தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக காங்கிரஸ் களத்தில் இறக்கப்பட்டிருப்பவர் ஜிதின் பிரசாத். இவர் கட்சி மேலிடத்துக்கு ரொம்ப வேண்டியவர். இருந்தும், அதிருப்தியில் இருந்து வந்த ஜிதின் பாஜகவுக்கு தாவிவிடுவார், என்று பேசப்பட்டவர். அவரை சமாதானப்படுத்தி, லக்னெளவில் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக நிற்க வைத்துள்ளது காங்கிரஸ்.
ஹிந்தி திரைப்பட உலகில் கனவுக் கன்னி என்று புகழ்பெற்று மூன்று தலைமுறை கதாநாயகர்களோடு நடித்து பெரும் வலம் வந்தவர் தென்னாட்டைச் சேர்ந்த நடிகை ஹேமமாலினி. பாஜக எம்.பி.க்களில் செயலாக இருப்பவர்களில் ஒருவர் என்று நற்பெயர் இவருக்கு உண்டு. இவர் மீண்டும் மதுரா தொகுதியில் களமிறக்கப்பட்டிருக்கிறார். 
மற்றொரு தென்னிந்திய நடிகை ஜெயப்ரதா, பாஜக சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் போட்டியிடுகிறார். சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஆஸம்கானை எதிர்த்து ஜெயப்ரதாவை நிறுத்தியுள்ளது பாஜக. இங்கு பிரசாரமும் போட்டியும் பெரும் பரபரப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com