இந்தியாவுக்கான அரசமைப்பு சட்டம்!

இந்தியர்கள் அமைத்த இடைக்கால அரசு 1946-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி பொறுப்பேற்றது
இந்தியாவுக்கான அரசமைப்பு சட்டம்!

இந்தியர்கள் அமைத்த இடைக்கால அரசு 1946-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி பொறுப்பேற்றது. சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற அனைவரும் ஒருபுறம் பெருமிதம் கொண்டிருந்தாலும், சுதந்திரப் போராட்டப் பணி இன்னும் முற்றிலுமாக நிறைவுபெறவில்லை என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். காரணம், இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் நிறைவடையாமல் இருந்தன.
 சுதந்திரத்துக்குப் பிறகு, தலைவர்களின் கவனம் அனைத்தும் அரசமைப்புச் சட்டம் மீது திரும்பியது. இந்தியாவுக்கென தனி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை 1930-களின் மத்தியில் எழுந்தது.
 அரசமைப்புச் சட்டத்துக்காக இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஜவாஹர்லால் நேரு 1938-ஆம் ஆண்டு குரலெழுப்பினார். 1942-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்த கிரிப்ஸ் குழுவும், 1945-ஆம் ஆண்டு அறிவித்த வேவல் திட்டமும், இந்தியாவுக்கென தனி அரசமைப்புச் சட்டம் இயற்றப்படும் என உறுதியளித்தன. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் தனித்தனியாக அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என இந்திய முஸ்லிம் லீக் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், கிரிப்ஸ் குழுவும், வேவல் திட்டமும் இதற்கு மறுப்பு தெரிவித்தன.
 இறுதியாக 1946-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கேபினட் குழு இந்தியாவுக்கென தனி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க, அரசமைப்பு சாசன சபை (அல்லது அரசியல் நிர்ணய சபை) அமைக்கப்படும் என உறுதியளித்தது. அதன்படி, 1946-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசமைப்பு சாசன சபைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும், இடைக்கால அரசின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் தேர்தல் நடத்தப்பட்டது. மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்த இத்தேர்தல் மூலம், 296 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாட்டில் அப்போதிருந்த சுதேச அரசுகளுக்கு 93 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
 சாசன சபை அமைக்கப்பட்டது
 இதையடுத்து, 1946-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசமைப்பு சாசன சபை அமைக்கப்பட்டது. இதில், ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பாரசீகர்கள், இந்திய கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என அனைத்துப் பிரிவு மக்களும் இடம்பெற்றிருந்தனர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முக்கியத் தலைவர்கள் பெரும்பாலானோர், அரசமைப்பு சாசன சபையில் இடம்பெற்றிருந்தனர். ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய மகாத்மா காந்தி, அரசமைப்பு சாசன சபையில் இடம்பெறவில்லை. அரசியல் நிகழ்வுகளிலிருந்து அவர் ஒதுங்கியே இருந்தார். அப்போதைய சுதேச அரசுகளும் சாசன சபையில் பங்கேற்பதைத் தவிர்த்தன.

தலைவராக ராஜேந்திர பிரசாத்...
 அரசமைப்பு சாசன சபையின் முதல் கூட்டம் 1946-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கு சாசன சபை உறுப்பினர்களில் மூத்தவரான சச்சிதானந்த சின்ஹா தலைமை வகித்தார். தனி பாகிஸ்தான் கோரிக்கையை எழுப்பி, இந்திய முஸ்லிம் லீக் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மொத்தம் 211 உறுப்பினர்கள் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
 பின்னர், அரசமைப்பு சாசன சபையின் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹெச்.சி.முகர்ஜி, வி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் துணைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சாசன சபையின் சட்ட ஆலோசகராக பி.என்.ராவ் நியமிக்கப்பட்டார். சாசன சபையின் அதிகாரப்பூர்வ முத்திரையாக "யானை' சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
 குறிக்கோள் தீர்மானம்
 இடைக்கால அரசின் பிரதமரான ஜவாஹர்லால் நேரு, அரசமைப்புச் சட்டம் உருவாக்குவதற்கான "குறிக்கோள் தீர்மானத்தை', 1946-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி சாசன சபையில் சமர்ப்பித்தார். இதில், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான அடிப்படைக் கொள்கைகளும், அதற்கான நடைமுறைகளும் இடம்பெற்றிருந்தன. இத்தீர்மானத்தை, 1947-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி அரசமைப்பு சாசன சபை ஒருமனதாக நிறைவேற்றியது. குறிக்கோள் தீர்மானத்தின் திருத்தப்பட்ட வடிவமே, பின்னாளில் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக இணைக்கப்பட்டது.
 குறிக்கோள் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்
 • சுதந்திர, இறையாண்மை கொண்ட இந்திய அரசின் அதிகாரங்கள் யாவும் நாட்டு மக்களிடம் இருந்தே பெறப்படும்.
 • நாட்டு மக்களுக்கு நீதி (சமூகம், பொருளாதாரம், அரசியல்), சமத்துவம், கருத்து தெரிவிக்கும் உரிமை, வழிபாட்டு உரிமை உள்ளிட்டவை உறுதிசெய்யப்படும்.
 • சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டோரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
 • நாட்டின் ஒருமைப்பாடு உறுதிபடுத்தப்படும். நாட்டின் எல்லைக்குள்பட்ட நிலம், ஆறு, கடல் உள்ளிட்டவற்றின் உரிமை காக்கப்படும்.
 *உலக அமைதியைப் பேணுவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும்.
 இந்திய சுதந்திரச் சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்
 இந்தியாவின் அப்போதைய வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் வழங்கிய திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, 1947-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி "இந்திய சுதந்திரச் சட்டம்', பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இந்தியா-பாகிஸ்தான் என்ற இருநாடுகள் தனித்தனியே சுதந்திரம் பெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், அரசமைப்பு சாசன சபையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவையாவன:
 *அரசமைப்பு சாசன சபையிலிருந்து இந்திய முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளியேறினர். இதனால், சாசன சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 389லிருந்து 299-ஆகக் குறைந்தது. இதில், சுதேச அரசுகளுக்கு 70 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
 *அரசமைப்பு சாசன சபையே நாடாளுமன்றமாகவும் செயல்பட ஆரம்பித்தது. இதனால், நாட்டின் நிர்வாகத்தைக் கண்காணிப்பது, நாட்டுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவது என இருபணிகளையும், சாசன சபை உறுப்பினர்கள் மேற்கொண்டனர். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான கூட்டம் நடைபெறும்போது, அதற்கு ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். அதே வேளையில், நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும்போது, அதற்கு ஜி.வி.மாவ்லாங்கர் தலைமை வகித்தார். 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடர்ந்தது.
 • பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இயற்றப்பட்ட எந்தச் சட்டத்தையும் நீக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும், புதிய சட்டங்களை உருவாக்கிக் கொள்ளவும் அரசமைப்பு சாசன சபைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
 வரைவுக் குழு
 அனைத்துக் குழுக்களைக் காட்டிலும் அரசியல் சாசன வரைவுக் குழுவே மிக முக்கியப் பணியை ஆற்றியது. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ஆம் தேதி, பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் வரைவுக் குழு அமைக்கப்பட்டது.
 அரசமைப்புச் சட்டம் உருவான விதம்
 அனைத்துக் குழுக்களும் அளித்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் முதல் வரைவு அரசமைப்புச் சட்டத்தை 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரைவுக் குழு வெளியிட்டது. இதன்மீது நாட்டு மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க 8 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. பொது மக்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் திருத்தங்களை மேற்கொண்டு, இரண்டாவது வரைவு அரசமைப்புச் சட்டம் 1948-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.
 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இறுதி வரைவு அறிக்கையை 1948-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி அரசமைப்பு சாசன சபையில் அம்பேத்கர் தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பிரிவுகளின் மீதும் 1949-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி வரை சாசன சபை உறுப்பினர்கள் விரிவான விவாதம் நடத்தினர். இதில் மொத்தம் 7,653 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பிறகு, இறுதி விவாதம் அதே ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி தொடங்கியது. அனைத்து விவாதங்களும் நிறைவுபெற்று, 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி வரைவு அரசமைப்புச் சட்டத்துக்கு சாசன சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்து, அதில் கையெழுத்திட்டனர்.
 அரசியல் சாசன சபையானது, 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாள்களில் இந்தியாவுக்கென தனி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. இதற்காக 11 முறை கூடி, அதன் உறுப்பினர்கள் அனைவரும் தீவிர விவாதம் நடத்தினர்.
 இதில், அதிகபட்சமாக ஏழாவது கூட்டம், 2 மாதங்கள் (1948-ஆம் ஆண்டு நவம்பர் 4 முதல் 1949-ஆம் ஆண்டு ஜனவரி 8 வரை) நடைபெற்றது. அதன் ஆறாவது கூட்டம் குறைந்தபட்சமாக ஒரு நாள் (1948-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி) மட்டுமே நடைபெற்றது.
 சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களை ஆராய்ந்து, இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை அவர்கள் உருவாக்கினர். 1950-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி, அரசமைப்பு சாசன சபையின் இறுதிக்கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, புதிய அரசமைப்புச் சட்டத்தின்படி 1952-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்று, புதிய அரசு பதவியேற்கும்வரை நாடாளுமன்றமாக அச்சபை தொடர்ந்து செயல்பட்டது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க, அம்பேத்கர் ஆற்றிய பெரும்பணிகளின் காரணமாக அவர், "இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை' என புகழப்படுகிறார்.

அரசமைப்புச் சட்டம் நடைமுறை
 அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த குடியுரிமை, தேர்தல், நாடாளுமன்ற நடைமுறைகள் உள்ளிட்ட சில பிரிவுகள் 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதியே நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, 1950-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி இந்திய அரசமைப்புச் சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. இந்த நாளை "குடியரசு தினம்' ஆக ஆண்டுதோறும் நாம் கொண்டாடி வருகிறோம்.
 அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் 395 பிரிவுகளும், 8 அட்டவணைகளும் இடம்பெற்றிருந்தன. காலமாற்றத்துக்கு ஏற்ப கடந்த 69 ஆண்டுகளில், 103 முறை அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களின் வாழ்க்கை முறை தொடர்ந்து மாறி வருவதால், அவர்களுக்கான சட்டங்களும் மாற்றப்பட வேண்டிய சூழல் உருவாகி வருகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது!
 அரசமைப்பு சாசன சபை மேற்கொண்ட மற்ற பணிகள்
 • காமன்வெல்த் அமைப்பில் இந்தியா இணைவதை 1949-ஆம் ஆண்டு மே மாதம் அங்கீகரித்தது.
 * இந்திய தேசியக் கொடியை 1947-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி அங்கீகரித்தது.
 * இந்திய தேசிய கீதத்தையும், தேசியப் பாடலையும் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி அங்கீகரித்தது.
 * இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாதை 1950-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி தேர்ந்தெடுத்தது.
 சிறப்புக் குறிப்புகள்
 *அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க மொத்தம் ரூ.64 லட்சம் செலவானது.
 * அரசமைப்புச் சட்டம் முழுவதையும் பிரேம் பெஹாரி நரைன் ரைஸடா என்பவர் அழகிய எழுத்துகளுடன் கையால் எழுதினார்.
 • கையால் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில், சாந்திநிகேதன் பல்கலைக்கழக மாணவர்களான நந்த் லால் போஸ், பியோஹர் ராம் மனோகர் சின்ஹா ஆகியோர் சித்திர வேலைப்பாடுகளும், படங்களும் வரைந்தனர்.
 - சுரேந்தர் ரவி
 முக்கியக் குழுக்கள்
 அரசமைப்புச் சட்டத்தை விரைந்து உருவாக்கும் நோக்கில், பல்வேறு பணிகளை மேற்கொள்ள குழுக்களும், துணைக்குழுக்களும் அமைக்கப்பட்டன.
 அவற்றில் முக்கியமான குழுக்களும், அவற்றின் தலைவர்களும்:
 மத்திய ஆட்சிக் குழு      ------------------                                     ஜவாஹர்லால் நேரு
 மத்திய அரசமைப்புச் சட்டக் குழு ------------------                ஜவாஹர்லால் நேரு
 மாகாண அரசமைப்புச் சட்டக் குழு ----------------               வல்லபபாய் படேல்
 வரைவுக் குழு -----------------------------------------------------------பி.ஆர்.அம்பேத்கர்
 அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் மீதான
 ஆலோசனைக் குழு -------------------------------------------------வல்லபபாய் படேல்
 விதிகள் செயல்பாட்டுக் குழு------------------------------------ ராஜேந்திர பிரசாத்
 சுதேச அரசுகள் குழு------------------------------------------------ ஜவாஹர்லால் நேரு
 வழிகாட்டும் குழு---------------------------------------------------- ராஜேந்திர பிரசாத்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com