Enable Javscript for better performance
வடஆற்காடு, தென்ஆற்காடு மாவட்டங்களில் கோலோச்சிய இரு கட்சிகள்!- Dinamani

சுடச்சுட

    

    வடஆற்காடு, தென்ஆற்காடு மாவட்டங்களில் கோலோச்சிய இரு கட்சிகள்!

    By - என்.தமிழ்ச்செல்வன்  |   Published on : 28th March 2019 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    manikkavel


    தெற்காசியாவில் திராவிடமொழி பேசுபவர்களால் தனிநாடு கோரி எழுப்பப்பட்ட முழக்கம் திராவிட நாடு. 1952-இல் சென்னை மாகாண சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை என்றாலும் திராவிட நாடு கோரிக்கையை சட்டப்பேரவையில் பேசுவோம் என உறுதியளித்து ஒப்பந்தம் செய்த கட்சிகளுக்கும், சுயேச்சைகளுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட இரு கட்சிகள் காமன்வீல் கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஆகும்.
    காமன் வீல் கட்சி... வடஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த காமன்வீல் கட்சி, வன்னியர் சமூக நலனுக்காக 1951-இல் தொடங்கப்பட்டது. இந்தக் கட்சியைத் தொடங்கியவர் வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.அழகப்ப மாணிக்கவேல் நாயக்கர். 1896 டிசம்பர் 14-இல் பிறந்த இவர், சட்டம் பயின்றவர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து பின்னர் சுயராஜ்ய கட்சியில் இணைந்து செயல்பட்ட மாணிக்கவேல் நாயக்கர், 1926  முதல் 1937 வரை சென்னை மாகாண பேரவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்.
    இவர் தொடங்கிய காமன்வீல் கட்சி, 1952 பேரவைத் தேர்தலில் திமுக ஆதரவுடன் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றது. இக்கட்சி தொடக்கத்தில் த.பிரகாசம் தலைமையிலான எதிர்க் கட்சி கூட்டணிக்கு ஆதரவளித்தது. தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியான காங்கிரஸுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது முதல்வரான ராஜாஜி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தனது பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளில் காமன்லீக் கட்சியும் ஒன்று.
    அரசுக்கு அளித்த ஆதரவுக்காக மாணிக்கவேலுநாயக்கர் வருவாய்த்துறை அமைச்சர் பதவி அளிக்கப் பட்டது. 1954-இல் காமராஜ் முதல்வரான போது அவருக்கு கூடுதல் பொறுப்பாக விற்பனைவரித் துறை அளிக்கப்பட்டது. அதே ஆண்டு காமன்வீல் கட்சியைக் கலைத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைத்த மாணிக்கவேல்நாயக்கர், 1957 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று காமராஜரின் இரண்டாவது அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 1962 வரை அமைச்சராக பணியாற்றிய இவர், 1962-64-இல் மாநிலங்களவை உறுப்பினராகவும், 1964-70 வரை தமிழக சட்ட மேலவைத் தலைவராகவும் பதவி வகித்தார். 1996 ஜூலை 25-இல் மாணிக்கவேல்நாயக்கர் உயிரிழந்தார்.
    தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி... காமன்வீல் கட்சியைப் போன்றே திராவிட நாடு கோரிக்கைக்காக திமுகவுக்கு ஆதரவளித்து, 1952 பேரவை தேர்தலில் போட்டியிட்ட மற்றொரு கட்சி தமிழர் உழைப்பாளர் கட்சி. தென்ஆற்காடு, சேலம் மாவட்ட வன்னியர்களால் தொடங்கப்பட்ட இக்கட்சிக்கு தலைமை வகித்தவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி. சுதந்திரப் போராட்டத் தியாகியான இவர், 1918 செப்டம்பர் 16-இல் பிறந்தவர். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 1952 பேரவைத் தேர்தலில் 19 இடங்களிலும், மக்களவைத் தேர்தலில் 4 இடங்களிலும் வெற்றி கண்டது.
    காமன்வீல் கட்சியைப் போன்றே தொடக்கத்தில் த.பிரகாசம் தலைமையிலான எதிர்கட்சி கூட்டணியில் இருந்த தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, பின்னர் முதல்வர் ராஜாஜி தலைமையிலான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தது. 1954-இல் காமராஜர் முதல்வரான பிறகு அவரது அமைச்சரவையில் ராமசாமி படையாச்சிக்கு உள்ளாட்சித்துறை அளிக்கப்பட்டது. அதே ஆண்டு அவர், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை காங்கிரஸுடன் இணைத்துவிட்டார்.
    1962 சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரஸில் இருந்து விலகிய ராமசாமி படையாச்சி, மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். இக்கட்சி தேர்தலில் சுதந்திரா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் ராமசாமி படையாச்சி உள்பட அவரது கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். 1967-இல் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தது. அதற்கு திமுக மறுத்துவிட்டது. சிறிது காலத்துக்கு பிறகு மீண்டும் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்த ராமசாமி படையாச்சி, 1980, 1984 மக்களவைத் தேர்தல்களில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 1992 ஏப்ரல் 3-ஆம் தேதி ராமசாமி படையாச்சி உயிரிழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai